யாப்பு அலங்காரம் -- பலவகைப் பாக்கள்

யாப்பு அலங்காரம் -- பலவகைப் பாக்கள்
**********
1) கலிவிருத்தம் ( மா விளம் விளம் மா)

வெள்ளை உடைதனில் வீரமாய் உலவி
கள்ளச் சிரிப்பினைக் காந்தமாய்ப் பரப்பி
உள்ள மணலையும் ஊரினில் கடத்திக்
கொள்ளை யடித்திடும் கூற்றினைத் துரத்து!

( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை )

2.) நேரிசை வெண்பா
வெள்ளை உடைதனில் வீறுநடை போடுவர் ;
கள்ளச் சிரிப்பினைக் காட்டுவர் -- வெள்ளைமனங்
கொள்ளாக் கயமை குணத்தர்; இவர்தனை,
கொள்ளையர் என்றுநீ கூறு!
( ஒரே அடி எதுகை 1. மற்றும் 3.ல் பொழிப்பு மோனை)

3.) நேரிசை ஆசிரியப்பா

வெள்ளை அங்கியில் வெளிவரும் பதரை ;
உள்ள மண்ணையும் குலைத்து, நாட்டைக்
கொள்ளை கொள்ளும் கோட்டியை ;
வெளியே தள்ளி வைப்பது நலமே !

4.) கலித்துறை -- (மா விளம் விளம் விளம் மா)

வெள்ளைப் போர்வையில் உலாவிடும் அரசியல் வீரர்;
உள்ள மண்ணையும் கடத்தியே மகிழ்ந்திடும் உள்ளான் ;
கள்ளப் புன்னகை காந்தமாய்ப் பரப்பிடும் கள்வர்;
கொள்ளைச் சேவைகள் புரிந்திடும் இவர்களைத் துரத்து!
உள்ளான் = மண்வளம் காக்கும் மண்புழுக்களை
தின்னும் பறவையினம்)

5.) கட்டளைக் கலித்துறை

வெள்ளை உடையில் அலையும் அரசியல் வித்தகரை
கள்ளச் சிரிப்பு உதிர வலம்வரும் காதகரை
உள்ள கனிமம் முழுதும் களவாடும் உத்தமரை
கொள்ளை யரென்றே கருதி ஒதுக்கிடு ஓரத்திலே!

(அடி எதுகை நேரசையில் தொடங்க 16. எழுத்துக்கள்
5.ம் சீர்களில் விளங்காய். இறுதி அடியில் 5.ம் சீரில்
மாங்கனிச் சீர் அருகி வந்துள்ளது. 1.மற்றும் 5.ல் மோனை.

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Mar-24, 7:39 am)
பார்வை : 57

மேலே