பரங்கிமலை பயத்தமாவு

நம்ம ஊர் பரங்கி மலையிலிருக்கும் ஒரு ஆளு, பேரு புருடு. அவர் கட்டிய பெரிய கப்பல் வீட்டை கோட்டை பெனாமியிடம் கோட்டை விட்டுட்டு, இங்கிருந்து குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு தூக்கி அடிக்கப்பட்டு தெய்வாதீனமாக உயிர் பொழச்சு திரும்ப பரங்கிமலை வந்து சோர்ந்துட்டார் (சேர்ந்துட்டார்). நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடைய நண்பர் ஒருவர், பெயர் சரடு அவரை சந்திக்கிறார். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்த கதையை உங்களுடன் பகிர்ந்துக்கிறாங்க. வாங்க, நாமும் என்னான்னு தெரிஞ்சிக்குவோம்.
சரடு: போன வருஷம் பார்த்தப்போ இந்த இடத்தில டைட்டானிக் கப்பல் போல உனக்கு ஒரு பெரிய வீடு இருந்ததே. இப்போ பார்த்தா, கப்பல் இருந்த இடத்தில ஒரு சின்ன குத்துக்கல் தான் தெரியுது.
புருடு: அதை ஏன் கேக்கறே சுருடு. மூணு மாசத்துக்கு முன்னாடி இங்கே ஒரு பெனாமி காத்து அடிச்சது.
சரடு: அது என்னப்பா பெனாமி காத்து. சுனாமி காத்துன்னு சொல்லு.
புருடு: இல்லப்பா. அது சுனாமி இல்ல, பெனாமி காத்துதான். முதல் தடவை சுனாமி வந்துட்டு திரும்பறப்போ அதோட சின்ன குழந்தையை மறந்துபோய் இங்கேயே விட்டுட்டு போயிடிச்சாம்.

சரடு: இது என்னப்பா, புரியாத புதிராக இருக்கு. இவ்வளவு நாள் அந்த பெனாமி குழந்தை எங்கு இருந்ததாம்?
புருடு: என்னுடைய டைட்டானிக் கப்பல் வீட்டின் அடியிலதான் வசித்து வந்ததாம்.
சரடு: அடப்பாவமே. நீ இருந்த வீடே ஒரு பெனாமிதானா?
புருடு: ஆமாம் கண்ணு.
சரடு: அது சரி. பெனாமி குழந்தை உன் வீட்டிற்கு கீழேயிருந்து எப்படி வெளியே வந்தது?
புருடு: ஒரு நாள் இரவு, தூக்கத்துல நான் எங்கேயோ மேலே மிதந்து போவதுபோல இருந்தது. திடீர்னு கண்ணு முழித்து பார்த்தா, மெய்யாலுமே என் வீடு நூறு அடிக்கு மேலே மிதந்து கொண்டிருந்தது. அப்படீன்னா நானும்தானே நூறு அடிக்கு மேலே மிதந்தேன்?
சரடு: சரியாத்தான் சொன்னே. சரி உன் டைட்டானிக் கப்பல் மட்டும் காணாமல் போயிடுச்சு. நீ எப்படி பொழைச்சே?
புருடு: அந்த கூத்தை ஏன்பா கேக்கறே. அது கனவா அல்லது நனவான்னு தெரியல. என் கட்டில் அடியிலிருந்து ஒரு குரல் கேட்டது. "புருடு. எங்க அப்பா என்னை இங்கே அம்போன்னு உட்டுட்டு போயிட்டாரு. இப்போ எனக்கு பத்து வயசு. இன்னிக்கு காலைலதான் எங்க அப்பா எனக்கு அனுப்பிச்ச வாய்ஸ் மெசேஜ் கிடைச்சுது. அதுல அவர் "என் அருமை பெனாமி செல்வமே. நான்தான் சுனாமி, உங்கப்பா. நான் அட்லாண்டிக் கடலிலிருக்கிறேன். நீ எங்கேயோ ரொம்ப தூரத்தில இருக்கிறாய். நீ என்னிடம் வருவதற்கு ஒரு வழி சொல்கிறேன்.
சரடு: இதையெல்லாம் எப்படிப்பா நம்புவது?
புருடு: என் வீடே இங்கே காணோம். அதை நம்பமுடியுதில்ல. அப்புறம் இதையும் நம்பித்தான் ஆகணும். சுனாமி பெனாமிக்கு சொன்ன யோசனை இதுதான் "பெனாமி, நீ ஒரு பெரிய வீட்டின் பூமியின் கீழே இருக்கிறாய். நான் பெனாமி, என் அப்பா சுனாமி அப்படீன்னு ஆறு முறை அலறினால், நீ உனக்கு மேலேயிருக்கும் வீட்டின் உள்ளே புகுந்திடலாம். அங்கு வந்த பிறகு "என் அப்பா பெத்த (பெரிய) சுனாமி, நான் அவர் பெத்த சுனாமி" அப்படீன்னு பத்து முறை அலறவேண்டும். அந்த வீட்டில் எந்த மனிதரும் இருக்கக்கூடாது. ஒருவேளை இருந்தால் அவரை பூமியிலேயே விட்டுவிடவேண்டும். நான் என்னுடைய தூரத்து ஈர்ப்பு சக்தியால் உன்னை வீட்டுடன் இங்கே அட்லாண்டிக் கடலுக்கு தள்ளிவந்து விடுவேன்"
சரடு: நீதான் நூறு அடி மேலே போய்ட்டியே, அப்புறம் எப்படி கீழே இறங்கினே?
புருடு: நூறு அடிக்கு மேல இருக்கும்போது எப்படிப்பா கீழே இறங்க முடியும். நல்ல வேளை ஒரு ஹெலிகாப்டர் அந்தப்பக்கம் சும்மா சுத்துக்கொண்டிருந்தது. நான் சத்தம் போட்டு "சார், என்னை காப்பாத்துங்க, இராவணன் சீதையை தூக்கிக்கொண்டு போனதுபோல என்னை யாரோ, என் வீட்டோட தூக்கிண்டு போறாங்க". இதை கேட்டவுடன் ஹெலிகாப்டர் என் வீட்டு மொட்டைமாடியில் வந்து நின்னது. அதிலிருந்தவர் "ஏன்யா, நீ என்ன அந்தரத்தில் ஹோட்டல் நடத்துறியா? வா, சீக்கிரம் ஹெலிகாப்டரில் ஏறு. இப்போ காத்து பயங்கரமாக அடிக்குது. நீ லேட் பண்ணே, நீ மட்டும் இல்லை நானும் இந்த ஹெலிகாப்டரும் இந்த கட்டடத்துடன் அட்லாண்டிக் கடலில் போய் தொப்புன்னு விழுந்திடுவோம்" அப்படீன்னார். நானும் சட்டுன்னு போர்த்தியிருந்த போர்வையுடன் அந்த ஹெலிகாப்டரில் ஏறிட்டேன்.
சரடு: அப்புறம் என்ன ஆச்சு?
புருடு: நீ என்ன சினிமா கதையா கேக்கிறே. அந்த ஹெலிகாப்டர் பைலட் பயத்தமாவு என்னை ரொம்பவும் திட்டிவிட்டார்.
சரடு: ஐயோ, ஏன்பா உன்னை பயத்தமாவுன்னு திட்டினார்.
புருடு: பயத்தமாவுண்ணும் திட்டலே, உளுத்தமாவுண்ணும் திட்டலே. நான்தான் அவருக்கு பயத்தமாவுன்னு பேரு வச்சேன்.
சரடு: அது ஏம்பா, பயத்தமாவுன்னு பேரு வச்சே?
புருடு: ரொம்ப அவசியமா? அந்த பைலட்டோட சீட்டு காத்துல எகிறிக்கினு வெளியே போயிடுச்சாம். அதனால் அவர் உள்ளே இருந்த மூணு பயத்தமாவு மூட்டைகளை ஒன்றின்மீது ஒன்றாக போட்டு அதில்தான் உட்கார்ந்திருந்தார்.
சரடு: உனக்கு உட்கார சீட் இருந்துச்சா?
புருடு: அந்த ஹெலிகாப்டர்ல ஒரே ஒரு சீட்டுதானாம் அதுவும் பறந்துபோயிடுச்சு.
சரடு: எனக்கு கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்போ நீ எப்படி ஹெலிகாப்டர்ல உட்கார்ந்துண்டே?
புருடு: பயத்தமாவு என்னை அவர் கால்களுக்கு கீழே படுத்துக்கச்சொன்னார். நானும் கஷ்டப்பட்டு படுத்துக்கொண்டேன். அவர் தனது இரண்டு கால்களையும் என் மேல் போட்டுகொண்டு "இப்போதான் ஹெலிகாப்டர் ஓட்ட சரியாக பாலன்ஸ் கிடைத்தது" என்றார். கீழே படுக்கும்முன்பு நான் அவரிடம் சொன்னேன் "பைலட் சார், அதோ பறந்து போகுது பாருங்க, இந்த கப்பல் போல வீடு. இது என்னுடையது சொந்த வீடு. ரொம்ப ஆசையாக பார்த்து பார்த்து கட்டினேன்". அதை கேட்டு பயத்தமாவு "ஏன்டா மடையா, ஒருமாசத்துக்கு முன்னாடி இந்த வீட்டை எனக்கு வித்திருந்தா, நான் வாங்கிட்டிருப்பேன். இப்போ பாரு, யாருக்கும் பயனில்லாமல் உன் வீடு அம்போனு அந்தரத்தில் பறந்துபோகுது".
சரடு: பயத்தமாவு உன்னை எங்கே இறக்கிவிட்டார்?
புருடு: அவர் எங்கே இறக்கிவிட்டார்? அடிச்ச காத்துக்கு ஹெலிகாப்டர் எங்கேயெல்லாமோ பறந்து பறந்து சுத்திட்டு, என்ஜின் ஆப் ஆகி ராஜஸ்தான் பாலைவனத்தில் விழ ஆரம்பித்தது.
சரடு: அப்புறம், எப்படிப்பா நீ உயிரோடு இருக்கே?
புருடு: பைலட் பயத்தமாவு என்னை அவர் கீழிருந்து தூக்கிவிட்டு ஒரு பயத்தமாவு கோணியை என்னுடன் சேர்த்து கட்டிவிட்டார். பிறகு அவரும் ஒரு பயத்தமாவு கோணியை கட்டிக்கொண்டார். " நான் ஒன் டூ ன்னு சொன்னவுடன் நீ வெளியே குதிச்சுடு." என்று பயந்த குரலில் சொன்னார் . நான் அதிர்ந்து போய் "பொதுவா த்ரீன்னு சொல்லும்போதுதானே குதிப்பாங்க" அப்படீன்னு கேட்டதுக்கு அவர் கோபத்துடன்" சரியான பயத்தமாவா இருக்கியே நீ. நானும் உனக்கு பின்னாலே குத்திக்கணும்தானே, அப்போ த்ரீன்னு சொல்லிட்டு நான் குதிப்பேன்.
சரடு: ஆண்டவனுக்கு நன்றி சொல்லணும். ரெண்டு பேருமே பொழச்சுடீங்க. பயத்தமாவு மூட்டையுடன் எங்கே போய் விழுந்தீங்க?
புருடு: நான் குஜராத் போர்பந்தரில் விழுந்தேன்.
சரடு: பைலட் பயத்தமாவு எங்கே விழுந்தார்?
புருடு: அவர் அந்தமான் தீவில் விழுந்தார்.
சரடு: அங்கே விழுந்தார்னு உனக்கு எப்படி தெரியும்?
புருடு: அவருடைய செல்போன் என்னுடைய பயத்தமாவு மூட்டையில் எப்படியோ சிக்கிக்கொண்டுவிட்டது. நான் ஒரு வழியாக பரங்கிமலை வந்து சேர்ந்தவுடன், அவருடைய போன் வாட்சப்பில் ஒரு ஆடியோ கிளிப் இருந்தது. அதை ஓபன் பண்ணியவுடன், அவர் குரலில் பாடி பதிவு செய்திருந்த ஒரு பாடல் கேட்டது.
சரடு: அது என்ன பாடல் நண்பா?
புருடு: “அந்தமானை பாருங்கள் அழகு, இங்கே கண்ட பெண் ரொம்ப அழகு". பாட்டு முடிஞ்சு, இதையும் அந்த வாய்ஸ் மெசேஜில் வைத்திருந்தார். "என்னுடைய செல்போனை கீழே கொடுத்துள்ள அந்தமான் அட்ரஸுக்கு கூரியரில் அனுப்பி வச்சுடு. முடிஞ்சா ரெண்டு மூட்டை பயத்தமாவையும் அத்தோட அனுப்பி வை."
சரடு: நீ நல்லமனசோட அவர் கேட்டதையெல்லாம் அனுப்பிவச்சிருப்பாய்
புருடு: அனுப்பிதான் வச்சேன். ஆனால் அவர் ரொம்பவும் வருத்தமாக இருக்கிறார்.
சரடு: ஏம்பா, எதனால் வருத்தம், அந்தமான் காதலியோட ஏதாவது தகறாரா?
புருடு: அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. பயத்தமாவு அதிகமா அவரது ஐ-போனில் இறங்கி, அந்த போனில் ரிங் டோன் கூட பயத்தமாவு, பயத்தமாவு, பயத்தமாவுன்னுதான் வருதாம். கூகுளில் அலெக்சாவை கேட்டால் 'எல்லாம் பயத்தமாவு" அப்படீன்னு சொல்லுதாம்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Jun-24, 3:47 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 53

மேலே