மீண்டு வர முடியும்
மீண்டு வர முடியும்
ஐ,ஆம்,சாரி சார், இனி என்னால ஒண்ணும் பண்ண முடியாது, தேவையான அளவு உங்களுக்கு டைம் கொடுத்தாச்சு, மேலிடத்துலயிருந்து எக்களுக்கு ‘பிரஷர்’ ஜாஸ்தியாயிட்டே இருக்கும், அதனால…நாங்க அக்ரிமெண்டுல சொன்னபடி உங்க வீட்டை…!
கேட்டபடி எதிரில் உட்கார்ந்திருந்த சோமையாவின் மனதுக்குள் சற்று கோபம் எட்டி பார்த்தாலும் இவரிடம் கோபத்தை காட்டுவதால் என்ன பயன்? இவர் வங்கியில் ஒரு ஊழியர் அவ்வளவுதான். அங்கு சொல்வதை இங்கு வந்து நம்மிடம் ஒப்புவிப்பவர். இருந்தாலும் இதே வங்கி இவர் நொடித்து விழாமல் இருந்தவரை தாங்கு தாங்கு என்று தாங்கியதே..!
அப்பாவின் கடுமையான உழைப்பால் உருவாக்கிய இவர்கள் நிறுவனம் அளிக்கும் “செக்குக்கு” அளித்த மரியாதை என்ன? இவர் வங்கிக்கு வந்து விட்டால் மேனேஜர் அவர் எதிரில் உட்கார கூட சங்கடப்படுவார். அவ்வளவு மரியாதை கொடுத்த வங்கி இன்று அவரை செல்லா காசாக்கி பார்க்கிறது. “உட்கார வச்சாவாது பேசராறே மேனேஜர்” அதுக்கே சந்தோசப்படணும், மனதுக்குள் நினைத்து கொண்டவர், “சரி அதுக்கு மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை” மெல்ல தான் ‘துக்கமாயில்லை’ என்பதை அவருக்கு காட்டவேண்டி, முறுவலை காட்டியபடி எழுந்து வெளியே வந்தார்.
வெளியே வழக்கம் போல சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தான். அந்த வங்கி போக்குவரத்து மிகுந்த சாலையின் ஓரம் இருந்ததால் வண்டிகள் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருந்தன.
இனி என்ன செய்வது? வீட்டிற்கு போகலாமா? வீடு என்ன வீடு? அதைத்தான் இன்னும் ஓரிரு மாதங்களில் ஏலத்துக்கு விடுவதாக வங்கி மேனேஜர் சொல்லி விட்டாரே?
இருந்தாலும் எங்காவது ஒரு இடத்தில் ஒதுங்க வேண்டியிருக்கிறதே? ஆட்டோ கிடைக்குமா? அங்கும் இங்கும் கண்களை அலைய விட்டார்.
ஒரு காலத்தில் வாசலில் கார் இவருக்காக காத்து நிற்கும், டிரைவர் இறங்கி அவர் காரில் ஏறியதும்தான் காரில் ஏறுவார். அதையும் இந்த ஐம்பது வயதுக்குள் அனுபவித்து விட்டாயிற்று. வேகாத வெயிலில் இப்படி ஆட்டோ பிடித்து செல்லும் நிலைமையையும் கண்டு கொண்டாயிற்று. இதற்கு மேல் தன்னுடைய வாழ்க்கையில் மாற்றம் வருமா? இல்லை இதுக்கும் கீழே போய்த்தான் நிற்குமா தெரியவில்லை.
அவரின் எண்ணத்தை தெரிந்து கொண்டாற்போல் ஆட்டோ ஒன்று அவரை ஒட்டி நின்றது, என்ன சார் ஆட்டோவா?
ஆமாப்பா பட்டணம் போகணும்? நூறு ரூபாய் ஆகும் சார், என்னப்பா அங்கிருந்து வரும்போது எண்பது ரூபாய்க்கு வந்தாங்க, இப்ப நூறு ரூபாய் கேக்கறே? சார் நீங்க வரும்போது ஊருக்குள்ள போற பாதையில குழி எடுக்கலை, இப்ப போயி பாருங்க, புல்டோசர் வச்சு எடுத்துட்டு இருக்காங்க, அதுனால சுத்தி தான் போகணும்.
சரிப்பா, எப்ப குழி எடுக்கறாங்கன்னு ஒண்ணும் தெரியறதில்லை, சொல்லியபடியே ஆட்டோவில் ஏறிக்கொண்டார். அதேதான் நானும் சொல்றேன் சார், எங்களுக்குத்தான் சார் தொந்தரவு, வாடிக்கைகாரங்க இதுனால பத்து இருபது ஏத்துனா சண்டைக்கு வராங்க, நீங்க நல்ல மனுசனா இருக்கறதுனால கம்முனு ஏறிகிட்டீங்க, அவர் பாட்டுக்கு பேசியபடி வண்டியை முறுக்கினார்.
ஆட்டோவில் இருந்த சோமையாவின் கண்கள் வழியில் இருந்த தங்களுடைய நிறுவனமான “வேலவன் எண்டர்பிரசைஸ்” பார்க்க கூடாது என்று மனசு சொன்னாலும், தன்னை அறியாமல் தானாக அவர் கண்கள் அங்குதான் சென்றன.
முன்னால் கேட்டில் நின்றபடி செக்யூரிடி யாரிடமோ பேசிக்கொண்டு நின்றிருப்பதை பார்த்தார். அப்பா இறந்த பின் பதினைந்து வருடங்களாக நன்றாகத்தான் நடத்தி கொண்டிருந்தார் நிறுவனத்தை. எங்கு சறுக்கியது என்று தெரியவில்லை, கூட்டு பிசினஸ் என்று அகல கால் வைத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டது முதல் சறுக்கல், அடுத்தடுத்து அதிலிருந்து வெளியேறி வர முயற்சித்த போது இன்னொரு சறுக்கல், அப்படியே மூன்று வருடங்களில் அவர் நிறுவனத்தையே விழுங்க கூடிய அளவில் கொண்டு வந்து விட்டது. வங்கி கடனுக்கு நிறுவனத்தை விற்றும், ஏற்பட்ட கடன் முழுவதுமாக முடியாமல் இப்படி மிச்ச சொச்ச கடனுக்காக கடைசி சொத்தான வீட்டை ஜப்தி செய்வதில் வந்து நிற்கிறது. அதற்கு பிறகு..?
இந்த கேள்வி அவர் மனசுக்குள் கேட்டு கொண்டே இருக்கிறது. அவரது மகன் அமெரிக்காவில் மருத்துவராக பணி புரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் ஒரு வார்த்தை சொன்னால் இதற்கு தீர்வு கண்டு விடலாம். ஆனால் இது வரை அவனிடம் கையேந்தாத மனசு இருக்கிறதே..!
மனைவியை பொருத்தவரை சிரமமே இல்லை, இவர் திருமணம் செய்தபோதே வசதியான வீட்டு பெண் தான். அவளுக்கு மட்டுமே இவரின் இக்கட்டான நிலைமை தெரியும், என்றாலும் தன் வீட்டு உறவினர்களிடம் கூட இதை பற்றி சொன்னதில்லை, சோமையாவை விட இவளுக்கு தன்மானம் அதிகம். வருவதை சந்திக்கலாம், சோமையாவிடம் வைராக்கியமாக சொல்லி விட்டாள்.
அதனால் குடும்பத்தை பற்றிய கவலை இல்லை, எங்கு வேண்டுமானாலும் அவர்கள் போய் வசிக்கலாம். நகரை விட்டு சற்று தள்ளி நல்ல விலை போகும் “வீட்டு மனை” ஒன்று கூட இருக்கிறது, அதில் வீடு ஒன்றை கட்டி வசிக்கலாம். பார்க்கலாம், மனசுக்குள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டார்.
இரவு சாப்பிட்டு படுத்தார், நல்ல உறக்கம்தான் என்றாலும் ஏதேதோ கனவு, யாரோ ஒருவர் இள வயதாக வேட்டியுடன், சட்டை இல்லாமல் மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருப்பது போலவும், அந்த சமயம் யாரோ அங்கு வந்து அந்த மனிதனை கீழே பிடித்து தள்ளி, அவரை அடிப்பது போல கையை கொண்டு போகிறார். கீழே விழுந்த அந்த மனிதன் சமாளித்து எழுந்து தள்ளி விட்டவரை பார்த்து ஏதோ சொல்கிறான், பிறகு பை ஒன்றை கையில் வைத்து கொண்டு அந்த பொட்டல் வெளியில் நடந்து செல்வதையும் பார்க்கிறார். இது எந்த இடம்? அவருக்கு புரியவில்லை
காலை எழுந்தவர் மனைவியிடம் இதை பற்றி சொல்கிறார், யாருன்னு தெரியலை, ஆனா யார்கிட்டயோ வைராக்கியமா பேசிட்டு பை ஒன்ணை எடுத்துட்டு அந்த பொட்டல் வெளியில நடந்து போறதை பார்த்தேன்.
மனைவி யோசனையாய் அவர் முகத்தை பார்த்தவள் எப்படி இருந்தாரு?
இவர் குழம்பினார், எங்கோ பார்த்த மாதிரியும் இருக்கு, ஆனா பார்க்காத மாதிரியும் இருக்கு.
இந்த கனவு இப்பத்தான் வருதா? இல்லை முதல்ல எப்பவாச்சும் வந்திருக்கா?
இல்லையே, இன்னைக்குத்தான் இப்படி வந்திருக்கு.
மனைவி பெருமூச்சு விட்டாள், பார்க்கலாம், வெளியே ஆட்களின் பேச்சுக்குரல்.
பாத்திரங்கள் கழுவி வைக்க அப்பொழுதுதான் வெளியிருந்து வீட்டுக்குள் நுழைந்த வேலைகாரி அம்மா ஐயாவை பார்க்க யாரோ இரண்டு மூணு பேரு வெளிய நிக்கறாங்க, ஐயா பேரை கேட்டாங்க, இந்த வூடுதான், கொஞ்சம் நில்லுங்க, வர சொல்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.
யாராய் இருக்கும்? கேள்விக்குறியுடன் வெளியே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் பார்த்தார். வெள்ளை வேட்டி சட்டையுடன் இருந்தாலும் கிராமத்து களை முகத்தில் தெரிந்தது. அவரை பார்த்து கும்பிட்டனர். நாங்க வளவன்பட்டியில் இருந்து வந்திருக்கோம்.
பதிலுக்கு கும்பிட்டவர், வாங்க உள்ளே, அழைத்தவர் அவர்களை அங்கிருந்த நாற்காலிகளில் உட்கார சொன்னார்.
எதுக்கு வந்திருக்கீங்க? உள்ளறையில் இருந்து இவர்களை கவனித்து கொண்டிருந்த மனைவியிடம் எல்லாருக்கும் காப்பி கொண்டு வர சொன்னார்.
அதெல்லாம் வேணாங்க, அயாவுக்கு எங்களை யாருன்னு தெரியலை, ஆனா உங்களை நாங்க கேள்விபட்டிருக்கோம். உங்க அப்பாரு நூறு வயசு ஆகியிருந்தும் ரொம்ப வைராக்கியமா இருந்தாரு. உங்க அப்பாவும் நாப்பது வருசத்துக்கு முன்னாடி அவருகிட்ட கோபிச்சுகிட்டு ஒரு பைய மட்டும் எடுத்துட்டு எங்கியோ போயிட்ட மனுசன், இதுவரைக்கும் ஊர்பக்கம் எட்டி பார்க்கலை. உங்க அப்பாரும் ரொம்ப வருசமா எதிர்பார்த்து எதிர்பார்த்து நாலு மாசம் முன்னாடிதான் இறந்து போனாரு. அதுக்கு முன்னாடியே உங்க ஆயாவும் போயிட்டாங்க. ஆயா இருந்தவரைக்கும், அவரு காத்திரமாத்தான் இருந்தாரு. ஆனா அவக போன பின்னாடி மனசு மூழ்க்க பையன் ஞாபகமாகவே இருந்தாரு.
நாங்களும் அவுக பையனை இத்தனை வருசமா பார்க்காததுனால எங்களுக்கும் என்ன பண்ணறதுன்னு தெரியலை. அவரு இறந்த பின்னாடி நாங்களே அவருக்கு கொள்ளி போட்டு முடிச்சு அனுப்பி வச்சோம். அதுக்கப்புறமாத்தான், அவரோட தோட்டம் காட்டை எல்லாம் யார்கிட்ட ஒப்படைக்கிறதுன்னு, நம்ம ஊரு இள வட்ட பசங்களை புடிச்சு தேட சொன்னோம். அவங்க கண்டு புடிச்சு உங்க வீட்டை காண்பிச்சாங்க.
அவர்கள் பேசிக்கொண்டு போக போக இவருக்கு ஏதோ கதை கேட்பது போல இருந்தது. தன் அப்பா இத்தனை வருடங்கள் வாழ்ந்த போதும் இதை பற்றி பேசினதே இல்லை. அவர் ஆரம்பித்து நடத்தி கொண்டிருந்ததுதான் “வேலவன் எண்ட்ரபிரைசஸ்” அப்படியானால், அப்பாவும் தன்னுடைய தந்தையை சந்திக்க கூடாது என்று வைராக்கியத்தில் இருந்திருக்கிறார். வருத்தமாக இருந்தது சோமையாவிற்கு. மனிதர்களின் வீண் வைராக்கியத்தால் இவ்வளவு நாள் “தான் தனிமை பட்டிருக்கோம்” என்பதை நினைக்கும்போது. தான் மட்டும் என்ன யோக்கியமா? தன்னுடைய மகனிடத்தில் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எல்லாமே நடந்திருக்குமே..!
சே., அவருக்கு தன் தாத்தாவிலிருந்து தன் வரைக்கும் கோபம் கோபமாக வந்தது. இப்படி வீண் பிடிவாதத்தால் நாமே ஏன் தனிமை பட்டு கொள்கிறோம்.உறவுகளையும் இழந்து நிற்கிறோம்.
கருவேலமரங்கள் நிறைந்தும், வறட்சியாகவுமே காணப்பட்டது அந்த கிராமம். சோமையாவை பார்க்க கிராமத்து மக்கள் பாதி பேர் வந்திருந்தனர். அப்படியே உங்க அப்பாருவையே பார்த்தமாதிரி இருக்கு, அவர்கள் சொல்ல இவருக்கு மனம் கசிந்தது. தான் நல்ல நிலையில் இருந்த போது இங்கு வராமல் போனோமே, நம் ஊருக்காவது ஏதாவது செய்து கொடுத்திருக்கலாம், நகரில் நம்மால் பயன் பெற்ற எல்லோரும் கடைசியில் நம்மை இக்கட்டுக்குள் கொண்டு சென்றதை தவிர என்ன பயன் கிடைத்திருக்கிறது?
பத்து நாட்கள் கிராமத்தில், அப்பாருவின் வீட்டில் தங்கி, அவருக்கு சொந்தமாக இருந்த பூமியை தரிசாக போடவேண்டாம் உழுது பயிரிடலாம், முக்கியமான தேவை தண்ணீர் என்பதை உணர்ந்தவர், கையில் கொண்டு போயிருந்த கொஞ்சம் தொகை, அப்பாரு வீட்டில் சேமித்து வைத்திருந்த தொகை எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் “போர்க்குழாய்களை” அமைத்து பண்னையாட்களை ஏற்பாடு செய்து விட்டு நகரத்திலிருக்கும் தன் வீட்டிற்கு, போய் விட்டு மீண்டும் வருவதாக, எல்லோரிடம் சொல்லி விட்டு மனைவியுடன் சாதாரண பேருந்தில் நகரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தவரின் மனம் அமைதியாயிருந்தது. இது வரை அவரை அழுத்தி கொண்டிருந்த ஏதோ பாரம் இறங்கியது போலிருந்தது.
நம் அப்பா என்ன கொண்டு வந்தார் இந்த நகரத்துக்கு? வெறும் துணிப்பை,அதில் ஒரு வேட்டி சட்டை, அவ்வளவுதான், ஆனால் அவர் சம்பாதித்தது எத்தனை? இழந்து விட்டோம் என்று சொல்ல என்ன நிலையாய் இருந்தது நம்மிடம்? இன்றோ நாளையோ வீடு கூட போய் விடலாம், ஆனால் நம்பிக்கை..! இனி எதற்கும் கவலைப்பட கூடாது. அன்று அப்பாவின் தைரியத்திற்கு காரணம் மனதளவில் தன் தகப்பனிடம் சொல்லி வந்த வைராக்கியம் “ஏன்னை எதுக்கும் லாயக்கில்லாதவன்னு சொல்றீங்க, ஆனா நான் முன்னேறி காட்டறனா இல்லையா பாருங்க”
இனி அடுத்து என்னோட முறை “அப்பாவின் சொத்துக்களை எப்படியும் மீட்டு காட்டுகிறேன் பாருங்கள்” அவர் மனம் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் பட்டியல் போட ஆரம்பித்திருந்தது,காரணம் அப்பாவை விட இவருக்கு ஒரு பொறுப்பு அதிகமாகி இருந்தது, தான் வியாபாரத்திலும் முன்னேற வேண்டும், விவசாயத்தையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும்,
அவர் முகத்தை தொடர்ந்து கவனித்து வந்த மனைவி அதில் கண்ட சாந்தம், கண்களில் தெரிந்த ஆர்வம் இதை கண்டு புரிந்து கொண்டாள். தன் கணவன் மீண்டு வர தயாராகி விட்டான் என்பதை.