கல்லறை

கல்லறை....
07 / 12 / 2023
பள்ளியறையில் விதையாகி
கருவறையில் உருவாகி
வகுப்பறையில் சிலையாகி
உலகறையில் விளையாடி
கல்லறையில் புதைந்துபோகும்
நிலையற்ற இவ்வாழ்வில்
கல்லறை ஒரு போதிமரம்.
கருவறையில் கண்திறந்தோம்
ஊனக்கண் திறந்தோம்
கண்முடி கல்லறையில்
மற்றவரை கிடத்தும்போது
ஞானக்கண் திறக்கும் - நமக்கு
மூன்றாம் கண் திறக்கும்.
அத்தனைத் தத்துவங்களும்
அத்தனை சமத்துவமும்
பூஜ்யத்தில் தொடங்கி
பூஜ்யமாய் முடியும்
அற்ப வாழ்க்கையெனும்
அறிவுக் கண் திறக்கும்
அகம்பாவம் ஆணவம்
சல்லிசல்லியாய்
பொடியாகி சமாதியாகும்
எந்தப் பள்ளியும்
சொல்லித்தராத
அனுபவ பாடத்தை
அள்ளித் தரும்
பல்கலை கழகம்தான்
கல்லறை.
இறந்தவன் பாடம் எடுக்கும்
வினோத பள்ளியறைதான்
கல்லறை
இதில் பட்டம் பெற்றவர்க்கு
சிவலோக பதவிதான்.
வாழ்வின் உச்சநிலை
பதவிதான்.
கல்லறை கல்லூரியில்
பாடம் படிப்போம்
வாழ்க்கை தத்துவத்தை
புரிந்து நடப்போம்.

( சிங்கப்பூர் பொழில் பண்பலையில்
ஒலிபரப்பான கவிதை )

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (12-Dec-23, 5:55 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : kallarai
பார்வை : 79

மேலே