ஈண்டிய கற்றேயும் தேயாது சொல் - பழமொழி நானூறு 394

நேரிசை வெண்பா

கெடுவல் எனப்பட்ட கண்ணும் தனக்கோர்
வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை
முற்றுநீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கற்றேயும் தேயாது சொல். 394

- பழமொழி நானூறு

பொருளுரை:

பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் முழுவதும் சூழப்பட்ட நீரை உடைய கடலால் வரையறுக்கப்பட்ட பூமியில் தொக்க மலைகள் தேய்வடையும்; பழிச்சொல் மாறுதலில்லை.

ஆகையால், (இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை எய்தாதொழியின்) யான் கெடுவேன் என்று கருதப்பட்ட இடத்தும், தனக்கு ஒரு சிறிதும் பழியைப் பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவனும் விரும்புதல் வேண்டும்.

கருத்து:

தான் அழிய வரினும் பழியொடு பட்டவைகளைச் செய்ய வேண்டாம்.

விளக்கம்:

மாறாது கிடத்தலால் பழியை வடு என்றார்.

நில்லாத உடம்பை ஒழித்து நிலையுடைய பழியை நீக்குக என்பார் 'வேண்டும்' என்றார்.

'கெடுவல் எனப்பட்ட கண்ணும்' என்பது வடுவல்ல செய்தல் வேண்டும் என்பதை வலியுறுத்திற்று.

'கல் தேயும் சொல் தேயாது' என்பது இச்செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-23, 6:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே