மூரியைத் தீற்றிய புல் - பழமொழி நானூறு 396
இருவிகற்ப நேரிசை வெண்பா
தொடிமுன்கை நல்லாய்!அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான்கை வைத்தல் - கடிநெய்தல்
வேரி கமழும் விரிதிரைத் தண்சேர்ப்ப
மூரியைத் தீற்றிய புல். 396
- பழமொழி நானூறு
பொருளுரை:
வளையல் பொருந்திய முன்கையை உடைய நற்குணமுடைய பெண்ணே!
புதிதாக அலர்ந்த நெய்தல் நிலத்து நறுநாற்றம் கமழ்கின்ற விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல்நாடனே!
முயன்று வருந்திச் சேர்த்த திரண்ட பொருளை நல்ல குடும்பத்தில் பிறந்தவன் அல்லாதவனிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்வது கிழ எருதை உண்பித்த புல்லுக்கு ஒப்பானதாகும்.
கருத்து:
நல்ல குடும்பத்தில் பிறவாரிடம் பாதுகாப்புக்காக வைத்த பொருள் பயன் படுதலில்லை.
விளக்கம்:
கிழ எருதிற்கு உண்ணக் கொடுத்த புல் பயனற்று ஒழிதல் போல, நல்ல குடும்பத்தில் பிறவாதவரிடம் பாதுகாத்து வைக்கச் சொன்ன பொருளும் தமக்குப் பயனற்று ஒழியும் எனப்படுகிறது.
'மூரியைத் தீற்றிய புல்' என்பது பழமொழி.