என் வாழ்வில் நீ வந்தாய்

பூரண சந்திரன் போல் பொதுமி நான் நின்றதில்லை
புறங்கை முத்தமிட வளைகள் பூண்டதில்லை
ஆரணங்கள் பூட்டி அரியணை ஏறியதில்லை
தோரண சடைகள் பூண்டு விழாவினை கண்டதில்லை
வயிற்றுக் கோடுகளில் வடிவம் கண்டதில்லை
வலக்கை ஊன்றி எழுவதில் யாரும் ஆருடம் சொன்னதில்லை
மாவடு ருசிப்பதில் மயக்கமேதுமில்லை
மாதவிலக்கங்களில் மாற்றங்கள் ஏதுமில்லை
பருத்துமெலிந்த நாட்காட்டிகளில் தவணைகோடுகள் ஏதுமில்லை
பற்றுவைத்த வைத்தியசாலைகளில் ஏதும் தோதாண சொற்களில்லை
சுற்றிவந்த அரசமரங்களின் எண்ணிக்கை குறையவில்லை
தவிர்க்கிறேன் எனக்கொரு உயிர் எனக்குள்ளேயிருந்து என்ற கனவினை
ஆயிரமடி பயணங்களில் அடைந்திருக்கிறேன் ஆனந்தமடி
அடைக்கல சிறகுகளை விரித்துக்கொண்டு சிறையிருந்த உன்னை
ஏற்றுக்கொள்கிறேன் என்மகளாய் - என் வாழ்வில் நீ வந்தாய்
உன்னால் நான் தாயாகின்றேன்
உன்னால் தான் நானும் தாயாகின்றேன்.