அன்பை சொல்லிக்கொடுத்து பண்புடன் வளர்வோம்
அன்பை சொல்லிக்கொடுத்து பண்புடன் வளர்வோம்
நம் வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கேள்வி
அடிக்கடி வருவதுண்டு.இன்று நாம் சந்திக்கும் ஒவ்வொரு முதியவர்களும் தங்கள் குழந்தைகள்
வெளிநாட்டில் வசிக்கிறார்கள் தங்களிடம் அன்புடன் இருக்கிறார்கள் அடிக்கடி பேசுகிறார்கள்
எங்களை நன்றாக வைத்திருக்கிறார்கள் எனக் கூறியபடி அவர்கள் தங்களுக்கு வேண்டிவற்றை
தாங்களே வாங்கி கொண்டு வீட்டை சுத்தமாக வைத்துக்கொண்டு என்றும் குழந்தைகள் நன்றாக
இருக்கட்டும் என வாழ்த்திக்கொண்டே தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
பேரன் பேத்தி பிறக்கும் பொழுது இவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கும்
அவர்களுக்கு வீட்டையும், பிறந்த குழந்தையையும் பராமரிக்கும் பொறுப்பை விட்டுவிட்டு தங்கள்
வேலையை குழந்தைகள் செய்யும் வேளையிலும் தங்கள் வருத்தங்களைக் கூறாமல் என் குழந்தை
எனக் கூறி அவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.
இன்று இந்த பரபரப்பான வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு வீட்டிலும் முதியவர்கள் தனியாக
இருப்பதைக் காண்கிறோம்.
முதியோர் காப்பகங்கள் வருடம் தோறும் நிறைய வருகின்றது.இது மிகவும் லாபத்தையும் அதைக்
கட்டுபவர்களுக்கு கொடுக்கிறது.எல்லாமே பணத்தை வைத்து அளக்கப்படுகிறது. எனக்கு படிப்பிற்கு
நீ என்ன செலவு செய்தாய் அதற்கு மேல் உன்னை காப்பாற்ற நான் செலவு செய்கிறேன்.நான்
இல்லத்திற்கு பணம் அனுப்பியுள்ளேன் என்ற வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது. அவர்கள்
எதிர்பார்ப்பது அன்பைத்தான் என்று நம் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை.ஒரு முறை
தொலைபேசியில் பேசிவிட்டு பணமும் அனுப்பிவிட்டால் தங்களது கடமை
முடித்ததென்று பலர் நினைக்கிறார்கள்.இனிவரும் குழந்தைகள் கூட்டுக் குடும்பமாக இருந்து அன்பை
அறியவேண்டும்.நான் எனது என்ற வட்டத்தில் இருந்து வெளிவர வேண்டும். .
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப்
பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான
மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி
வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள்
சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின்
சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே
வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.
அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல்
திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ
பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்''
என்றாள்.
"வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும்
என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று உள் மனம் கேட்க, அவன் தன்
தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.
மேலே கூறப்பட்ட கதையில் உள்ள சாராம்சத்தை நாம் அறிந்து கொண்டு நமது முதியோர்களை
அன்புடன் நடத்தி அவர்களுக்கு வேண்டியவற்றை நாமே கவனித்து அவர்களது முதுமையை
மகிழ்ச்சியுடன் கழிக்க வழி வகுப்போம். நமக்கு எல்லோருக்கும் இம்முதுமை காலம் வரும்
என்பதை மனதில் கொண்டு நமது குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இருப்போம்