மாம்பழ சீசன் 5

பழம் வாங்கிச்சென்றவர் (பவா): நேத்திக்கி வாங்கிப்போன மூணு பழத்துல இரண்டு கதுப்பு மட்டும்தான் சாப்பிட்டு பார்த்தேன். உள்ளே பழம் மட்டும் இனிக்குது. மாம்பழத் தோலுதான் ஒரேடியா கசக்குது. இந்தாங்க, மீதி ரெண்டு பழமும் ஒரு கொட்டையும். கொஞ்சம் வேறு நல்ல பழமா மாத்தி கொடுங்க.
பழ வியாபாரி (பவி): (முணுமுணுத்துக்கொண்டே) இந்தாங்க ரெண்டு பழம். அந்த கொட்டையை உங்க பக்கத்துல நிக்கிற மாட்டுக்கு கொடுங்க.
பவா: அது மாடு இல்ல. என் சம்சாரம்.
பவி: நான் அந்த மாட்டை சொல்லலப்பா. உனக்கு பின்னாலே நிக்குது பார் ஒரு நல்ல பசு மாடு. அதுக்கு கொடு.
பவா: ஓஹோ. சரி, பசுவுக்கே கொடுத்துட்டேன். அதுக்கு பதில் ஒரு மாம்பழ கதுப்பு மட்டும் தாங்களேன்.
பவி: போய் வேலையைப்பாருங்க. இப்போதான் வியாபாரம் எனக்கு சூடு பிடிச்சிருக்கு.

பவா: ' பசுவுக்கு சதையுடன் கொடுத்த கொட்டைக்கு இவரா காசு கொடுப்பர்' என்று முனுமுனுத்தபடி ரெண்டு பழங்களை வாங்கிக்கொண்டு மனைவியுடன் வீடு செல்கிறார்.

அடுத்த நாள்
பவா: பழ வியாபாரி ஐயா, இந்தாங்க ஒண்ணேமுக்கால் மாம்பழம். இந்த மாம்பழத்தோலு மட்டும்தான் இனிக்குது. உள்ளே பழம் என்னடான்னா எலுமிச்சம் மாதிரி புளிக்குது. தோலு பழம் ரெண்டும் இனிக்கிறமாதிரி ஒண்ணேமுக்கால் பழம் கொடுங்க.
பவி: ஏன்யா, உங்களுக்கெல்லாம் வேற வேலை எதுவுமே இல்லையா? ஏன்யா இப்படி என்னை சித்திரவதை பண்ணுரே. இந்தா பிடி, இப்போ வந்து இறங்கின பெரிசான பங்கன பல்லி ஒன்னு. எடுத்துட்டு உடனே கிளம்பு.
பவா: அய்யோ, இன்னொரு முக்கால் பழத்தையும் மாத்திக்கொடுங்க.
பவி: நறுக்கிய மாம்பழத்தையெல்லாம் யாரும் திரும்பி வாங்கமாட்டாங்க. அதோ எதிர் கடையில் ஒரு காளை நிக்குது பார். அதுக்கு கொடுத்துட்டு, வீட்டிற்கு ஓடிப்போ.
பவா: அது காளை இல்ல. எங்க அப்பா.
பவி: யோவ், நான் எதிர் கடைன்னா நீ பக்கத்துக்கு கடையை பார்க்கிற. பவா: ஓ, புரியுது. அன்னிக்கு பழத்துடன் ஒரு கொட்டையை பசுவிற்கு கொடுத்தேன். இன்னிக்கு கொட்டையோட சேர்த்து பாதி பழத்தை காளைக்கு கொடுக்கணும். எல்லாம் என் தலை எழுத்து.

அதற்கடுத்த நாள்
பவா: மாம்பழ அங்கிள். நல்லா இருக்கீங்களா? நீங்க நேத்து கொடுத்த மாம்பழத் தோலும் நன்றாக இருந்தது, பழமும் இனிப்பாத்தான் இருந்தது. ஆனால், உள்ளே கொட்டை ரொம்பவும் பெரிசாக இருக்கு. அதனால் எனக்கு கிடைக்கவேண்டிய மாம்பழத்தின் அளவு ரொம்ப கம்மியாயிடுச்சு. இந்த பெரிய கொட்டையை வெதச்சு மாமரம் வளருங்க. அதுக்கு பதில் எனக்கு ஒரு மாம்பழ கதுப்பு கொடுங்க . எந்த பழமானாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கிறேன்.
பவி: டேய் மச்சான் எடுடா அந்த சவுக்கு கட்டையை, கொட்டையை திருப்பி தர வந்தவன நாலு விளாசி அனுப்பினா ' கொட்டையை காணோம், பழத்தை காணோம்னு ' விழுந்து வாரியடித்து ஓடுவான்.

அடுத்த நொடி, கட்டையடி கிடைக்கும் முன்னமே, பவா கையிலுள்ள மாங்கொட்டையை தூக்கி பவிமேலே தூக்கியடித்துவிட்டு, அங்கிருந்து விழுந்து வாரியடித்துக்கொண்டு, அவருடைய அப்பாவைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு ஓடுகிறார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (30-May-24, 3:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 18

மேலே