கட்டுரைக் களஞ்சியம் கட்டுரைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இராஇரவி நூல் விமர்சனம் கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு டிசம்பர் 2023

கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்)
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி
நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார்,
ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)



வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017.
பக்கங்கள் : 206 விலை : ரூ.200

*****

கவிஞர் என்றே பெரிதாய் அறியப்பட்டவர் கவிஞர் இரா.இரவி அவர்கள். அவருக்குக் கட்டுரை எழுதும் கலையும் கைவந்திருப்பதற்கு இந்நூல் நல்ல சான்று. இது அவரது 31ஆவது நூல். கட்டுரை வரிசையில் முதல் நூல். மிகுந்த கவனத்தோடும் கருத்தோடும் தொகுத்திருக்கிறார்.

தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகள் குறித்த கட்டுரைகள் எதிர்காலச் சந்ததியர்க்குப் பாடமாக வேண்டியவை. ‘நல்லோரை நாடு நினைவில் வைத்துப் போற்றும்’ என்பதைப் புலப்படுத்தும் வகையில் சிறந்த ஆளுமைகளான கக்கன், கலாம், குன்றக்குடி அடிகளார், மு.வ. இறையன்பு, ஞானசம்பந்தம், நர்த்தகி நட்ராஜ், பா. விஜய். வானதி ராமனாதன். டி.எம்.எஸ்., மணிமொழியனார். ஞானசம்பந்தன் ஆகியோரையும் வள்ளுவப் பெருந்தகையையும் போற்றிப் புகழ்ந்து எழுதியிருக்கிற கட்டுரைகள் நல்ல பதிவு.

கதராடை அணிந்து வரவில்லை என்பதற்காக கவர்னர் மாளிகைக்கு வந்த தனது குழந்தைகளைத் திருப்பி அனுப்பிவிட்ட தேசப்பற்றாளர் மட்டுமல்ல, கதராடை நேசருமான கக்கன் பண்புநலன்கள் பலவற்றின் கொள்கலம் என கவிஞர் ரவி கக்கன்ஜி அவர்களை ஒரு கவிதையிலும் பாடி வைத்திருக்கிறார்.

டாக்டர் மு.வ. அவர்கள் மிகச்சிறந்த கல்வியாளர், படைப்பாளர், வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றி படிப்படியாக உயர்ந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உச்சம் தொட்டவர் அவர். திரு.வி.க. மீது குரு என்ற முறையில் அளப்பற்ற மதிப்பு கொண்டிருந்தவர். பேரறிஞர் அண்ணா, மு.வ. அவர்களின் வேண்டுகோளின் பேரில்தான் சென்னை ஷெனாய் நகரில் உள்ள பூங்காவுக்கு திரு.வி.க. பெயர் சூட்டப்பட்டது.

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சுதந்திரப் போராட்டத்திலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கலந்து கொண்டவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும், பட்டிமன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அவர். மதுரைக்கு மாண்பு சேர்த்தவர்கள் - திருக்குறள் மணிமொழியனார். அதுபோல் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் அவர்கள் குறித்த கட்டுரையில் அறியவேண்டிய அரிய செய்திகள் பல உள்ளன.

டாக்டர் அப்துல்கலாம் அவர்களை எல்லோர்க்கும் தெரியும். அவருக்கு நமது இரா. இரவியை நன்றாகத் தெரியும். மதுரையில் கலாம் சுப்பிரமணியம் என்னும் நண்பர் ஒருவரின் நட்பு குறித்தும் கலாம் பற்றிய கட்டுரையில் எழுதியுள்ள பெருந்தன்மை போற்றுதற்குரியது.

பேராசிரியர் மோகன் அவர்களும் மதுரையின் மாண்புகளில் ஒருவர். அவர் குறித்து எழுதாவிட்டால் நூல் நிறைவுறாது. அவர் குறித்து எழுதும்போது கவிதை உறவுக்குத் தொடர்ந்து கட்டுரைகள் அனுப்பிய செய்தியைக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. மோகன் அவர்களின் ரவியின் கவிதைகள் குறித்து கவிதை உறவு இதழில் கட்டுரை வடித்துள்ளார்.

டாக்டர் வெ.இறையன்பு அவர்கள் பதியாத இதயங்கள் இல்லை எனுமளவு எல்லோராலும் ஈர்க்கப்பட்டவர். எல்லோரையும் ஈர்த்தவர். அவரது வளர்ச்சி, உழைப்பு – இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும்.

வானதி இராமநாதன் எங்களின் பதிப்பாளர். எங்களை மதிப்பாளர். அவர் குறித்தும் சிறந்த கட்டுரை பல்வேறு இலக்கியக் கட்டுரைகளும் பாரதி, திருக்குறள் சிந்தனைகளும் முன்னேற்றக் கருத்துக்களும் கூடுதல் சிறப்பு. கட்டுரையிலும் கை தேர்ந்திருக்கிறார் கவிஞர் இரா.இரவி,

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (23-Dec-23, 1:50 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே