என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா

என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா.?

என்னை பற்றி உங்களுக்கு தெரியாதா? இந்த வார்த்தைகள் ஒவ்வொருவரின் மனதிலும் அன்றாடம் உறைந்து கொண்டேதான் இருக்கிறது. இது நம் தமிழ் நாட்டின் கடை கோடியில் இருக்கும் ஆண், பெண்,சிறார், பெரியோர் அல்லது ஐரோப்பிய நாடுகளில் ஏதோவொரு நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மேற் சொன்னவர்களாகிலும் சரி, இல்லை துருக்கி எகிப்து போன்ற நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் மனதிலும் இத்தகைய எண்ணம் இல்லாமல் இருக்கவே முடியாது.
இது உங்களுக்கு வியப்பாகவோ அல்லது சந்தேகமாகவோ தோன்றலாம். ஆனால் இந்த எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்து அவ்வப்போது வெளிப்பட்டு மற்றவர்களிடம் பேசும் போது வெளிப்பட்டு கொண்டேதான் இருக்கிறது.
இப்படி வெளிப்படும் இவர்களது பேச்சை அதை கேட்டு கொண்டோ அல்லது ஏற்று கொண்டோ இருப்பவர்களின் மனதில் தோன்றும் சொல்பவரின் மறு எண்ணங்கள் என்னவென்றால்
1. இவனுக்கு அல்லது இவளுக்கு அகம்பாவம், 2. தன் அடக்கம், 3.தற்பெருமை, 4. சுய விளம்பரம், 5. தன்னை பற்றி இவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்னும் எண்ணம்
இத்தனை காரணங்களை இந்த கட்டுரை ஏன் முன் வைக்கிறது என்றால் “நான் யார் தெரியுமா? இந்த கேள்வியில் ஒலிக்கும் ஒரு வித அகம்பாவத்தை உணரமுடிகிறதா? அதே போலத்தான் “என்னை பற்றி தெரியுமா? என்று நீங்கள் சாதாரண சொல்லும் வார்த்தைகளாக இருந்தாலும் அது என்னவோ மற்றவர்களுக்கு உணர்த்தும்போது அல்லது பார்வைக்கு கொண்டு போகும்போது, இல்லை அவர்கள் உங்களிடம் இதை தெரிவிக்கும் போதோ உங்களுக்கு அல்லது அவர்களுக்கு தோன்றும் எதிர்மறை எண்ணங்கள்தான் நான் சொன்ன மேற்கோள்கள்.
இப்பொழுதும் உங்களுக்கு புரியவில்லை என்றால் இப்படி சொல்கிறேன் உதாரணமாக
என்ன சார் நீங்க என்னை பத்தி உங்களுக்கு தெரியாதா? இப்படி என்கிட்ட கேட்டுட்டீங் களே? என்று சொல்லும் போது அதை கேட்டு கொண்டிருப்பவர் உண்மையிலேயே உங்களை பற்றி தெரிந்திருந்தாலும், அவர் மனதில் உங்களை பற்றிய கண்ணோட்டம் சரியாக அல்லது தவறாக கூட இருக்குமல்லவா. ஆனாலும், தவறாக இருந்தாலும் “ஆமா ஆமா நீங்க இந்த விசயத்துல ரொம்ப நம்பிக்கையான ஆளாச்சே” என்பதாக நல்லதாக தெரிவிப்பார். மனதுக்குள் இவன் “எமகாதகன்” என்று நினைத்து கொண்டாலும். இப்படித்தான் ஒவ்வொருவரும் மற்றவரிடம் என்னை பற்றி உங்களுக்கு தெரியுமில்லையா? என்று தேவையான அல்லது தேவையற்ற இடங்களில் கூட வெளிப்படுத்த தயங்குவதில்லை.
இந்த எண்ணங்கள் வார்த்தைகளாக மற்றவர்களிடம் வெளிப்படும்போது அவர்கள் வெளிப்படையாக “ஆமா ஆமா” என்றாலும் உள் மனது “சரியான மண்டைக்கனம், தலைக்கனம், “பாவம் இவரு” “நல்ல மனுசன்” இப்படி வித விதமான மறு எண்ணங்கள் தோன்றத்தான் செய்யும்.
இப்படி சொல்பவர்களின் பலம் என்னவென்று பார்த்தால் “இந்த எண்ணங்கள் இருக்கும் வரை மனிதனின் ஓட்டம் ஓடிக்கொண்டேதான்” இருக்கும் என்பது நிச்சயம். நீங்கள் சாதித்தவர்கள், அது எந்த துறையாக இருந்தாலும் சரி உலகத்திற்கு அவர்கள் ஒரு அறிவிப்பை செய்து விட்டுத்தான் செல்கிறார்கள். வரும் தலைமுறைகள் “என்னை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்” என்னும் அறிவிப்பை கொடுத்து அவர்களை பற்றிய கண்ணோட்டத்தை உற்று பார்க்க செய்கிறார்களே.
ஒரு படைப்பு மற்றவர்களை கவரும் விதமோ அல்லது இரசிக்கும் விதமோ இருக்கும் போது படைத்தவர்கள் யார்? என அவர்கள் தேடும் போது அவர்கள் இந்த படைப்புடனே அளிக்கும் இணைப்பு “என்னை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்”. இவரது படைப்பை பார்ப்பவர்கள் அவரை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அப்படி அசைப்படுவார்கள் என்பது தெரிந்தே படைப்பாளர் தன்னை பற்றி வெளிப்படுத்த “என்னை பற்றி தெரிந்து கொளுங்கள்” என்று வெளியிடுகிறார். அவரை பற்றி அறிந்து கொள்பவர்கள் “பரவாயில்லை இந்த ஆள்” என்று மறு எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த இடத்தில் இதை எப்படி அவர்களது ஆணவம் என்று நாம் எண்ண முடியும்?
அடுத்து குழந்தைகளின் எண்ணோட்டத்தை எடுத்து கொள்ளுவோம் தன்னை பற்றி தாயுக்கும் தந்தைக்கும் தெரியாதா? என்னும் கண்ணோட்டத்திலே வளர்கிறது. அதனால் அவர்கள் தன்னுடைய தேவைகளை அவர்களே முன் வந்து செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
குழந்தை வளர வளர தன்னுடைய குறை நிறை மற்றும் தான் கொண்ட லட்சியம் இப்படி பல வித கோட்பாடுகளை வைத்து அவைகள் அனைத்தும் பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இப்படி குழந்தைகள் எதிர்பார்க்கவில்லை என்றால் பெற்றோர் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஏம்மா எங்களை பத்தி உனக்கு தெரியாதா? அவர்கள் தங்கள் மகனிடம் அல்லது மகளிடம் இப்படிப்பட்ட சொற்றொடர்களை அடிக்கடி உபயோகிப்பார்கள்.
இப்படித்தான் எழுதியும் எழுதாமலும், வெளிப்பட்டும், வெளிப்படாமலும் ஒவ்வொருவரின் மனங்களில் இருந்து என்றேனும் வெளிப்பட்டு கொண்டே இருக்கும் இந்த வார்த்தை “என்னைய பற்றி உங்களுக்கு தெரியாதா”.
“நான்” என்னும் சொல் கடைசியில் “ஒரு பிடி சாம்பல்”, என்று ஏதோ ஒரு இடத்தில் “ஆன்மீக சொற்பொழிவாளர் “சுகி சிவம்” அவர்கள் பேசியதை கேட்டிருந்த ஞாபகம். அந்த வார்த்தையை நான் இங்கு சுட்டி காட்டி அந்த சாம்பலை கலைத்து பார்க்கும்பொழுது அதில் ஒரு விரல் பிடி சாம்பலில் “என்னை பற்றி தெரியாதா” என்னும் அன்னாரது வார்த்தை பிரயோகம், என்றேனும் அல்லது அடிக்கடி பிரயோகித்திருந்த வார்த்தைகளாக இருந்திருக்கும்.
என்றாலும் “நான்” என்னும் வார்த்தையில் தெரியும் “ஆணவம்” போன்ற உணர்வு, நிச்சயமாக இந்த வார்த்தையில் இல்லை. இதில் ஆணவம் சிறிதளவு தொனித்தாலும் அதனுடன் பணிவும், தன்னடக்கமும், தான் சாதித்திருக்கிறோம்,என்னும் பெருமையும் இருக்கும்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Jan-24, 4:26 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 103

மேலே