கேளாதே ஓடுக ஊரோடு மாறு - பழமொழி நானூறு 392
நேரிசை வெண்பா
செல்லற்க சேர்ந்தார் புலம்புறச் செல்லாது
நில்லற்க நீத்தார் நெறியொரீஇப் - பல்காலும்
நாடுக தான்கண்ட நுட்பத்தைக் கேளாதே
ஓடுக ஊரோடு மாறு. 392
- பழமொழி நானூறு
பொருளுரை:
தம்மை அடைக்கலமாக அடைந்தவர்கள் துன்புற்று அவலத்தில் வருந்திப் புலம்பும்படி தீயவழியில் செல்வதை விட்டு விடுங்கள்.
இருவகைப் பற்றினையும் நீத்தவர்கள் அறிவுறுத்திய நெறியிலிருந்து விலகிச் செல்லாதபடி, அவர்கள் காட்டிய நல்வழியை விட்டு விலகி நிற்காதீர்கள்.
தான் ஆராய்ந்து அறிந்த நுண்ணிய பொருளை பலமுறையும் பலவழிகளில் ஆராய்ந்து செய்யுங்கள்.
உலகத்தார் செல்கின்ற நெறியில் யாரையும் வினவுதலின்றிச் செல்லுங்கள்.
கருத்து:
1. தம்மை அடைக்கலமாக அடைந்தாரைத் துன்புறுத்தலாகாது.
2. துறவிகள் அறிவுறுத்திய நெறியில் ஒழுகல் வேண்டும்.
3. தான்கண்ட நுட்பத்தைப் பலகாலும் ஆராய்க.
4. உலகத்தோடு ஒத்து வாழ்.
விளக்கம்:
நீத்தார் அறிவுறுத்திய நெறியாவது இல்லற துறவற நெறியில் நின்று இம்மை, மறுமை இன்பங்களைத் தவறாது அடைதற்கு அவராணையாகக் கூறிய நூல்களாம்.
தம்மை அடைக்கலமாக அடைந்தார் துன்புறும் நெறியில் ஒழுகுதல் பாவங்களுள் தலையாயது என்பார் செல்லற்க என்றும்,
நீத்தார் அறிவுறுத்திய நெறியில் செல்லவில்லையென்றால் இம்மை மறுமை இரண்டினும் துன்பமெய்தி எற்று எற்று என்று இரங்குவராதலின் 'நெறி ஒரீஇ நில்லற்க' என்றும்,
ஆராயுந் தோறும் இன்பம் இடையறாது ஈண்டுதலோடு, மேலும் பல நுட்பங்கள் தோன்றுதலில் 'பல்காலும் நாடுக' என்றும்,
புத்தேளுலகத்தும் இவ்வுலகத்தும் ஒப்புரவு போல் சிறந்தது ஒன்றின்மையின் அதனை வினவுதல் செய்யாது விரைந்து செய்க என்பார் 'கேளாதே ஓடுக' என்றுங் கூறினார்.