எந்நீர ராயினும் ஆக அவரவர் தந்நீர ராதல் தலை _ பழமொழி நானூறு 395

இன்னிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு, ‘ந்’ எதுகை)

மெ’ய்’ந்நீர ராகி விரியப் புகுவார்க்கும்
பொ’ய்’ந்நீர ராகிப் பொருளை முடிப்பார்க்கும்
எந்நீர ராயினும் ஆக அவரவர்
தந்நீர ராதல் தலை. 395

- பழமொழி நானூறு

பொருளுரை:

உண்மையான நீர்மையை உடையராகித் தமது குண மேம்பாடுகள் விரிந்து நிற்கக் காரியத்தின்கண் புகுகின்றவர்களுக்கும், பொய்ம்மையான நீர்மை உடையராகித் தாங் கருதிய பொருளை முடிப்பார்க்கும் அவர்கள் காரியம் முடிக்கும் பொருட்டு எந்த நீர்மை உடையராய் ஒழுகினும் ஒழுகுக,

ஏனைய காலங்களில் ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினராய் ஒழுகுதல் தலைசிறந்தது.

கருத்து:

ஒவ்வொருவரும் தத்தமக்குரிய ஒழுக்கினை விடாராய் ஒழுகுதலே தலைசிறந்தது.

விளக்கம்:

காரியம் முடிக்கும் பொருட்டு அதற்கேற்ற தன்மையராய் ஒழுகினும், ஏனைய காலங்களில் தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணேயே ஒழுகுதல் வேண்டும்.

காரியம் முடிக்கும் பொழுதும் தத்தமக்குரிய இயல்பினராய் ஒழுகுதலே தலை சிறந்தது. பொய்ந் நீரராகி ஒழுகுதல் அத்துணைச் சிறப்பின்று, இது கருதியே 'தந்நீரர் ஆதல் தலை'என்றார்.

'தந்நீரர் ஆதல் தலை' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Dec-23, 7:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 67

மேலே