இல்லையே யானை தொடுவுண்ணின் மூடுங் கலம் - பழமொழி நானூறு 391

நேரிசை வெண்பா
(’ண்’ ‘ங்’ மெல்லின எதுகை)

வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப!மற் றில்லையே யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம். 391

- பழமொழி நானூறு

பொருளுரை:

மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே! தனது வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர் வாழ்கின்ற குடிமக்கட்கு அரசன் செம்மையான கோலையுடையவன் அல்லாதவிடத்து அவர்கள் செய்வது யாது? யானை தனது கரத்தால் தொட்டு அக்கலத்தை உருட்டி உண்ணின் அதனை மூடுங்கலம் வேறொன்றும் இல்லையாதல் போல!

கருத்து:

கொடுங்கோல் அரசனின் கீழுள்ள குடிகள் இறந்து படுதலே செய்யத்தக்க செயலாம்.

விளக்கம்:

'கோனிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை'

என்பாராதலின், உயிர்கள் இறந்தொழிவதேயன்றிச் செய்யத்தக்க செயல் ஒன்றுமில்லை. மிக்க வலிவுடைய யானையே உருட்டி உண்ணநினைப்பின் அதனை மறைக்க முடியாதவாறு போல குடிகள் செய்யத்தக்கது ஒன்றுமில்லையாம்.

'இல்லையே யானை தொடு எண்ணின் மூடுங் கலம்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-23, 7:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

மேலே