மறதித் திலகம்

மறுப்பது என்பது எல்லோராலும் செய்யமுடியாது. ஒருவர் என்னிடம் வந்து எனக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்ய வேண்டும் அல்லது அன்னம் அளிக்கவேண்டும் என்று கேட்கும்போது இல்லை, செய்ய மாட்டேன் என்று என்னால் மறுக்கமுடியாது. ஏதாவது என்னால் முடிந்ததை செய்துவிடவேண்டும் என்றே என் மனம் விழையும். நான் மட்டும் இல்லை உங்களில் பலபேருக்கு இப்படிப்பட்ட மனநிலைதான் நிச்சயமாக இருக்கும்.
மறுப்பது என்பதிலிருந்து மாறுபட்டது மறப்பு, அதாவது ஞாபக மறதி. அனேகமாக அனைவரிடமும் இந்த ஒரு செயல் இருக்கிறது. சிலருக்கு பழக்கமாக இருக்கிறது. நல்ல சுறுசுறுப்புடன் ஞாபக சக்தி உடைய சிலருக்கும் கூட எப்போவாவது ஒரு தடவை மறதி ஏற்படும்.
நான் அவ்வப்போது உழவர் சந்தை சென்று காய்கறி பழங்கள் வாங்கிவருவது வழக்கம். ஒரு முறை, சந்தையில் பழங்கள் வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவிட்டு, அருகில் வைத்திருந்த என்னுடைய காய்கறி பையினை (காய்கறிகளால் நிறைந்த பை) அங்கேயே மறந்து வைத்துவிட்டு சந்தைக்கு வெளியே வந்துவிட்டேன். வண்டியில் பைகளை வைக்கும்போது 'அடடா ஒரு காய்கறி பை குறையுதே' என்று கவனித்துவிட்டு உடனே அந்த பழக்கடைக்கு விரைந்து சென்றேன். அங்கே பார்த்தால் என்னுடைய பைக்கு பதிலாக வேறு ஒரு பை இருந்தது (காய்கறி குறைவாக இருந்த பை). அந்த பையில் சில காய் மற்றும் வாழை இலைகள் இருந்தன. நான் பழக்காரரிடம் "யாரோ தவறுதலாக அவர்களின் பையை வைத்துவிட்டு என்னுடைய பையை எடுத்துசென்றுவிட்டார்கள்" என்றேன்.
பிறகு என்னுடையதல்லாத அந்த பையை காய்கறிகளுடன் உழவர் சந்தையில் உள்ள அலுவலகத்தில் விவரத்தை கூறி, கொடுத்தேன். அவர்கள் ஒலிபெருக்கி மூலம் என்னுடைய காய்கறி பை காணாமல் போய்விட்டதையும் அதற்கு பதில் வேறு ஒரு பை இருப்பதையும் கூறிவிட்டு, அலுவலகத்திற்கு வந்து பையை மாற்றிக்கொள்ளுமாறு அறிவித்தனர். சிறிது நேரம் அங்கே காத்திருந்தேன். ஒரு பயனும் இல்லை.
அடுத்தநாள் மீண்டும் சென்று விசாரித்ததில், பையை எடுத்துச்செல்ல யாருமே வரவில்லை என்று தெரிந்தது. ஆனால் சில காய்கறிகள் இருந்த இன்னொரு பை காலியாக இருந்தது. உழவர்சந்தை அலுவலகத்தில் உள்ளவர்கள் தான் அதை உபயோகத்திற்கு எடுத்துசென்றுவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
இப்போது அடுத்த நிகழ்ச்சிக்கு வருவோம். நேற்று உழவர்சந்தை சென்று காய்கறிகளும் பழங்களும் வாங்கினேன். பழ விற்பனையாளர் நான் எடுத்த பழங்களை ஒரு பிளாஸ்டிக் கூடையில் எடுத்துவைத்தார். பின்னர் கணக்குபோட்டுவிட்டு 320 ரூபாயை வாங்கிக்கொண்டார். வீட்டிற்கு வந்தபின் காய்கறிகளை எடுத்துவைக்கையில் "320 ரூபாய்க்கு பழங்கள் வாங்கினீர்கள் என்றீர்கள். ஒரு பழத்தையும் பையில் காணவில்லை" என்று என் மனைவி சொன்னபோதுதான் பழங்களை வாங்காமலே வந்துவிட்டேன் என்று உணர்ந்துகொண்டேன். பின் என்ன செய்வது? ஏற்கெனவே இந்த பழ விற்பனையாளரிடம் ஒரு முறை பழத்தை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன். அடுத்தமுறை சென்றபோது அவரது செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டேன். இந்த முறை அவருக்கு போன் செய்தபோது "பழங்கள் அப்படியே கூடையில்தான் இருக்கிறது. வந்து எடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவர் சொன்னதும் மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு போய், பழங்களை வாங்கி வந்தேன்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் சந்தையில் நான் வழக்கமாக பூ வாங்குபவரிடம் (அவருக்கும் என்னுடைய ஞாபக மறதி குறித்து நன்றாக தெரியும்) நேற்று பூ வாங்கிக்கொண்டு, "இன்று காய்கறி பழங்கள் எதையும் மறக்காமல் எடுத்துவந்துவிட்டேன்" என்று பெருமையுடன் சொன்னேன். பூவிற்கு பணம் கொடுத்துவிட்டு புறப்பட்ட என்னை பூக்கார பெண்மணி கூப்பிட்டு " ஐயா, இந்தாங்க பூவை எடுக்காம போறீங்களே " என்று பூவை மறந்துவிட்டு புறப்பட்ட என்னை கூப்பிட்டு பூவை கொடுத்தார்கள்.
நான் பழங்களை வாங்க மீண்டும் சந்தைக்கு உள்ளே சென்றபோது பூக்கார பெண்மணி என்னை கவனிக்கவில்லை. மறந்துபோன பழங்களை நான் பையில் வாங்கிக்கொண்டு வெளியில் வந்தபோது நான் அவர்களிடம் "பழங்கள் வாங்கிக்கொண்டு வருகிறேன்" என்று சிரித்தபடி சொன்னேன். அவர்கள் "மறந்துபோன பழங்களைத்தானே" என்று போட்டாரே பார்க்கலாம். நான் இளித்தபடி "ஆமாம்" என்று சொன்னேன்.
பூக்கார பெண்மணி நேற்று எனக்கு ஒரு பட்டம் கொடுத்துவிட்டார்கள். என்ன அது? நடிகர் திலகம், மக்கள் திலகம் என்பது போல எனக்கு 'மறதி திலகம்' எனும் பட்டத்தை கொடுத்துவிட்டார்கள். அந்த காலத்தில் பிகாம் பட்டம் பெற்றபோது இல்லாத ஒரு மனநிறைவு நேற்று எனக்கு கிடைத்தது.

மறப்பது சகஜம். ஆனால் இடம் பொருள் ஏவல் பார்த்து மறக்கவேண்டும்.
எனக்கு தெரிந்த கோயம்பத்தூர் மருத்துவர் ஒருவர் அவர் பெண்ணிற்கு சென்னையிலிருந்து கோவா செல்வதற்கு காகித டிக்கெட் ஒன்று முன்பதிவு செய்து தன்னிடமே வைத்துக்கொண்டார். கோயம்பத்தூரிலிருந்து சென்னை செல்லவும் அவர் பெண்ணிற்கு தனியாக ஒரு ரயில் டிக்கெட் எடுத்து வைத்துக்கொண்டார். பயண நாள் அன்று பெண்ணை கொண்டுவிட கோயம்பத்தூர் ரயில் நிலையம் சென்றார். தனக்கு ஒரு ப்ளட்போர்ம் டிக்கெட் வாங்கிக்கொண்டார். ரயில்நிலையம் சென்றதும் தன்னிடம் இருந்த மூன்று சீட்டுகளில், இரண்டு சீட்டுகளை பெண்ணிடம் கொடுத்துவிட்டு 'டாடா பைபை சி யூ' என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றவருக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அவர் சட்டைப்பையிலிருந்து சீட்டை எடுத்துப்பார்த்தால், அது 'சென்னை கோவா' செல்வதற்கான அவர் பெண்ணிற்கான ரயில் டிக்கெட். ப்ளட்போர்ம் டிக்கெட் என்று எடுத்து தூக்கிபோடும்போது தான், அது சென்னையிலிருந்து கோவை செல்வதற்கான தனது பெண்ணின் ரயில் டிக்கெட் என்று அவருக்கு தெரிந்தது. பெண்ணிற்கு சென்னையிலிருந்து கோவா செல்ல அடுத்த நாள் மதியம் ரயில். அடுத்த நாள் விடிகாலை அந்த மருத்துவர் அந்த ரயில் டிக்கெட்டை அவரது கார் ஓட்டுனரிடம் கொடுத்து " சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் சென்று இந்த பயணசீட்டை என் பெண்ணிடம் கொடுத்து வா" என்று சொல்லி அவரும் விடிகாலை நான்கு மணிக்கு காரில் புறப்பட்டு காலை 11 மணி அளவில் அந்த சீட்டை அந்த பெண்ணிடம் உரிய நேரத்தில் சேர்த்தார். பெண்ணும் நல்ல முறையில் பயணம் செய்து கோவாவில் கல்லூரியில் சேர்ந்தார்.
ஞாபக மறதி சாதாரணமாகவும் இருக்கும். ரொம்ப ரொம்ப சஸ்பென்ஸா த்ரில்லாக கூட இருக்கும். ஆமாம், ஜாக்கிரதை. மறக்காமல் இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 'எதை ஞாபகம் வைக்கச்சொல்றீங்க' என்று கேட்கிறீர்களா? ஞாபகம் வந்தா, அப்புறம் சொல்லுறேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (11-May-24, 10:51 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 26

மேலே