அப்பாவின் பரிசு

அப்பாவின் பரிசு

அப்பா இறந்தபிறகு ட்ரெஷரியிலிருந்து ஒருநாள் அழைத்திருந்தார்கள்
அவர்க் கணக்கில் எட்டுலட்சம் ரூபாய்க்கு காசோலை தயாராய் இருப்பதாகச் சொல்லி.

மேலும் அப்பாவின் பென்ஷின் புக்கையும் பேங் பாஸ்புக்குடன்
அம்மாவையும் அழைத்துவர
ஆணை.

குடும்ப வியாபாரத்தில் ஏற்பட்ட இடைக்கால இடர்களால் தொழிற்சாலையும் தோட்டங்களும்
கடனுக்குக் கைக்கொடுக்கவில்லை.
கைவிட்டுப் போயின. அப்பாவின் இறப்பிற்குப்பிறகு வரவேண்டிய
வரவுகளும் காற்றில் வரைந்த
கணிதம்போல் தப்புக் கணக்காகின.
சொந்தங்கள் நண்பர்கள் என்றிருந்த அத்தனைப் பேரில் ஒருவர்க்கூட உடன் இல்லை.

வெறும் நம்பிக்கையை வைத்துக் கொண்டு கொடுக்கவேண்டிய இடங்களுக்கு ஓடி ஒளிய மனமில்லாமல்
பதில் சொல்லிக் கொண்டிருந்த காலம்.

எங்கக் குடும்பத்திற்கும் இப்படியொரு காலம் விதிவிலக்கில்லை என்பதை
சோர்வும் தளர்வும் தாண்டிய குளிர்நீரில் நனைந்துபோலொரு நிலை சதா சர்வகாலமும் உணர்த்திக்கொண்டே இருந்தது.

அம்மாவை அழைத்துக் கொண்டு நானும் மனைவியும் கருவூலத்திற்குச் சென்றிருந்தோம். மனதிற்குள் ஒரு ஆசுவாசம் இந்த எட்டு இலட்சத்தில்
அம்மாவின் குடும்பநகை அடகிருக்கும் வங்கிக்கும், இன்ன பிற‌‌கடன் காரர்களுக்கும். வட்டியை அடைத்துவிடலாம். மீதமிருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு
குழந்தைகளுக்கான போர்டிங் கட்டணத்தை அடைத்துவிடலாமென
மனம் மூச்சுட்கொண்டு ஆறுதல் பெற்றது.

நாங்கக் சென்று சேர்ந்த ஒருமணி நேரத்தில் அக்காவும் அவள் கணவரும்
அவருடைய அம்மா அப்பா என அனைவரும் வந்து நின்றனர்.

எக்காளமும் பேச்சும் அதிகநேரம் அங்கே சென்றுக் கொண்டிருக்க நானும் அம்மாவும் அக்காவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அவள் ஏதும் பேசாமல் நின்ற இடம்
விலகாமல் அங்கேயே இருந்தாள்.
என்னிடமோ அம்மாவிடமோ ஏதும் பேசவில்லை. கண்களை ஏறெடுத்தும்
கூட ஒருநொடி எங்களைப் பார்த்திருக்கவில்லை .

கடைசியாய் அவர்களே ஒரு முடிவெடுத்தவர்களாய் ஆளுக்குப் பாதி என்றார்கள்.

அம்மாவின் கண்கள் அக்காக் கணவனைத் திரும்பிப் பார்த்து
தீக்கனல் போல் பார்வையால்
தின்றாள்.

பின் என் பக்கம் கண்ணீருடன் திரும்பினாள். அக்காக் கல்யாணத்தின்போது 100 பவுனிற்கு பதிலாக 150 பவுன் திடீரென
உயர்த்திக் கேட்கவும் திருமணத்தை நிறுத்தும் மனமில்லாமல் ஒப்புக் கொண்டார்கள் அம்மாவும் அப்பாவும்.
உடனே ஐம்பது பவுனிற்கான காசுக் கொடுத்தாகவேண்டிய நிலையில்
என் பேரிலுள்ள 12 செண்ட் மனைப்பட்டாவை விற்க ஒப்பந்தம் தயார் செய்துவிட்டு என்னை அப்பாக்களும்
அத்தைகளும் பங்காளி மக்களும் அழைத்தார்கள். கல்யாணத்திற்கு முதல் நாள் அது . அக்கா கல்யாணத்தின் போது எனக்கு சர்வேய் எக்சாம் .

பேசினார்கள்

இந்த இடத்தைவிற்றுவிட்டால் இனி உனக்கு தோட்டங்களும் பழைய வீடும் தான் மனைப்பட்டா இல்லை சரிதானே
என்றார்கள்.

நான் பரவாயில்லை என்னை நான் எப்படியோப் போற்றிக் கொள்கிறேன்
அவளுக்கு என்ன வேணுமோ செய்துக் கொடுத்திடுங்க என்றது மட்டுமே

அன்று கருவூல அலுவலகம் முன்பு
அம்மாவின் கலங்கிய கண்களில்
நினைவுகளாக நிழலாடியதை அம்மா அதன் பிறகான ஒருநாள் சொல்லியிருந்தாள்.

பின்பு ஒருவழியாக காசோலையை அம்மா கையொப்பமிட்டுப் பெற்றுக் கொண்டப் பிறகு எல்லோரும் அவரவர்கள் வந்த வண்டியில்
வங்கிக்குச் சென்றிருந்தோம்.

காரில் என் அருகில் அமர்ந்திருந்த என் மனைவி என் மேற்கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள். பரவாயில்லை பார்த்துக்கலாம் என்பதைப்போலொரு
திடப்பார்வையோடு.

வங்கிக்குச் சென்றதும் மேலாளரை சந்தித்து சில முன்னேற்பாடுகளைச் செய்து அவர் அப்பாவிற்கு வேண்டியவர் என்பதால் பேசி அன்றே பணம் கையிற்கு வரும்படி செய்திருந்தேன்.

அதே இடத்தில் அக்கா வீட்டினர் கேட்டதுபோல் பங்கு பணத்தை எண்ணி
அவர்களுக்குப் பைசல் செய்தாள்
மனைவி. பின் அவளே அழைத்தாள் மரியாதைக்கு சரி இதுக்குப்பறம் நாம பார்க்கப்போகிறோமா என்ன எல்லாரும்
ஒண்ணா சாப்பிட்டுப் போலாமே
என்றாள் அசையாமலிருக்கும் என் அக்காவைப் பார்த்து அப்போதும் அவள் பேசுவதாயில்லை.

அவர்கள் ப்ளூ ஹில்ஸ் ரெஸ்ட்டாரண்ட் போனார்கள் . நன்றாக வாழ்ந்த சமயம்
அப்பா என்னையும் அக்காவையும் எத்தனையோ முறை ப்ளூஹில்ஸ் அழைத்துச் சென்றிருப்பார். அது நினைவிற்கு வந்ததும் மனதுப் பிசகியது.

அம்மாவிற்கு காஃபி ஹவுஸில் NV செக்‌ஷனில் மீன் சாப்பிடுவதுப் பிடிக்கும்

நான் அம்மாவையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு காஃபி ஹவ்ஸிற்குச் சென்று அம்மாவிற்கும் மனைவிக்கும் ப்ரியமானதை ஆர்டர் செய்துவிட்டு. எனக்கொரு காப்பிமட்டும் சொல்லிக் கொண்டேன்.

நீங்க ஏதும் சாப்பிடலையா என்றாள் மனைவி‌.

அவள் குரல் காதில் ஏதோ அறைப்பட்டதுபோல் கேட்டுக் கொண்டிருக்க

இந்த நாலு லட்சங்களை வைத்து
யார் யாருக்கு எதை அடைப்பது ?
என்றத் தெளிவில்லாமல்
இதயமும் நாடியும் துடிப்பால்
பிசிரடிக்க,

மீதிக் கடன்களுக்கான சமாளிப்புகளை
எங்கே எனத் தேடிக் கொண்டிருந்தேன்.

காலம் வேகச்சென்றுவிட்டது .
இன்று எங்களிடம் எல்லாம் இருக்கிறது.

எல்லோரும் மீண்டும் வருகிறார்கள்
அன்பென்றுவிட்டு எதையோ சொல்கிறார்கள்.

பகிர்கிறார்கள், பேச்சால் முழம் கட்டி பூமழைப் பொழிகிறார்கள்.

அப்பாவின் அறைக்குச் சென்றேன்
மனைவி என்னைத் தொடர்ந்தாள்.

இவங்கமேல எல்லாம் உங்களுக்குக் கோவமே வர்லியா எனக் கேட்டாள்.

அப்பாவின் பீரோவைத் திறந்து அவர் எனக்காய் பரிசளித்த தீபாவளி சட்டைகளை எடுக்கிறேன். மெதுவாய் அதைத் தழுவியபடியே மனைவியிடம்
சொல்கிறேன்.

ஒருக் குடும்பத்தில் எல்லோரும் எல்லாவற்றையும் தனக்கே வேண்டுமென ஒருக் கூட்டம் இருக்கும். அது யாராய் வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் தங்கள் தேவைக்காய் அடுத்திருக்கிறவர்களை எப்படி வேண்டுமானாலும் துன்புறுத்தலாம்.
ஆனால் ஏதோ ஒரு கணத்தில்
அதே குடும்பத்தைச் சேர்ந்த யாரவது ஒருவரேனும் இவற்றையெல்லாம் மன்னிக்கும் குணத்துடன் இருப்பது அவசியமாகித்தானே போகிறது ? .
ஏனென்றால் இறக்கும்வரை
வேண்டானெனும் சொந்தம் இல்லைதானே இது .
அப்படி எல்லாத்தையும்
மன்னிக்கிற அந்த ஒரு ஆள்
நானாயிட்டுப் போயிடறேனே.
என்றுவிட்டு

அவர்க் கட்டிலின்மேல் மெதுவாய் சாய்கிறேன்.

அருகே இன்னும் கொஞ்சமாய் அடுத்து வந்து அமர்ந்தவளின் விழிகளில், சந்தோஷ உழியின் கண்ணீர் ஊற்றுப் பெருகித் தாரைத் தாரையாய்.

முற்றும்

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (19-Nov-23, 2:35 pm)
Tanglish : appavin parisu
பார்வை : 41

மேலே