சமுதாயத்தில் நாம்
சமுதாயத்தில் நாம்
சமுதாயம் என்பது என்ன? சமுதாய பழக்கம் என்பது என்ன?
சமுதாயம் என்பது ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மனிதர்களும் தங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தி கொண்டு குழுவாக செயல்பட தொடங்குவார்களேயானால் அக்குழுவுக்கு “சமுதாயம்” என அழைக்கப்படும்..
அப்படிப்பட்ட குழுக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித கூட்டம் தங்களுக்குள் ஒரு ஒழுங்கு முறை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி கொண்டு அதன்படி பூமியில் வாழ முற்படுவதை “சமுதாய பழக்கம்” என்று அழைக்கலாம்.
இப்படி சமுதாயமாக வாழ முற்படுபவர்கள், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்குள்ளாகவே பிரிவினையை ஏற்படுத்தி கொண்டு அந்த பிரிவினையின் காரணமாக சமுதாய அமைப்புக்குள்ளேயே ஒரு உள் அமைப்பாக உருவாக்கி கொண்டார்கள். இவைகள் சாதிகளாக பரிமளித்திருக்கலாம். இவை எப்படி உருவானது என்று சரியான விளக்கங்கள் தெரியாததால் அனேகமாக தொழில் ரீதியாக இவைகள் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது
அப்படி உள் பிரிவினையை உருவாக்கி பிரிந்தாலும் அவர்களுக்குள் ஓவ்வொரு கடவுள் வழிபாட்டை வழிபடுவர்கள் “இவரவர்கள்” என்று அதற்குள்ளும் ஒரு பிரிவினை ஏற்பட்டு அவைகள் “மதங்களை வழிபடுபவர்கள்” என மாற்றம் கொண்டது. இப்படி சாதி சாதியாக பிரிந்த எல்லா அமைப்புகளுமே மதங்களின் சார்பாக மீண்டும் ஒரு பிரிவினைக்குள் சென்றது.
இதை இப்படி கூட சொல்லலாம் முதலில் ‘மதங்களாக’ பிரிவினையாகி பின்னர் ‘சாதிகளாக’ பிரிவினையானதாக கூட கொள்ளலாம்.
அடுத்த கட்டமாக அப்படி பிரிந்த அமைப்புக்களுக்குள்ளேயே “குலவழக்கங்கள்” என்று உள் பிரிவுகள் ஏற்படுத்தபட்டு அவைகளுக்குள் மீண்டும் ஒரு பிரிவினை அமைப்பு உருவாகி “குலம்” என்று உருவாகி போனது.
நாம் இதை பற்றி மேற்கொண்டு இக்கட்டுரையில் பார்க்க போவதில்லை.
ஒரு சமுதாய அமைப்பின் பழக்கவழக்கங்களில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பற்றி மட்டும் காண்போம்.
இத்தகைய மனித கூட்டங்கள் ஏற்படுத்தி கொண்ட சமுதாய கூட்டு பழக்க வழக்கங்கள், அந்த சமுதாயத்தில் வாழும் தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு மனித குடும்பங்களிலும் நடைமுறை படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் காலங்கள் செல்ல செல்ல, இந்த வழிமுறைகளை கடை பிடிக்க இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறைகள் முரண்டு பிடிக்கின்றன. அதற்கு அவர்களை குறை சொல்வதும் தவறு, காரணம் அன்று வாழ்ந்த மனிதர்கள், அந்த காலகட்டத்தின் சூழ் நிலையில் அப்போது ஏற்படுத்தி கொண்டிருந்த பழக்க வழக்கங்கள் இன்று தேவைப்படாமல் இருக்கலாம், ஆனால் அதை கடைபிடித்தே ஆகவேண்டும் என்னும் வற்புறுத்தலோ கட்டாயமோ ஏற்படும் போது அவைகள் இன்றைய தலைமுறைகளால் எதிர்க்கப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.
உதாரணத்துக்கு ‘மருத்துவ சிகிச்சை’ முறைகளை எடுத்து கொண்டால், இயற்கை வைத்தியமோ, அலோபதி வைத்தியமோ, எதுவானாலும் அன்றைய சூழ் நிலையில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், இன்றைய சூழ் நிலையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மருத்துவ முறைகளுக்கும் எத்தனை மாற்றங்கள் வந்து விட்டன. அது போலத்தானே இத்தகைய சமுதாய பழக்க வழக்கங்களும்.
அடுத்தது மனிதனின் வாழ்க்கை முறைகளை பாருங்கள், அன்றைய காலகட்டத்தில் வேட்டை தொழிலில் ஆரம்பித்து, அடுத்து விவசாயமே நமது தொழிலாக இருந்தது, விவசாய நடைமுறைகளை விவசாயிகள் காலச்சூழலுக்கு ஏற்ற வகையில் பயிர் செய்ய ஏற்பாடு செய்து கொண்டார்கள். அப்போது அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்தி கொண்ட வழிமுறைகளை கடைபிடித்து தொழில் செய்து கொண்டிருந்தார்கள்
போகப்போக, அறிவியல் வளர்ச்சியில் விவசாயமும் உற்படுத்தப்பட்டு பயிரிடுவதில் ஏகப்பட்ட மாற்றங்களும் கொண்டு வரப்பட்டு விட்டது. அது போலவே அது சார்ந்த தொழில்களில் இருந்தவர்களும், கூடவே புதிய புதிய மாற்றங்களை கொண்டு வந்து, இன்று குறைந்த அளவு மனிதர்களை மட்டும் வைத்து இயந்திரங்களின் உதவியுடன் விவசாயத்தை மேற்கொள்ளும் அளவில் வளர்ந்து விட்டார்கள்.
மருத்துவம், விவசாயம், இது போலத்தான் மற்ற எல்லா தொழில்களுமே காலப்போக்கில் மாற்றங்களை உருவாக்கி கொண்டே நகர்ந்து வந்து கொண்டிருக் கிறது.
ஏன் இதை குறிப்பிடுகிறோம் என்றால் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் அவன் சம்பந்தபட்ட தொழில்களோடுதான் பின்னி பிணைந்து இருக்கிறது.
உதாரணமாக எப்பொழுதும் உலாவிக்கொண்டிருக்கும் ஒரு கேள்வியை நாம் சமுதாயத்தில் வாழும் யாராவது ஒருவரிடம் கேட்கும் போது, முதலில் பேர், ஊர், அடுத்து என்ன தொழில் செய்யறீங்க என்றுதான் கேட்கிறோம். காரணம் மனிதர்கள் என்றால் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் வாழ்க்கையில் அவர்கள் ஏதாவது ஒரு தொழிலில் இருக்க வேண்டும் என்று நாமே ஒரு வாழ்க்கை முறையில் ஒரு நியமனம் செய்து வைத்திருக்கிறோம்.
ஒரு வகையில் பார்த்தால் இதுவும் கூட நம்மால் உருவாக்கப்பட்ட சமுதாய பழக்க வழக்க நடைமுறைகளில் முக்கியமான ஒன்றுதான். கவனித்து பாருங்கள் எத்தனை காலங்கள் உருண்டாலும் இந்த கேள்வி மட்டும் மாறாமல் மனித எதிர்பார்ப்புகளில் கேள்வியாக வந்து கொண்டிருக்கிறது.
பேர் என்ன? ஊர் என்ன ? என்ன தொழில்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
குடும்பத்தை கவனிக்கிறேன் என்பது தொழிலாக கொள்ளாமல் கடமையாகவே குறிப்பிடுகிறது. குடும்பத்தை கவனித்தல் என்பது ஒரு கூட்டு செய்முறை என்பதையும் சமுதாயம் (அன்றைய மக்கள் குழுவால்) ஏற்படுத்த பட்டிருக்கிறது. ஆண், பெண் இருவரும் உணவு தயாரிப்பதில் இருந்து குழந்தைகளை பெற்று அவர்களை உருவாக்கி உலகில் வாழ வழி செய்து கொடுப்பது,(அவர்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுப்பதற்காக இவர்கள் பிறரிடம் உழைக்க சென்றோ, அல்லது முன்னர் சொல்லியிருந்த தொழில் முனைந்தோ, விவசாயம் செய்தோ அதற்குரிய பலனை பெற்று) குடும்பம் நடத்த வேண்டி தேவைகளை பூர்த்தி செய்வதும் கடமை செய்யும் நடைமுறைதானே.
இப்படி காலத்தோடு நகர்ந்து கொண்டே அல்லது உருண்டு கொண்டே சென்று கொண்டிருக்கும் பழக்க வழக்கங்கள் எப்பொழுது தனி மனித வாழ்க்கையில் சில சமயம் முரண்படுகிறது?
மனிதன் இப்படி பின்னி பிணைந்த அந்த பழக்க வழக்கங்களோடு செல்ல முடியாமல் தடுமாறும் போது அத்தகைய பிணைப்பிலிருந்து வெளிவர துடிக்கிறான். இதை அவனது சுயநலம் என்று குறிப்பிடுவதும் தவறு. சரியானது என்று வாதிடுவதும் தவறு. காரணம் இதற்கான காரணங்கள் அவனிடம் ஏராளமாக இருக்கலாம். இவைகள் ஏற்காமலும், ஏற்று கொள்ளகூடிய வகையிலும் இருக்கலாம்.
இப்படி மீறி செல்ல முற்படும் அவர்கள் மீது ‘சமுதாயம்’ என சொல்லப்படும் அமைப்பிலிருந்து எதிர்ப்புகளும், தாக்குதல்களும் வர வாய்ப்பிருக்கிறது.அதையும் தாண்டி அவர்கள் சில காரியங்களை செய்து கொள்கிறார்கள் என்றாலும், அதில் வெற்றியோ தோல்வியோ அடைந்தாலும் மீண்டும் அவர்கள் உள் மனம் இந்த சமுதாயம் என்னும் சூழலுக்குள்தான் மீண்டும் வந்து நிற்கிறது.
அதற்கு காரணம், மனிதர்கள் எப்பொழுதும் குழுக்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். மனிதர்கள் மட்டுமல்ல இயற்கையின் படைப்பில் இருக்கும் எல்லா கால்நடை விலங்கினங்களும், குழுக்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் இருக்கிறது. சில நேரங்களில் இவைகளை மீறி தனித்து வாழ ஒரு சில முயற்சித்தாலும், அவைகள் கூட தனி குழுக்களாகத்தான் செயல்பட முடிகிறது.
மனிதன் தோன்றிய காலம் முதல், இல்லை இல்லை உயிர்கள் முதன் முதலில் தோன்றிய காலம் தொட்டே அவைகள் பூமியில் வாழ தங்களுக்குள் குழுவாக இயங்கும் அமைப்பாகத்தான் இருந்திருக்கிறது. இதில் ஒரு சில உயிர்கள் தவறி தனித்து வாழ உருவாகியிருக்கலாம், என்றாலும் அவைகளும் கூட தனக்கு அடுத்து ஒரு உயிரியை உருவாக்க கூட்டு வாழ்க்கை முறைகளை சில காலமாவது ஏற்கத்தான் வேண்டி இருக்கிறது.
சமுதாயமும் நாமும் நமக்கு தேவைப்படும்போது பின்னி பிணைந்து கொள்வதும் தேவைப்படாத நேரங்களில் அவைகளோடு பிணங்கி கொள்வதும், மீண்டும் அவைகளோடு இணைந்து கொள்வதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது, இருக்கும்.
மனிதர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அவர்களது உள் மனம் ஒரு பாதுகாப்பை தேடியபடியே தான் இருக்கும். அதிலிருந்து வெளியே வர முயற்சிப்பவர்கள் கூட அவர்களின் பாதுகாப்புக்காக வேறொரு குழுக்களாகத்தான் கூட முற்படுவார்கள்.
இதற்கு தனி மனிதர்களின் உணர்வுகள் காரணம் அல்ல. இயற்கையே நம்மை குழுக்களாகத்தான் வாழ வழி செய்திருக்கிறது. என்றாலும் இயற்கை சமுதாயத்துக்குள் ஏற்பட்டிருக்கும் உள்பிரிவுகளுக்குள் வாழ நம்மை வழி சொல்லவில்லை, (சமுதாய அமைப்பு என்பது அனைத்து மனித இனங்களும் ஒன்று கூடிய அமைப்பில்) வாழத்தான் வழி செய்கிறது.
ஆனால் நாம் இன்றளவும் அதன் உள்பிரிவுகளின் கூட்டத்தின் ஏதாவது ஒன்றில் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் வசைபாடியபடி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.