காரிகையாய் வித்தின்றிச் சம்பிரதம் இல் - பழமொழி நானூறு 400
நேரிசை வெண்பா
(கை க’ய்’ – க மோனை, ‘ய்’ இடையின ஆசு)
நாணின்றி ஆகாது பெண்மை; நயமிகு
ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை; - பேணுங்கால்
கைத்தின்றி ஆகா கருமங்கள்; காரிகையாய்
வித்தின்றிச் சம்பிரதம் இல். 400
= பழமொழி நானூறு
பொருளுரை:
அழகுடைய பெண்ணே! பெண்மைக் குணம் நாணின்றி உண்டாகாது. ஆர்வத்துடன் கவனித்துப் போற்றும்போது நலம் மிகுந்த உணவு இல்லாது உயிர் வாழ்ந்திருத்தல் முடியாது.
செய்யப்படும் செயல்கள் கைப்பொருள் இல்லாது முடிதல் இல்லை. அதுபோல, விதையின்றி விளைவும் இல்லை.
கருத்து:
பெண்களுக்கு நாணம் வேண்டும் என்றது இது.
விளக்கம்:
நாணம் என்பது மகளிர் கற்பு முதலிய உயர்ந்த நிலையடைவதற்கு முதற்படியாயுள்ளது. இஃது இன்றேல் பெண்மைக் குணம் இன்றாம்.
'நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக'
என்று பிறரும் துணை கூறினார். நாண் மனமொழி மெய்களது ஒடுக்கத்தான் வருவனவோவெனின், அவை அவரளவல்ல; அழகிய நுதலினை உடைய குலமகளிர்கள் நாண்கள் என்பது பரிமேலழகர் உரை.
இழிந்த கருமங் காரணமாக, நாணுதலும் இதனுள் அடங்கி நிற்கும். பின்னர் நின்ற மூன்றும் பழமொழிகள்.