சுடுகாடு சொல்கிறேன்...

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

*சுடுகாடு சொல்கிறேன்*


படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

நான்
திறந்திருக்கும் புத்தகம்
ஒதுங்கிப் போகாதே !
ஒரு முறையேனும்
வாசித்து விட்டுப் போ....!

என்னைக் கண்டு பயப்படாதே !
நான் ஒரு கோவில்....
இங்கு
ஈசன் தியானம் செய்கிறான்...

என்னை வெறுக்காதே !
உன் தாய் கூட
பத்து மாதம் தான்
கருவறையில்
உன்னை சுமப்பாள்
நான் உன்னை
காலமெல்லாம்
கல்லறையில் சுமப்பேன்.....!

நீ காலில் போனாலும்
காரில் போனாலும்
ஒரு நாள்
பாடையில்
இங்கு கண்டிப்பாக
வருவாய்.....

புண்ணியம்
செய்கின்றவனே !
ஒரு நாள்
இங்கு வந்து தான்
ஆக வேண்டும் ....
பாவம் செய்து
நீ என்ன
சாதித்து விடப்போகிறாய் ?

அங்கே ! பார் ....
கீழ் ஜாதிக்காரன்
தொட்டால் தீட்டு என்று
சொன்னவனை
வெட்டியான்
காலால் உதைத்து
கட்டையைச் சரி செய்கிறான் ....
இப்போது எங்கே
அவன் சாதி ?
அவன் தீட்டு ?

சாதிக்கு
ஒரு சுடுகாடு
மதத்திற்கு
ஒரு சுடுகாடு வைத்திருந்தீர்கள்
சுடுகாடு வேண்டுமானால்
வெவ்வேறாக இருக்கலாம்
சுடுகின்ற "தீ ஒன்றுதான்....!"

புதைக்கின்ற இடம்
வேண்டுமானால்
வெவ்வேறாக இருக்கலாம்
புதைக்கும் இடம் பூமி தான் ...

பிணத்தை
தூக்கிக்கொண்டு
இங்கு வரம் நீ....!
அந்த பிணத்திற்கு
நண்பனாக
அப்பவாக
அண்ணனாக
தம்பியாக
ஏதேனும் ஒரு உறவாக
வருவதாக நினைப்பாய்
அது மாயை.....
உண்மையில்
நீ இந்தப் பிணத்திற்கு
பின்னால் வரும்
"நாளைய பிணம்"
அவ்வளவுதான் .....!

உன்னோடு இருக்கும்
சொந்த பந்தம்
பணம் பதவி
பேர் புகழ்
கௌரவம் அந்தஸ்து
வாழ்க்கை வளம் பணபலம்
வீடு வாசல்
சொத்து சுகம் எதுவும்
உனக்கு நிரந்தரம் அல்ல .....
உன்னோடு இருக்கும் நிரந்தரம்
அது நான் தான்
புரிந்து கொள்....
அறிந்து கொள்.......

என்னென்னவோ
ஆக ஆசைப்படுகிறாய்
அதற்கு முன்னால்
மனிதனாக ஆசைப்படு !
ஏனென்றால் ?
நாளை நீ
மண்ணாகவோ
சாம்பலாகவோ ஆக வேண்டும் !

*கவிதை ரசிகன்*

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

எழுதியவர் : கவிதை ரசிகன் (22-Jul-24, 8:12 pm)
Tanglish : sutukatu solgiren
பார்வை : 40

மேலே