தனி மனித வருவாய்

தனி மனித வருவாய்
இந்த நூற்றாண்டுக்கு முன்னர் தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது வருடத்திற்கு ஒன்று என்னும் கணக்கில் இருக்கும். ஒரு குடும்பத்தில் கல்யாணம் ஆன தம்பதியினருக்கு வருடங்கள் கடந்த அளவுக்கு கூட குழந்தைகள் இருந்ததுண்டு. ஒரு குடும்பத்தில் பத்து பனிரெண்டு குழந்தைகள் கூட இருப்பதுண்டு.
அன்றைய காலகட்டத்தில் முப்பது கோடியில் (1947க்கு முன்) வைத்து கொண்டாலும், அதற்கே இந்தியாவில் மக்கள் தொகை பெருகுகிறது என்று குரல் கொடுத்து மக்கட் பிறப்பை குறைக்க அரசாங்கமே இயக்கம் நடத்தும் அளவுக்கு சென்றது, செல்கிறது, சென்று கொண்டே இருக்கிறது.
இதற்கும் அன்றைய காலங்களில் சூறாவளியாய் வரும் அம்மை, காலரா, விச காய்ச்சல், இப்படி பல சுனாமிகள் புகுந்து கொத்து கொத்தாக மக்களை கொள்ளை கொண்டு போயிருக்கிறது. அப்படி போயிருந்தாலும் மக்கட் தொகை குறையாத அளவில் பெருகியபடியேதான் இருந்திருக்கிறது.
ஒவ்வொரு குடும்பத்தின் மக்கள் பிறப்பை கட்டுப்படுத்த ஏதேதோ இயக்கங்களை ஆரம்பித்து, செயல்களையும் செய்து பார்த்த அரசு, இன்றும் திகைத்துத்தான் நிற்கிறது. காரணம் மக்கள் தொகை இன்று நூற்று நாற்பது கோடியை தொடும் நிலையில் இருக்கிறது. அநேகமாக “சீனாவை கூட” விஞ்சும் நிலைமையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்பொழுது இக்கட்டுரைக்குள் வருவோம், அன்று முப்பது கோடி மக்கள் இருக்கும் போது மக்கள் எல்லா வளங்களும் பெற்று வாழ்ந்திருந்தார்களா? என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை. அன்றும் தனி மனிதனின் வருவாய் குறைவாகத்தான் இருந்தது. வறுமையில் பிடியில்தான் இருந்தான். அதுவும் மிக கொடுமையான சூழ்நிலையில், பஞ்சத்தால் அடிபட்டு இருந்திருக்கிறான்.
சரி இன்றைய அறிவியல் பெருவளர்ச்சி பெற்ற நாளில்?
சற்று மேம்பட்டிருந்தாலும், ஏறக்குறைய அதே நிலைமைதான், கிட்டத்தட்ட அன்று நாற்பது அல்லது நாற்பத்தி ஐந்து சதவிகிதமாக இருந்தது இன்று முப்பது சதவிகிதம் சாராசரி வருவாயிக்கும் குறைந்த வருவாய் உடைய மக்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது என்று சொல்லும் அளவில் கூட மக்கள் வசித்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் வாழ்க்கை முறை மாறவே இல்லையா? இந்த கேள்விக்கு பதில் சொல்வதென்றால் நிறைய மாறியிருக்கிறது எனலாம். என்றாலும் எந்தளவுக்கு மனிதனின் பொருளாதார வளம் பெருக ஆரம்பித்ததோ அதனுடனேயே மனித வளமும் பெருக ஆரம்பித்தது. இதனால் பங்கீட்டு முறைகள் பரவலாக சென்றாலும் அது மனிதனின் தேவைக்கு போதுமானதாக அமையவில்லை.
அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக தொழில், வேளாண்மை, வணிகம் போன்றவை ஏராளமாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன.தகவல் தொழில் நுட்பம் இன்று ஏராளமானவர்களை பணியில் அமர்த்தி வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி தந்திருக்கின்றன.
இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று பொருள் ஈட்டுவதும், பணம் சம்பாதிப்பதும் பல மடங்கு பெருகியிருக்கின்றன. ஏன் வெளி நாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே தொடங்கப்பட்டு இந்தியர்களின் சேவையை பயன்படுத்தி கொண்டும் இருக்கின்றன.
இப்படி ஒரு வளர்ச்சியை நாடு கண்டு கொண்டிருந்த போதிலும், நாட்டின் மறுபக்கம் மக்களின் வறுமை நிலைமை இன்னும் குறிப்பிட்ட சதவிகிதம் நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
இந்த பிரச்சினையை போக்கத்தான் எத்தனை எத்தனை வழி முறைகள், சோசலிசம், கேபிடலிசம்,முதலாளித்துவம், கம்யூனிசம்,இப்பொழுது கார்ப்பரேட்டிசம், இன்னும் பல வழிமுறைகளை பல பல இயக்கங்கள் கையாண்டு மக்களிடம் கொண்டு போய் சேர்த்து கொண்டுதான் இருக்கின்றன.
இருந்தும் இத்தனை ‘இசங்களாலும்’ நாட்டின் வறுமை நிலையை ஓரளவுதான் குறைக்க முடிந்ததே தவிர பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
என்னதான் சிக்கல் இருக்கிறது நம்மிடம்? போதுமான நிலபரப்பு இல்லையா? மனித வளம் இல்லையா? கனிம வளங்கள் இல்லையா? வேளாண் வளர்ச்சி இல்லையா? இல்லை மனித அறிவு வளர்ச்சிதான் இல்லையா?
நுகர்வு கலாச்சாரத்தை எடுத்து கொள்ளுங்கள், உலகத்தின் பல வளர்ச்சி நாடுகளின் கண்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் மீதுதான் இருக்கின்றன. காரணம் என்ன? இங்கு எந்த பொருளும் மக்களால் வாங்கப்படும் என்னும் நிலைமை இருக்கிறது. இதற்கான பணம் அவனிடம் இருக்கிறது. இல்லையென்றாலும் தவணையிலாவது, அல்லது கடன் வாங்கியாவது பொருளை வாங்கி கொள்ள தயாராய் இருக்கிறான்.
அன்று உள் நாட்டு தயாரிப்புக்களை வாங்கவே வருமானம் இல்லாமல் தயங்கியவன், இங்கு பல வெளி நாட்டு தயாரிப்பு பொருட்களை சர்வ சாதாரணமாக வாங்கி குவிக்கிறான். இப்படி இருக்கும்போது பல நாடுகள் இந்தியாவில் கடை விரிக்கத்தானே முயற்சிக்கும்.
‘முதலீடுகளும்’ கூட இங்கு அதிக அளவு போடப்படுகிறது, இதற்காக அரசு வங்கிகளின் மூலம் பெருமளவு உதவியும் செய்கிறது. பங்கு சந்தை, தங்கம், கட்டிடம், நிலம், காப்பீடு, தொழில்துறை, வேளாண்மை, வணிகம், இப்படி நிறைய அளவில் முதலீடுகளை போட்டு கொண்டேதான் இருக்கிறார்கள் இந்திய மக்கள்.
இப்படி போதுமான அளவு எல்லாமே இருக்கிறது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஒத்து கொண்டுள்ளன. அன்றைய நூற்றாண்டை ஒப்பிடும்போது இன்று தனி மனித வருவாய் விகிதம் பெருகித்தான் இருக்கிறது போன்ற தோற்றம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏறக்குறைய ஐக்கிய அமெரிக்கா போலத்தான் நம் நாடும், பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இணைந்த நாடு. ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசமும் ஒவ்வொரு விதமான கலாச்சாராம், மொழிகள், இன்னும் பல வித்தியாசங்கள், என்றாலும் இதனால் பல சங்கடங்களை மக்கள் சந்தித்த போதும் ஒற்றுமையாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.
அப்படி இருந்தும், உலக நாடுகளின் பட்டியலில் தனிமனித வருவாய் குறைவான நாடுகளில் நம் நாடும் ஒன்றாக இருப்பதும், அதுவும், இந்தியா அதிகளவு முதலீடு செய்து தொழில் செய்து கொண்டிருக்கும் சில நாடுகளில் வசிக்கும் மக்களை விட தனி மனித வருவாய் குறைவில் இந்தியா அதிக அளவில் சதவிகிதங்களை கொண்டுள்ளது. இது மிகவும் வருந்த தக்கதுதானே..!
என்ன வளம் இல்லை, இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்? என்று பாடியது ஒரு காலகட்டம் என்றாலும், இன்று பல நாடுகள் நம் நாட்டிடம் ஏராளமான வணிகம், பொருளாதாரம், அறிவியல் கணிணி, மேலும் பலவற்றில் மனித வளங்களுக்காக கையேந்தி நிற்கும் நிலையில் இன்னும் ஏன் தனி மனித வருவாய் குறைவு நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது, என்பதுதான் புரியாத புதிராய் இருக்கிறது.
இதற்கு அரசியல், கடத்தல், பதுக்கல், ஏமாற்றுதல், வரி ஏய்த்தல், இப்படி பல காரணங்கள் சொன்னாலும் பல நாடுகளிலும், ஏன் இதை விட அதிகமாக நடக்கும் நாடுகளில் கூட தனிமனித வருவாய் சதவிகிதம் அதிகமாயிருக்கிறதே..!
மக்கள் தொகை பெருக்கம் என்று சொன்னாலும் நுகர்வு சக்தி உலகத்தில் மற்ற நாடுகளை விட நம்மிடம் மட்டும் எப்படி அதிகமாக இருக்கிறது? ஆனால் அவனது வருவாய் மட்டும் குறைந்து காணப்படுகிறது.
“சம்பளம் வாங்கினேன், பையிலே போட்டேன், காசு போன இடம் தெரியலை” என்.எஸ்.கிருஷ்ணன் அன்று “முதல் தேதி” என்னும் திரைப்படத்தில் கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன் பாடியிருப்பார். அது இன்றும் மாறவில்லை என்பதுதான் வருத்தம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (10-Aug-24, 10:42 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே