தனிமரம் காடாதல் இல் - பழமொழி நானூறு 390

இன்னிசை வெண்பா

எதிர்த்த பகையை இளைதாய போழ்தே
கதித்துக் களையின் முதிராதே தீர்த்து
நனிநயப்பச் செய்தவர் நண்பெல்லாந் தீரத்
தனிமரம் காடாதல் இல். 390

- பழமொழி நானூறு

பொருளுரை:

தம்பொருட்டு நின்ற பகைவர்களை பகைமை தோன்றிய காலத்தேயே அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும் (அவர்களிடம் கொண்ட நட்பினை) முற்ற அறுத்துத் தன்னை மிகவும் விரும்புமாறு செய்துகொண்டு விரைந்து வலியறச் செய்யின், தனியே ஒருமரம் நின்று காடாதல் இல்லையாதலின், அப்பகைமை முதிர்வதில்லை!

கருத்து:

அரசன் பகைமை தோன்றிய பொழுதே விரைந்து அதனைக் கொல்லக்கடவன் என்றது இது.

விளக்கம்:

இளைதாக முண்மரங் கொல்க' என்ற குறளின் விரிவு இது. தீரத் தீர்த்து என்றது, பகைவரினின்றும் அவரைப் பிரித்து அவர்தம்மை வலியிலராக்குதல்; 'பிரித்தலும்' என்றதே இது. நனி நயப்பச் செய்து என்பது அவரினின்றும் பிரித்துத் தம்மொடு படுத்தல். 'பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடைமை' என்பது இது. தனிமரம் காடாதல் இல்லாமை போல அவரும் அஞ்சத்தக்க பகைவராதல் இல்லையாம்.

'தனிமரம் காடாதல் இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-23, 7:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 184

மேலே