பயிலார் பயின்றது வானகம் ஆகி விடும் - பழமொழி நானூறு 393

நேரிசை வெண்பா

ஓதநீர் வேலி உலகத்தார் அந்நெறி
காதலர் என்ப தறிந்தலால் - யாதொன்றும்
கானக நாட! பயிலார் பயின்றது
வானகம் ஆகி விடும். 393

- பழமொழி நானூறு

பொருளுரை:

காடுகளையுடைய முல்லை நாடனே! தீயதாயினும் பழகிய நெறி வானுலகத்தை யொப்ப இன்பம் பயந்து பின்னர் நீங்குதற்கு அரிதாகி விடுமாதலால்,

ஒளி பொருந்திய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்தில் உள்ளவர்கள் தாம் மேற்கொண்டு ஒழுகுகின்ற அந்நெறியை விரும்புகின்றார்கள் என்பதை அறிந்தன்றி யாதொரு நெறியின் கண்ணும் பழகுதலிலர் அறிவுடையார்.

கருத்து:

அறிவுடையார் உலகொப்பிய நெறியை மேற்கொண்டு ஒழுகுவார்கள்.

விளக்கம்:

பழகப் பழகத் தீயநெறியும் நன்னெறி யாகிவிடும்; ஆதலால், உலகத்தார் ஒப்பிய நெறியை அறிந்தே அறிவுடையோர் மேற்கொள்வர்.

'பயின்றது வானகம் ஆகிவிடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Dec-23, 8:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே