திருவலிதாயம் பாடி, சென்னை – பாடல் 2
திருஞானசம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை ,
003 திருவலிதாயம் (பாடி, சென்னை) – பாடல் 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(தேமா தேமா புளிமா புளிமா புளிமாங்காய் புளிமாங்காய்)
படையி லங்கு கரமெட் டுடையான்
..படிறாகக் கலனேந்திக்
கடையி லங்கு மனையிற் பலிகொண்
.டுணுங்கள்வன் னுறைகோயில்
மடையி லங்கு பொழிலின் னிழல்வாய்
..மதுவீசும் வலிதாயம்
அடைய நின்ற வடியார்க் கடையா
..வினையல்லற் றுயர்தானே! 2
பொழிப்புரை:
படைக்கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலியேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடைய மாட்டா.