வீற்றிருப்பு
வீற்றிருப்பு (சிறுகதை)
பெரியப்பா சொன்ன அந்த வார்த்தை சிறுகாஞ்சொறிச் செடியைப் போல நிரஞ்சனின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
தந்தைவழி பாட்டி மருத்துவமனையில்
அனுமதிக்கப் பட்டதனால் அம்மாவும்
அப்பாவும் அவரைப் பார்க்கும் அவசரத்தில் இருந்தார்கள்.
நிரஞ்சன் வேதிப் பொறியியல் இரண்டாம் ஆண்டில் இருந்தான்
இதன் காரணமாக அவனுக்கு தன் தந்தைத் தாயுடன் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை.
தற்காலிகமாக பெரியம்மா வீட்டில் தங்கி கல்லூரி செல்லும் சூழலில் தள்ளப்பட்டிருந்தான். அவனுக்கு அதில் துளிகூட விருப்பம் இருக்கவில்லை.
.
பெரியம்மாவின் அன்பும் அமைதியுமே
அவனை பெரியம்மா வீட்டை சார்ந்த பிறரின் டாம்பீக வார்த்தைகளைப் பொருட்படுத்தவிடாமல் பொறுத்துப் போக செய்திருந்தது.
அண்ணன்கள் இருவரும் மிகவும் நல்லவர்கள். அன்பானவர்களும் கூட.
நிரஞ்சனை அரவணைத்தார்கள்.
அங்குச் சென்ற அன்றைய இராத்திரி
ஏதேதோ எண்ண ஆடல்களும், அவன் குடும்ப சூழல்களும் பெருநிழலாய் வந்து வந்து போயின.
பலநாளும் நிரஞ்சனின் அப்பா பெரியப்பாவின் உறவுக் காரர்களால்
அவமானப் படுத்தப்பட்ட இடம்.
நிரஞ்சனின் அப்பா மிகவும் பொறுமை நிறைந்தவர். செல்வம் இருந்தபோதும் இல்லாதபோதும் அவரிடம் நிரந்திரமாய்த் தென்பட்டது அவருடைய
தைரியமும் புன்னகையும் தான்.
அவரைச் சுற்றி நல்ல நண்பர்கள் ஏராளம் பேர்.
ஒருமுரை திருப்பதியில் வைத்து
நிரஞ்சனிடம் சிலதைச் சொல்லியிருந்தார்.
சிலர் பணத்தைப் பற்றியேப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
சிலர் அந்தஸ்த்தைப் பற்றியே
எண்ணிக் கொண்டிருப்பார்கள்
சிலர் கெளரவத்திற்குள்ளேயே
அடைந்தும் இறந்தும் போவார்கள்
இவர்களுக்கெல்லாம்
இழப்பைப் பற்றிய அறிவுடைமை இல்லை. அருமையும் தெரிவதில்லை.
நான் எதை இழந்தால் பெறமுடியாதோ அதை என்னிடம் தக்கவைத்துக்
கொண்டேன். அதுதான் என் குடும்பம் நீயும் உன் அக்காவும் அம்மாவும்.
எதை இழந்தால் நானோ என் சந்ததியோ பெற முடியுமோ அதை இழந்தேன்.
செல்வத்தை.
ஒரு மனிதனின் மிகப்பெரிய செல்வாக்கு, பலம் என்பது
அவனுடைய குடும்பம் தான்
அதை இழந்தவனால்
எல்லாக் கட்டத்திலும்
சரியாக வாழ்ந்துவிடமுடியாது
ஒரு பேரிழப்பு அது சார்ந்தவனை
வாட்டவில்லை என்றால்
அவன் ஒரு அனாதை.
நான் என்றாவது இறந்து
என் இன்மையை உனக்கு உணர்த்துவேன்.
என்று அப்பா சொன்னதை எல்லாம்
அசைப்போட்டபோது. நான் ஏன் இங்கு வந்தேன் என்பதைபோல் ஆகிற்று
நிரஞ்சனுக்கு. இப்போதெல்லாம்
அவனுக்கு அழவேண்டும் என்றுத் தோன்றும் போது கண்ணீர் சுரப்பதில்லை மாற்றாக தலைவலி
உருவெடுத்துப் பாடாய்ப் படுத்திவிடுகிறது. அப்படித்தான் இன்றும்
பிடிக்காத படுக்கையில் இரவைக் கடத்துவது என்பது வச்சுத் தண்டில்,
மின்னேகியில் மின் அலையைக் கடத்துவதைப் போன்று அலையின் வீச்சுகள் வேகமாய் இருந்தாலும் கடக்கும் நேரம் அதிகமாகும். அதை
நேர்க்கொள்வது கடினமாகும். அப்படித்தான் அந்தப் படுக்கைப் புரள்வு.
ஒருவழியாய் விடியற்காலை முதல் ஆளாய் எழுந்து குளித்து பூஜையரையில் சஷ்ட்டி சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒவ்வொருவராக எழுந்து அவரவர்களுடையக் காலைக் கடன் மற்றும் கடமைகளை முடித்து அடுத்த வேலையாய் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
சின்ன அண்ணன் நிரஞ்சனை அழைத்து
இந்தாடா செலவுக்கு வச்சிக்கோ என்று
ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை எடுத்துக் கொடுத்திருந்தான் . பெரியம்மா அவனுடைய டபரா அடுக்கில் வகை வகையாய் சாப்பாடு, பொறியல், குழம்பு, ரசம் தயிரு என வரிசாக்கிரமத்தில் அடுக்கிக் கொண்டிருந்தாள்
இதெல்லாமே பெரியப்பாவின் கண்களுக்கு முன்னாலேயே நடந்தேறிக் கொண்டிருந்தன. அன்றையநாள் அப்படிப் போயிற்று.
அந்த நாளின் இரவும் முந்தைய இரவைவிட கொடுமையாகவே நகர்ந்தது.
சமாளிக்க முடியாமல் சரி இன்றாவது ஏதேனும் ஒரு காரணம் சொல்லி
இங்கிருந்து கிளம்பி தினேஷ் வீட்டிற்குச் சென்றுவிடவேண்டும். தினேஷின் அப்பா நிரஞ்சனின் அப்பாவிற்கு
நெருங்கிய சிநேகிதன். அவனுடைய
அம்மாவும் நிரஞ்சனின் அம்மாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் . அத்தனை வசதி வாய்ப்பில்லாதவர்களாக இருந்தாலும்
வீட்டில் சிரிப்பும்சந்தோஷமும் கேலியும்
நகைச்சுவையுமென மகாலக்ஷ்மிக் கடாக்ஷம்.
நினைவோட்டத்தில் நேரம் நகருவதை கவனித்திருக்கவில்லை. சட்டென்று நிதானத்திற்குத் திரும்பியவன். சடசடவென கல்லூரிச் செல்லத் தயாரானான். கீழிறங்கிப் போனதும்
சொல்லிவிடவேண்டும் என்ற
நினைப்பு செவியடைத்தப்போதும்
தினமும் இவனுக்கு சாப்பாடுக் கட்டிக் கொடுத்து, செலவுக்குப் பணம் கொடுத்து துணி அலசிப்போட்டு
செஞ்சிகிட்டிருக்கிறது ஒரு பொழப்பா .
என்ற பெரியப்பாவின் குரல்
பிரங்ஞையின் பின் தலையை
ஓங்கி அறைந்தது. அதுவரை ஏதேதோ நினைவுகளால் அடைப்பட்டிருந்த செவிப்படர் அந்த வார்த்தையின்
அறைதல்களால் தெள்ளத் தெளிவாய்த் திறந்திருந்தது. மனதில் சைல் என்ற ஒரு நிசப்தத்துடன் வார்த்தைகள் ஏதும் வராமல் படியிறங்கி வந்தான் நிரஞ்சன்.
சின்ன அண்ணன் வாசற்படியருகேச் சென்றுவிட்டு திரும்பி வந்தவன்.
இன்றுமொரு ஐம்பது ரூபாய்த் தாளை
புறமெடுத்தான். உடனே இல்லை
வேண்டாண்ணா நேத்துக் கொடுத்தது இருக்கு அவசியப் பட்டால் வாங்கிக் கொள்கிறேன் என்றான் நிரஞ்சன்.
அண்ணனின் முகம் மெல்லென மாறிவிட்டது. அவன் ஏதோ உணர்ந்துவிட்டான்.
முகப்பறைக்குள் செல்லவே அவனுக்குக் கூசியது போன்றதொரு உணர்வு. பெரியம்மா நிரஞ்சனைப் பார்த்தவாரு
ஏதும் செய்யமுடியாதவள்போல் சொல்ல முடியாதவள் போல் அமர்ந்திருப்பதை
அவன் அறிவான் என்றாலும் கவனியாததைப் போல் தயாராகிக் கொண்டு.
முன்னரையில் நின்றபடியே பெரியம்மாவிடம் போயிட்டு வரேன் பெரியம்மா நான் தினேஷ் வீட்டுக்குப் போறேன் பெரியம்மா அவங்க வீட்ல
கோச்சிக்கிட்டாங்க நான் அங்க வர்லேன்னு அதனால் இனி அங்க போறேன். முடிஞ்சா இங்கயும் வரப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு
இவ்விடம் பெயர்ந்தான்.
நாள் முழுவதும் பெரியப்பாவின் அந்த வார்த்தைகள் உள்ளுக்குள் அரையடித்துக் கொண்டே இருந்தன.
யாரிடமும் அதைப் பற்றி மனம் திறக்காமல் அன்றிரவு தினேஷின்
சிறிய வீட்டில் சிரித்தும் மகிழ்ந்தும்
உண்டும் கழித்தும் சந்தோஷத்துடன்
மீத நாட்களைக் கடந்திருந்தான் நிரஞ்சன்.
ஒருவர் மனதிற்குள் ஒருவருடைய வீற்றிருப்பு என்பது அத்தனை சாத்தியமல்ல. ஒரு கொத்தமல்லி விதை முளைவிடும் நாளிற்காய் விதைகளை அரவணைத்துக் காத்திருக்கும் பொறுமையும், பருவமழைத் தப்பினால் விதைப் பாழாகுமே என்று
கருணையுணர்வுடன் வான் நோக்கிப்
பிரார்த்திக்கும் உழவனின் கண்ணீர்த் துளிகளைப் போல, விளைந்தால் அப்பயிறை தடவிக் கொடுக்கும்
வாஞ்சையைப் போல, பூக்களின்மேல் பிரியமுள்ள தளிர்க் கரங்கள் அவைகளை கசங்காமல் ஏந்திக்கொள்வதைப் போல,
கொஞ்சம் அன்பிருத்தலும் அவசியமாகிறது இல்லையா :) .
பைராகி