இது நியாயமா

இது நியாயமா?
24 / 12 / 2023
ஒரு பானைச் சோற்றுக்கு
ஒரு சோறு பதம் - நீயோ
நூறு சோறு பதம் பார்த்து
ஊட்டிவிட்டாயே எனக்கு - ஐயகோ
வெறும் அரிசியை
வாய்கரிசியாய் உன் வாயில்
போடவைத்து விட்டாயே...

சனி நீராடு என்று
என்தலையில்
எண்ணெய்வைத்து
சீகைக்காய் தேய்த்து
வெந்நீரால் குளிப்பாட்டினாயே - அம்மா
உச்சந்தலையில்
எண்ணெய்வைத்து
கசப்பு தேய்த்து
குடநீரில் குளிப்பாட்ட
வைத்துவிட்டாயே...

மூக்கடைத்து கொண்டால்
' விக்ஸ் ' தடவி தூங்கும்வரை
தலை பிடித்துவிடுவாயே
உன்நாசிகள் இரண்டிலும்
பஞ்சை வைத்து
அடைக்க செய்துவிட்டாயே..
ஜில்லென்ற உன்தலை
பிடித்துவிடுகிறேன்.
எழுந்து வருவாயா?

நாலுகால் கட்டிலில்
உன்மடிமீது
என் தலைகோதி
தூங்க வைப்பாயே
காலில்லா கட்டிலில்
தூங்கிப்போன உன்னை
காடுவரை தூக்கி
போக வைத்துவிட்டாயே...

என் கழுத்தில் மாலையுடன்
பார்ப்பதற்கு நீ
போகாத கோயிலில்லை
பாக்காத நாட்களில்லை
உன் கழுத்தில் மாலையிட்டு
கடைசியாய் அழகு பார்க்க
வைத்துவிட்டாயே...

நான் வெளியில்
போகும்போதெல்லாம்
சில்லறை காசுகளை - என்
ஜோபியில் வைத்து
மெல்ல புன்னகைப்பாயே - அம்மா
ஒற்றைக் காசை
உன் நெற்றியில் வைத்து
என் புன்னகையை
கவர்ந்து சென்றுவிட்டாயே...

நடக்கும் பாதையெங்கும்
மலர் தூவி கடைசிவரை
வாழவைப்பேன் என்று
அன்றொருநாள்
சொல்லி இருந்தேன் - இன்றோ
உன் கடைசியாத்திரையில்
வீதியெங்கும் மலர்த்தூவி
உன் பாதம் படாமல்
காடுவரை தூக்கிப்போக
வைத்துவிட்டாயே....

தாலாட்டுப் பாடி
உன் நெஞ்சில் அணைத்து
என்னை தூங்கவைப்பாயே
ஒப்பாரி பாடி
என் நெஞ்சில் அடித்துகொண்டு
உன் துக்கத்தை
பாட வைத்துவிட்டாயே...

மூச்சு வாங்கவாங்க
உழைத்து என்னை
உயர வைத்துவிட்டு - உன்
மூச்சை விட்டு எனக்கு
பெரும் இழப்பை தந்து
என்னை மூச்சு வாங்க
வைத்துவிட்டாயே...அம்மா
இது நியாயமா?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (25-Dec-23, 3:52 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ithu niyayama
பார்வை : 96

மேலே