அநியாயம் அழி

#அநியாயம் அழி

அப்பாவி இனங்களை படுபாவி யொழிப்பரோ
எப்பாவம் மறியாதோர்க்
கிடர்களை யளிப்பரோ..?

இருப்பிடம் இல்லாது
தெருவினில் விரட்டினார்
இருளளித்து வாழ்விலே
இன்னல்கள் கூட்டினார்..!

உடல்காக்கும் உடைகளை
உயிர்க்கதறப் போக்கினார்
இடர்முள்ளில் சுற்றியே
ஏன்பெண்ணை வாட்டினார்..!

ஊர்பார்க்கப் பெண்களின்
உடைகளை உருவினார்
போர்ப்புரிந் தடக்குவார்
ரின்றியே மருகினார்..!

கண்பார்த்து நின்றாரே
கையவர்க் கில்லையா
காமுகரின் எலும்பொடிக்க
கரம்சேர வில்லையா..?

குற்றங்கள் புரிந்தவர்
கோட்டைத்திமிர் கொண்டார்
உற்றத்துணை யாயிருக்கும்
ஊர்த்தலைக் கஞ்சார்..

தோலோடு சுளைவிழுங்கி
ஏப்பம்விடும் கூட்டங்கள்
மேலோடு போர்த்திய
ஆளுமை வர்க்கங்கள்..!

மணிப்பூரில் பங்கமே
மாநிலம் குமுறுதே
பணிந்தொதுங்கிப் போவதற்குப்
பதுமைகள் இல்லையே..!

கொந்தளித் தெழுகிறார்
கொடுமை கண்டாருமே
வெந்தணலை ஏந்தினார்
வாட்டமுடன் நெஞ்சிலே..!

தந்திரத்துக் கொடுநரிகள்
தரித்திரந் துடைக்குமோ
வெந்தணலை ஏந்தினார்
சரித்திரம் படைக்கவே..!

அதிகாரம் ஆளுமை
அநியாயம் புரியவோ
சதிகாரர் கள்குடலை
உருவிட பயமுமேன்..?

மானுடந் துறந்தவர்
மாவிலங் கல்லவோ
வானுலகம் அனுப்பிட
வாளேந்தி வெல்லுவோம்..!

#சொ.சாந்தி

ஆக்கம் - ஜூலை 2023

எழுதியவர் : சொ.சாந்தி (22-Jul-24, 11:18 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 23

சிறந்த கவிதைகள்

மேலே