நெய்பெய்த கலனே நெய் பெய்து விடும் - பழமொழி நானூறு 397

இருவிகற்ப நேரிசை வெண்பா
(’ய்’ இடையின ஆசு, ‘ந்’ எதுகை)

வேந்தன் மதித்துவப்பப் பட்டாரைக் கொண்டேனை
மாந்தரும் ஆங்கே மதித்துணர்வர் - ஆ'ய்'ந்த
நலமென் கதுப்பினாய் நாடின்நெய் பெய்த
கலனேநெய் பெய்து விடும். 397

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஆராய்ந்த நல்ல மெல்லிய கூந்தலை யுடையாய்!

ஏற்கெனவே நெய் இருந்த பாத்திரத்திலேயே மீண்டும் நெய் ஊற்றுவது அமைவதுபோல, அரசனால் நன்கு மதிக்கப்பட்டு அவனது மகிழ்ச்சிக்குப் பாத்திரமானவரை, அவ்வரசன் மதிக்கின்ற தன்மை ஒன்று கொண்டே மற்ற மக்களும் அவனைப் போன்றே மிக மதித்து உணர்வர்.

கருத்து:

அரசனால் மதிக்கப்பட்டார் ஏனையோராலும் மதிக்கப்படுவர்.

விளக்கம்:

'கொண்டு' என்றது பிறர் அவரது அருமை பெருமை அறியாராயினும், அரசன் மதிக்கின்ற தன்மை ஒன்றுகொண்டே எல்லோரும் புகழ்வர் என்பதாம். நெய்யிருந்த கலம் நெய் பெய்தற்கு அமையுமாறு போல, அரசரால் மதிக்கப்பட்டார் ஏனையோராலும் மதிக்கப்படுவர்.

'நெய் பெய்த கலனே நெய் பெய்து விடும்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Jan-24, 5:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே