இந்திய செய்தித்தாள் தினம் இன்று

இந்தியச் செய்தித்தாள் தினம்.....

உண்மைக்கு
'உரைகல்லாக' இருந்தது...
இன்று
உண்மைக்கு
'நடுகல்லாக' இருக்கிறது...

வெளிச்சமானது
இருளில் இருக்கிறது....

சுதந்திரமானது
அடிமையாக வாழ்கிறது...

வழிகாட்ட வேண்டியது
வழி மாறிச் செல்கிறது.....

இந்தப் புரட்சிக்கொடி
பறந்து கொண்டிருக்கிறது
கட்சிக்கொடி கம்பத்தில்....

வார்த்தைகளுக்குப்
பொய் சொல்ல
கற்றுக் கொடுக்கிறது
செய்தித்தாள்.....

கல்யாண வீடு
எத்தனையோ இருந்தாலும்
இழவு வீட்டு வாசலில்
ஒப்பாரி வைக்கவே !
இது பிரியப்படுகிறது....

அன்று
செய்தித்தாள் படித்தால்
'நாட்டு நடப்புகளைத் '
தெரிந்து கொள்ளலாம்
இன்றையச் செய்தித்தாள்களைப்
படித்தால்
'காக்கா பிடிப்பது எப்படி ? ' என்று
கற்றுக் கொள்ளலாம்....!

தேநீர்க் கடைகளில்
'அறியாமையை
மூட்டைக்கட்டப்' பயன்பட்டது..
இன்று
'போண்டா வடை
பொட்டலம் கட்ட' மட்டுமே
பயன்படுகிறது.....!

'ஜனநாயகம் வளர
உரமாக' இருந்தது....
இன்று தான் வளர
'ஜனநாயகத்தையே
உரமாக்கிக்' கொண்டது.....!

சுமந்து வர
தங்கம்
வைரம்
முத்துகள் இருந்தாலும்
இது 'குப்பைகளையே!'
சுமந்து வருகிறது.....

செய்தித்தாள்கள்
பணத்தாள்களுக்கு
வாக்கப்பட்டுப் போய்விட்டது....

"முகமூடியை " கிழிக்கும்
கரமாக இருக்க வேண்டியதே !
'முகமூடியாக' மாறிவிட்டது...

அநீதிகளைத்
தட்டிக்கேட்க வேண்டியது
கைக்கட்டி நின்று
வேடிக்கைப் பார்க்கிறது....

'இருட்டடிப்புச்' செய்தே
பல செய்தித்தாள்கள்
'வெளிச்சத்திற்கு' வந்தது....

புலிகளையே !
எதிர்த்து போராடிய
பரம்பரையில் வந்தது....
இன்று
எலிகளுக்குப் பயந்து
பதுங்குகிறது.....!

காகிதமாக
இருக்கும் இது
என்று
ஆயுதமாக மாறுமோ...?

கவிதை ரசிகன் குமரேசன்

எழுதியவர் : கவிதை ரசிகன் (29-Jan-24, 8:12 pm)
பார்வை : 11

சிறந்த கவிதைகள்

மேலே