செருப்பு

செருப்பு....!
14/01/2024

தலைமேல் உங்களை தாங்கி
பாதையில் இருக்கும்
அத்தனை அசிங்கங்களையும்
கல் முள் தரும் கொடுமையான
அத்தனை வேதனைகளையும்
இரண்டு பக்கமும்
இடிபோல் தாங்கி
நீங்கள் சுகமாய் நடக்க
மெத்தை சுகம் அளித்து
உங்களோடு தினமும்
பயணிக்கின்றோமே ..
என்றாவது எங்கள் பாட்டை
நீங்கள் நினைப்பதுண்டா?

ஐயகோ...
உங்கள் கவுரவத்தை
காப்பாற்றும் எங்களுக்கு
வாசல் வரைதான் அனுமதி.
ஆண்டவா...உன்னைத் தரிசிக்க
ஆலையம் வந்தாலும்
வாசலிலேயே கழட்டிவிட்டு
தாங்கள் மட்டும் தரிசிக்க
உள்ளே செல்லும்
நன்றி கெட்ட மாந்தர்கள்.
தீண்டத்தகாதவர்களாம்
நாங்கள்..

நாராய் கிழிந்து போகும்வரை
எங்கள் மேல் பயணித்து
குப்பையில் வீசிவிடும்
சுயநலவாதிகள்..
அங்கேயும் தேடிவந்து
எங்களை எடுத்து
கிழிந்ததை தைத்து
போட்டுக்கொள்கிறார்களே
வீதிவாழ் மன்னர்களும்
கடைசிவரை தேய்வதுதான்
எங்களின் தலையெழுத்து.
பெற்றோரைப் போல..

சூடுபட்டு உங்கள் பாதம்
கொப்பளிக்கக் கூடாதென்று
வெயிலின் சூடத்தனையும்
நாங்கள் தாங்குகிறோம்.
தலைமேல் எங்களை
தாங்கவேண்டாம்.
மற்றவரை தாக்க
'செருப்பால அடிப்பேன் ' என்று
தரங்கெட்டு.... தரமிறங்கி
கோபத்தில் நீங்கள் சொல்லும் சொல்
எங்களை சூடாக்கி
கேவலப்படுத்துகிறதே..
ஒன்று தெரியுமா?
கேவலம் எங்களுக்கில்லை
உங்களுக்குத்தான்.
சொந்த சகோதரனை..
பிறந்த உடன்பிறப்பை
ரத்தத்தின் ரத்தமான
சக மனிதனை
கேவலப்படுத்துவதாக எண்ணி
உங்களை நீங்களே
கேவலப்படுத்திக்கொள்கிறீர்கள்.

காதருந்த செருப்பு
காலுக்காகாது என்று
வாழ்வின் தத்துவத்தைகூட
நாங்கள் பறைசாற்றுகிறோம்.
ஒட்டாத உறவுகள்
காலை கடிக்கும்
என்கின்ற உண்மையினை
உங்களுக்கு நாளும்
சொல்லுகிறோம்

காலமெல்லாம் உங்கள் காலடியில்
சேவகம் செய்யும் எங்களுக்கு
நீங்கள் கொடுக்கும்
கவுரவம் இதுதானா?
அங்கீகாரம் முறைதானா?
நாங்களும் ஒருநாள்
அரியணை ஏறி
ஆட்சியையும் செய்துவிட்டோம்.
பரதா...
உனக்கு
கோடானகோடி நன்றிகள்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Jan-24, 6:29 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : SERUPPU
பார்வை : 130

மேலே