என்னையும் மீறி
என்னையும் மீறி
(இந்த கதையின் “கரு” வடகிழக்கு சிறு கதை ஒன்றில் இருந்து எடுத்தது)
அரசாங்க மேலதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன்.
இதற்கு காரணம் சொல்லுங்கள் அரசு மருத்துவரான நீங்கள் “குற்றவாளி” என கருதப்பட்ட ஒருவரை அழைத்து செல்லும்போது எப்படி “இன்குலாப் ஜிந்தாபாத்” கோஷமிடலாம்?
இவர்களுக்கு என்ன பதில் சொல்வது, சொன்னால்தான் புரிந்து கொள்வார்களா? அந்த நிமிடத்தில் நான் ஒரு கோழையை போல தலை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தேன்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த காரசாரமான விவாதங்களுக்கு பிறகு என்னை இந்த முறை மன்னித்து விடுவதாகவும் இதே தவறு மற்றொரு முறை நேர்ந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து அனுப்பபட்டேன்.
நீங்கள் இந்த “எட்டு வருடங்களாக குற்றசாட்டுக்கள்” எதுவும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த காரணத்திற்காக இந்த மன்னிப்பு உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது, இதை வெளியே வரும்போது மருத்துவ மனை டீன் என் காதில் சொன்னார்.
சிரிப்பு வந்தது எனக்கு, கடமை தவறாத டாக்டர், ஆனால் நான் செய்தது மனதளவில் சரியான செயலாக இருந்தும் அதை என்னால் வெளியில் சொல்ல முடியாத கோழைதானே நான்.
“வசந்தி அக்காவின்” முகம் மனதில் வந்து நின்றது. பரவாயில்லை தம்பி உனக்கு உன் வேலை முக்கியம், அதை இழந்துடாதே, அவளை காவல் துறை இழுத்து செல்லும்போது கூட என்னிடம் சொல்லி விட்டு சென்றாளே..! அவளை அழைத்து சென்ற காவல்துறையின் முன் நான் என்ன செய்ய முடியும்? “ஈங்குலாப் ஜிந்தாபாத்” இந்த ஒற்றை வார்த்தை என்னையும் அறியாமல் வேகமாய் வெளிவந்ததை தவிர..
அன்றும் சரி இன்றும் சரி வசந்தி அக்கா மாறவே இல்லை, மாறியது எங்களை போன்ற மருத்துவ மாணவர்கள் தான்.
முதல் வருடம் அரசு மருத்துவ கல்லூரியில் வகுப்பில் சேர்ந்தவுடன் அறிமுகமானதும் பிடித்து போன முகம் வசந்தி அக்காவின் முகம்.
கல்லூரியை விட்டு வெளியில் வந்து அந்த வீதியின் முக்கில் சிறிய “டீக்கடை” ஒன்றை நடத்தி வந்தாள் வசந்தி அக்கா, கையில் ஒரு கை குழந்தையுடன்.
“இந்தா உனக்கு டீ, அந்த தம்பிக்கு ஒரு டீயை அப்ப்படியே கொடுத்திடேன், அன்பாய் கேட்கும் அந்த முகம்.
“சீனியர், ஜூனியர் எந்த பாகுபாடும் அங்கு இருக்காது, பத்து பேர் சுற்றி நின்றாலும் சிரித்த முகத்தோடு கொஞ்சம் நில்லுங்க தம்பிகளா, வேகமாய் செயல்படும் அவளது கை, உடன் ஒரு சிறுவன், உறவு பையனாய் இருக்க வேண்டும்.
சாப்பிட்டு முடித்து விட்டு அக்கா காசு “கடகடவென வாயிலேயே கணக்கு போட்டு இவ்வளவு ஆச்சு என்பாள். கொடுத்தால்தான் உண்டு, அப்புறம் தர்றேன், சொல்லி விட்டு செல்பவர்களும் உண்டு. மறந்துடாத” ஒற்றை வார்த்தையில் நிறுத்தி கொள்வாள்.
மறந்து போனதும் உண்டு. மறந்து போனது போல் மறு நாள் சாப்பிட்டு விட்டு அன்றைய கணக்கு சொல்லி பணம் கொடுத்துவிட்டு வந்தவர்களும் உண்டு. தெரிந்தாலும் அவள் வாய் திறந்து கேட்கமாட்டாள்.
அதே நேரத்தில் யாராய் இருந்தாலும் தப்பான வழியில் செல்லும் மாணவர்களை உரிமையாக திட்டவும் செய்வாள். கல்லூரியில் ரகளை செய்யும் மாணவர்கள் கூட அவளை கண்டால் அப்படியே அடங்கி விடுவார்கள். அவள் சொல்லும் வார்த்தைகளை தலை குனிந்தபடி ஏற்று கொள்வார்கள்.
கண்காணாத கிராமத்தில் இருந்து வந்து கல்லூரியில் பயந்து போன நிலையில் முதல் வருட மாணவனாக சேர்ந்திருந்த என்னை தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தியவள். “இங்க பாரு மருத்துவனா ஆகணும்னு தான சேர்ந்தே”, அப்புறம் எதுக்கு பயம்? எதுவா இருந்தாலும் சந்திச்சு பழகு, இப்படி ஊக்கப்படுத்தியவள்.
நான்கு வருட படிப்பு முடியும் வரை அவள் கடைதான் எங்களுக்கு உலகம், எனக்கு மட்டுமல்ல, விடுதியில் தங்கியிருந்தாலும் அவள் கடைக்கு வந்து “டீ சாப்பிட்டு உட்கார்ந்து அரட்டை அடித்து விட்டு சென்றால்தான் எங்கள் எல்லோருக்குமே நிம்மதி
ஆயிற்று நான்கு வருடங்கள் ஓடிய பின் மேல் படிப்பிற்காக சென்னைக்கு சென்று சேர்ந்த பின்னால் ஒரு வருடம் கழித்து வசந்தி அக்காவை பார்க்கலாம் என்று வந்தபோது அந்த இடமே முற்றிலும் மாறிப்போயிருந்தது அருகில் எல்லாம் பெரிய பெரிய கட்டிடங்கள் வந்திருந்தது. ஏகப்பட்ட ஹோட்டல்கள், கடைகள்.
அக்காவின் கடை வெறிச்சென்றிருந்தது, அதிகமான ஓட்டம் இல்லாதது அவர்களின் வறுமையில் தெரிந்தது. அப்பொழுதும் அக்காவின் முகம் மலர்ந்தே இருந்தது, “வா சென்னியப்பா” எப்படி இருக்கறே? சூடாய் அவள் போட்டு கொடுத்த டீ எனக்கு பழைய கதைகள் எல்லாம் சொல்லியது.
மீண்டும் மூன்று மாதம் கழித்து வந்தபோது அவள் கடையை இடித்து கொண்டிருந்ததை கண்டவுடன் மனம் பதைபதைக்க அவளை விசாரிக்க எங்கே தங்கியிருக்கிறாள் என்று கேட்டு அங்கு விரைந்தேன்.
“ஏழ்மையை ஒழித்து நகரை அழகு படுத்த எங்களை போல சின்ன சின்ன கடைகளை எல்லாம் அகற்ற ஏற்பாடுகள் செய்யபோகிறார்களாம்.என் கடையை விலை பேசி வாங்கி விட்டார்கள். கடை இருந்தும் என்ன செய்யப்போகிறேன்? புன்னகையுடன் அவள் சொன்னாலும் அவள் “மனதின் வேக்காடு” எனக்கு உறுத்தியது.
அவளை மீண்டும் சந்தித்தபோது பட்ட மேற்படிப்பு முடித்து தற்காலிக மருத்துவராக வேலையில் சேர்ந்திருந்தேன். எங்கோ வேகமாய் சென்று கொண்டிருந்தாள். கையில் ஒரு பை, உடைகளின் கிழிசல்கள் வறுமையை காட்டியது. ரேசனில் அரிசி வாங்குவதற்காக செல்வதாக கூறினாள்
கொஞ்சம் சிரமபட்டாலும் அடையாளம் கண்டு கொண்டாள், “சென்னியப்பா” வறுமையில் சுருங்கிய முகம் சற்று விரிந்தது. அக்கா எப்படியிருக்கிறாய்? என்று என்னால் வாய் விட்டு கேட்க முடியவில்லை.
படிப்பெல்லாம் முடிஞ்சுதா?
மெளனமாய் தலையாட்டி எனது கிராமத்தின் அருகில் இருக்கும் நகரத்தில் ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்திருப்பதாக சொன்னேன். சந்தோசப்பட்டாள். அவள் கை என் தலையில் வைத்து ஆசிர்வாதம் செய்தாள்.
அதற்கு பின்….!
பகல் இரண்டு மணி இருக்கலாம் அரசு பொது மருத்துவமனையில், அறுவை சிகிச்சை ஒன்றை முடித்து விட்டு அப்பொழுதுதான் சாப்பிட உட்கார்ந்திருந்தேன். சாப்பிடும்போதே அங்கிருந்து வெளி வாசலை ஜன்னல் வழியாக பார்க்க முடியும். ஒரு பெண்ணை அவசர அவசரமாய் ஆம்புலன்சில் இருந்து இறக்கி உள்ளே கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதற்கு பின்னால் நிறைய கூட்டம் ஆண்களும், பெண்களுமாய் கோசமிட்டபடி. போலீஸ் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியபடி இருந்தார்கள்.
ஐந்து நிமிடம் ஆகியிருக்கலாம், டாக்டர்… நர்சின் குரல், திரும்பி பார்த்தேன், அர்ஜெண்ட் கேஸ், தலையில காயம் சொன்னாள்.
மனதுக்குள் சின்ன எரிச்சல் வந்தது, கிட்டத்தட்ட காலை ஆறு மணிக்கு அறுவை சிகிச்சை செய்ய வந்தவன், இடைவிடாத கேசுகள், தொடர்ந்து முடித்து இப்பொழுதுதான் சாப்பிட உட்கார்ந்தேன், அதற்குள்..
மனதை சமாதானப்படுத்தியபடியே வாஷ் பேசினில் கையை கழுவி விட்டு ஸ்டாண்டில் தொங்கவிட்டிருந்த கோட்டை எடுத்து மாட்டிக்கொண்டு நர்சுடன் நடந்தேன்.
ஜன்னலில் பார்த்த அதே நோயாளிதான். சோதனை செய்தேன், மண்டையின் நெற்றி பொட்டில் நல்ல காயம், யாரோ குறி பார்த்து அடித்தது போல, அதுவுமில்லாமல் வலது காலில் எலும்பும் உடைந்திருந்தது. கீழே விழுந்து அடிபட்டது போல் தெரியவில்லை, இரத்தம் உறைந்து அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் வீங்கியீருந்தது.
சோதித்து விட்டு நர்சிடம் “நாளை ஆபரேசன்” செய்தாக வேண்டும், வேண்டிய ஏற்பாடுகளை செய்து விடுங்கள், சொல்லிக்கொண்டே வேகமாக அங்கிருந்து வெளியே வந்தேன், மனதுக்குள் அந்த நோயாளி பெண் அருகில் இருந்தவனை எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. யாராய் இருக்கும்? சட்டென நோயாளியின் முகம் அந்த இரத்த அபிசேகத்தையும் மீறி தெரிந்தது, அட நம்ம வசந்தி அக்கா..
மீண்டும் உள்ளே ஓடினேன், நர்ஸ் நான் திரும்பி அந்த நோயாளியிடம் ஓடி சென்றதை எதிர்பார்க்கவில்லை. அவளும் கூடவே ஓடி வந்தாள். சிஸ்டர், இவங்களுக்கு வேணுங்கற “ட்ரீட்மெண்டை” இப்பவே ஆரம்பிச்சிருங்க, அருகில் இருந்த அந்த பையனை அழைத்தேன், இருபத்தைந்து வயதிருக்கலாம், நீ குமரேசன்தானே?
ஆமாங்க டாக்டர், அவன் முகத்தில் பெருமிதம், தன்னை இவ்வளவு பேர் மத்தியில் “டாக்டர்” பெயரை குறிப்பிட்டு கூப்பிடுகிறாரே என்று.
இவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா டாக்டர்? நர்ஸ் கேட்டாள்.
ஆமாம், தலையாட்டினேன். அதற்குள் டாக்டருக்கு தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தனி கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியிருந்தது. தலைக்காயம் ஆற ஆரம்பித்திருந்தது. காலை ஊன்றி நடப்பதற்கு பயிற்சியும் கொடுத்தபடி இருந்தார்கள்.
தினமும் காலையில் வந்தவுடன் வசந்தி அக்காவை பார்த்து ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு செல்லும் வழக்கத்தை வைத்திருந்தேன். தன் பெண்ணை கூட இருந்த அந்த இளைஞனுக்கே மணமுடித்து வைத்து விட்டதாக சொன்னார்கள்.
ஏழ்மை அவர்களின் உருவத்தை மாற்றியிருந்தாலும் பேச்சிலும், செயலிலும் வைராக்கியத்தை காணமுடிந்தது.
சென்னியப்பா ஏழ்மையை ஒழிக்க அரசு முதலில் ஏழைகளை ஒழித்தாலே ஏழ்மை ஒழிந்து விடும் என நினைக்கிறது. என்ன செய்ய முடியும்? எப்பொழுது வேண்டுமானாலும் போலீஸ் என்னை கூட்டி போகலாம்
வசந்தி அக்காவின் பேச்சு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அன்று அத்தனை பேரிடமும் புன்னகையுடன் பேசிய முகமாக தெரியவில்லை. இறுகிய முகமும் சொல்லில் ஒரு ஆழமும், வார்த்தைகளை பிரயோகிப்பதில் நிதானத்தையும் பார்த்தேன். இடைவிடாத வறுமை அவளை ஒரு சமுதாய போராளியாக்கி விட்டதோ?
காலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த போது பரபரபரப்பாயிருந்தது நிறைய போலீஸ் நின்று கொண்டிருந்தது. டாக்டர் உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணறாங்க செவிலியர் சொன்னாள்.
கேள்விக்குறியுடன் நின்று கொண்டிருந்த காவல் அதிகாரியை பார்த்தேன்.
நீங்கள் அறுவை சிகிச்சை செய்த பெண்ணை கைது செய்து கொண்டு போக வேண்டும்.
அவர்களையா? ஒரு வாரம்தான் ஆகிறது, அதற்குள் எப்படி கூட்டி போக முடியும்?
மன்னிக்கவும், அவர்கள் மேல் ஏற்கனவே நான்கு வழக்குகள் இருக்கிறது, போன வாரம் இவர்கள் நடத்திய ஊர்வலத்தில் பெரிய கலவரம் நடந்திருக்கிறது. அதற்கு இவர்கள்தான் காரணம்.
“சாரி சார்” எனக்கு அரசியல் தேவையில்லை, என்னை பொறுத்தவரை அவர்கள் ஒரு நோயாளி அவ்வளவுதான். அவர்களை அழைத்து செல்ல தற்சமயம் முடியாது.
அவர்கள் மருத்துவ மேல் அதிகாரியை போய் பார்த்தார்கள். அவர் இவர்களுடனே வந்து “சென்னியப்பா” அவர்களை டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பி வை என்றார்.
சார்… இழுத்தேன், என்னை விட மிகுந்த சீனியர், அதிகாரி, அது மட்டுமல்ல அடுத்த பதவி உயர்வுக்கு மேலிடத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்.
என்னால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது, அவர்கள் வசந்தி அக்காவை மெல்ல நடத்தி கூட்டி செல்வதை பார்த்து கொண்டிருந்தேன்.
என்னை தாண்டும் போது நின்று என் முகத்தை பார்த்து கண்களால் சைகை காண்பித்தார். கவலைப்படாதே எனக்கு இது பழகி போன ஒன்று என்று காண்பிப்பது போல நிதானமாக காலை ஊன்றி ஊன்றி நடந்து சென்றார்.
வசந்தி அக்காவை காவல் துறை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வந்த போது அங்கிருந்த மக்கள் கூட்டம் “ஈங்குலாப் ஜிந்தாபாத்” கூவ ஆரம்பித்து விட்டது.
அவர்கள் பின்னாலேயே வந்த என்னாலும் அதற்கு மேல் தாளமுடியவில்லை “ஈங்குலாப் ஜிந்தாபாத்” சப்தமாய் கூவினேன்.
அதற்குத்தான் இத்தனை விசாரணைகள், கடைசியில் மன்னிப்பு, நானும் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். என்ன செய்வது? சராசரி மனிதன், ஊதியத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டுபவன்.
சட்டென நினைவுகளை உதறிவிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தேன்.