கூட்டுக் குடும்பம்...
காட்சிப்பொருளாய் காணக்கூடாத வரலாற்றுச் சின்னமாய்
நீட்சிபெற்று தனித்து நிற்கும் நிகழ்கால மக்களே...!
சில மணித்துளித்துளிகள் செவிமடுத்துக் கேளுங்கள்...
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாம்
தேடியும் கிடைக்குமா அப்படியொரு வாழ்வியல்...?
நிலையற்றுச் சுழலும் காலச் சக்கரத்தில்
விலைமதிப்பும் அறியாது
பிழையன்றிப் பிறழாது
உலை மட்டும் ஒன்றாம்
கூட்டுக் குடும்பந்தனில்...!
அல்லவை ஒழித்து
நல்லவை கற்பிக்க
உள்ளவை உள்ளவாறே உரைக்கும்
ஈரிணைக் கோடுகளாய் தாயும் தந்தையும்...
முன்னவை வித்திட்ட
முடிவிலி முகாந்திரங்களை
என்னவை சேர்த்திட்ட
எதுகையும் மோனையுமாய் பாட்டியும் பாட்டனும்...
முத்தவள் கரம்பிடித்து எமைக் கொண்டுசெல்ல
இளையவன் கரம்பற்றி நானும் அழைத்துவர
இடைவிடாது தொடர்கிறது இன்றளவும்...
பெரியப்பா பெரியம்மா!, சித்தி சித்தப்பா!
மற்றேனைய இளையோரும் மூத்தோரும்
தலைமுறைகளாய்த் உறவுகள் தொடர்ந்திட
ஒன்றியே வாழ்வோம் கூட்டுக் குடும்பத்தனில்...