இயற்கையும் மனிதனும்
இயற்கையும் மனிதனும்
“உற்ற நண்பர்கள்,உள்ளுக்குள் எதிரிகள்” இந்த வார்த்தை யாருக்கு பொருந்துகிறது என்றால் “மனிதர்களுக்கும் இயற்கைக்கும்” மட்டுமே பொருந்துகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என்று பல்லாயிரம் முறை சொல்லுவார்கள் மனிதர்கள், ஆனால் உண்மையில் இயற்கையின் ஒவ்வொரு வளங்களையும் தங்களுடைய சொந்த லாபத்துக்காக சுரண்டிக்கொண்டே தான் வாழ்வார்கள்.
இயற்கை இன்னும் மனிதர்களை நம்பி கொண்டுதான் இருக்கிறது. அதுவும் “நட்புக்கு இலக்கணமாக” ஒவ்வொரு மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான நீர், காற்று, உணவு, இவைகளை அளித்து கொண்டுதான் இருக்கிறது. மனிதர்கள் தங்களது உயிர் வாழ்தலுக்கு தேவை எவ்வளவோ அதற்கு மேல் அதனிடமிருந்து கறக்கவே முயற்சி செய்கிறார்கள்.
இயற்கையை பொருத்தவரை அதில் வாழும் அனைத்து உயிர்களையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பில் இருக்கிறது. உயிரியியல் ரீதியாக படைக்கப்படும் அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில்தான் வாழ்ந்தாக வேண்டும். அது தன்னை உயிர்ப்பித்து வாழ்வதற்கு அதற்கு தகுந்தாற்போல இருப்பிடங்களை இயற்கை அமைத்து கொடுத்திருக்கிறது.
உதாரணமாக சொல்வதென்னாறால் நுண்ணியிரி போன்ற “அமீபா” பாக்டீரியா கூட எப்படி ஒரு உயிரின் உடலில் ஒட்டி வாழ வகை செய்து கொடுத்திருக்கிறது இயற்கை. அதே போல் அது எதை கொண்டு உயிர் வாழ முடியும் என்பதையும் நிர்ணயித்து ஒட்டுண்ணி வாழ்க்கையை நிர்மானித்து கொடுக்கிறது.
இப்படித்தான் அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் வாழ்ந்து மறைந்தும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் உணவு சுழற்சியையும் அழகாக ஏற்படுத்தி உணவுக்காக ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் வைத்திருக்கிறது இயற்கை.
அப்படித்தான் மனிதனையும் இயற்கை ஒரு உயிராக படைத்து இயற்கையோடு வாழ்வதற்கு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது. மனிதனுக்கு ஒரு அறிவை அதிகமாக படைத்ததன் நோக்கமே அந்த அறிவை கொண்டு மற்ற உயிரினங்களிட மிருந்து வித்தியாசப்படவேண்டும் என்றே படைத்தது.
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட இந்த அறிவே இயற்கையின் அழிவுக்கும் காரணமாகி விட்டது என்று சொல்லலாம். உதாரணமாக பறவைகளைப் போல தனது இருப்பிடத்தை தானே உருவாக்கி கொள்ள அவனுடைய அறிவு வேலை செய்கிறது என்று வைத்து கொள்வோம். அதுவரை மனிதன் இயற்கையாய் அமைந்த காடுகளில் இருந்து மரங்களை எடுத்து இருப்பிடத்தை உருவாக்கி கொண்டிருந்தான். அல்லது குகைகளிலும் வசித்து வந்து கொண்டிருந்தான்.
அதற்கு மேல் அவனது ‘அதிகபட்ச அறிவு வேலை செய்து’ கிடைக்கும் உணவை சேமித்து வைப்பதற்கு யோசிக்க ஆரம்பித்தது. அப்படி கிடைக்கும் சேமிப்பான உணவுகளை பாதுகாக்க கிடங்குகளை ஏற்படுத்த கூடிய சூழ்நிலையும் வந்தது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் ‘சுயரூபத்தை’ காட்ட தொடங்கினார்கள். ஓடி வரும் நதி செல்லுமிடங்களெலெல்லாம் தண்ணீர் தேவையை ஏற்படுத்தி தருகிறது, ஆனால் ஏதோ ஒரு இடத்தில் வாழும் மனித இடம் அந்த தண்ணீரை சேமிக்க நினைக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறான்.
இதிலேயே இயற்கையின் வழி ஓட்ட முறையில் மாற்றம் ஏற்பட தொடங்குகிறது. இயற்கையாய் ஓடும் நதி, தடுக்கப்பட்டு அணையாக உருவாகிறது. இதனால் கடைசி இடம் வரை ஓடி கொண்டிருந்த நதி தடைபட்டு, ஓர் இடத்தில் அடைக்கப்பட்டு மனிதன் நினைத்தால்தான் அடுத்த பகுதிக்கு தண்ணீரை திறந்து விடும் வல்லமை பெற்று விடுகிறான்.
அப்படி விடும் தண்ணீரை சும்மா எப்படி விடுவது? என்று சிந்திக்கிறான். அதிலிருந்து மின்சாரம் உற்பத்தியை தொடங்கி விடுகிறான். இப்பொழுது யோசித்து பார்த்தால் கடைசி வரை ஓடி செல்லும் நதியில் எல்லா வகை உயிரினங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, அவைகள் கடைசிவரை சென்று அந்தந்த இடங்களில் இருக்கும் உயிரினங்களுக்கு தான் உணவாகவோ அல்லது இவைகளுக்கு அந்த இடத்தில் கிடைப்பவைகள் உணவாகவோ கிடைத்து கொண்டிருந்தது.
தண்ணீர் தடைபட்ட பின்னால் என்னவாகும்? அணை வரை இருக்கும் உயிரினங்கள், எப்படியோ தட்டு தடுமாறி தேங்கிய தண்ணீருக்குள் வாழ்ந்து கொள்ளும், அதற்கு அடுத்து வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்களின் எல்லைகள் தடுக்கப்பட்டு அவைகள் உயிர் பிழைக்க எங்கோ செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நாள் செல்ல செல்ல, அவைகள் அங்கேயே மடிந்தும் போய்விடும் வாய்ப்பு உண்டு.
இவை உதாரணமாக சொல்லப்பட்ட நிகழ்வு என்றாலும் இப்படித்தான், மனிதன் இயற்கையோடு முதலில் தோழமை கொள்வது போல ஆரம்பிக்கிறான்.. ஒரு சிறிய இடத்தை ஏற்படுத்தி அதில் தன்னை நிலை நிறுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக சுற்றி வர, இயற்கை ஏற்படுத்தி இருக்கும் அனைத்தும் தன்னை சார்ந்தே இருக்கவேண்டும் என்னும் மன நிலைக்கு சென்று விடுகிறான்.
இப்பொழுது தனிமனித சுரண்டல்கள் அவர்களின் வசதிக்காக அமைப்பாக்கப்பட்டு அவைகள் “அரசுகளாக” அல்லது அரசாங்கம் என்று ஆக்கப்படுகின்றன். இந்த அரசாங்கங்களை மனிதர்கள் நிர்மாணித்து அதை நிர்வாக அமைப்பாக மாற்றி ‘இயற்கை மேல் சுரண்டல்கள் செய்யப்படுவதை’ சட்டபூர்வமாக்க ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.
இந்த பூமியில் வாழும் மற்ற உயிரினங்கள் திகைத்து போய் இவர்களை எதிர்க்க முடியாமல் மனித கூட்டங்களுக்கு அடிமைகளாகவோ அல்லது அவனை விட்டு குறைந்த அளவில் இருக்கும் காட்டு புறங்களுக்கு ஓடி விடுகின்றன. அங்கும் அவைகளை வாழ விடாமல் “இன்னும் இன்னும்” என்னும் எண்ணத்தில் காடுகளை அழித்து தனக்குள் கொண்டு வந்து கொண்டுதான் இருக்கிறான் மனிதன்.
ஓரவுக்கு மனிதர்கள் இந்த பூமியில் வாழ வழி செய்து கொண்டார்கள். தங்களுக்குள் ஒரு அமைப்பையும் ஏற்படுத்தி அதை அரசாங்கம் என்றும் பெயரிட்டு கொண்டார்கள். எல்லாம் முடிந்த பின் அடுத்து சிந்திக்க ஆரம்பிக்கிறான், அவனது தேவைகளை பட்டியலிடுகிறான். 1. வாழ நல்ல வசதி அதற்காக பிரமாண்ட இருப்பிடங்கள், அந்த இருப்பிடங்களுக்குள் மனிதனுக்கு தேவையான தண்ணீர், மின்சாரம், மற்றும் சொகுசு பொருட்கள் இவைகள் தேவை. 2. இதற்கு தேவையான பொருட்கள் எங்கிருந்து பெறுவது? 3. அடுத்து அவனது நகர்வுகள், இதற்கு என்ன தேவை? வாகனங்கள், ஊர்திகள். 4. மனித தொடர்புகள் இதற்காக என்ன செய்வது? வானத்தை அண்ணாந்து பார்க்கிறான், ஓ..வானம் கூட மனிதனுக்கு சொந்தம்தானே..! அதனால் அதனையும் தகவல் தொடர்புகளுக்காக வளைத்து போடுகிறான்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் தேவைப்படுபவைகளை எப்படி பெறுவது? பூமியின் வயிற்றை பிளக்கிறான். கிடைக்கும் அத்தனையும் அள்ளி எடுக்கிறான், இன்னும் எடுத்து கொண்டே இருக்கிறான். என்றாவது ஒரு நாள்..எல்லாமே தீர்ந்து விடும் என்னும் எண்ணமின்றி..எடுக்கிறான்.
இயற்கை திடுக்கிட்டு பார்க்கிறது, பார்த்து என்ன செய்ய முடியும்? அதற்குள் கிட்டத்தட்ட அதன் பலத்தில் பாதியை மனிதன் பெற்று விட்டானே..!
மனிதன் இன்னும் பயத்தோடு இருப்பதற்கு காரணமே இயற்கையின் வலிமையை கண்டு மட்டுமே. அதற்காக தன்னை ஓரளவு பாதுகாத்து கொள்ள முயற்சிகள் செய்து கொண்டாலும் அதனுடைய வலிமை இவனைப்போல ஓராயிரம் உருப்படிகள் வந்தாலும் உருத்தெரியாமல் செய்து விடும் நீர், நெருப்பு, காற்று, மண் பிளவு, அல்லது சரிவு இவைகளை கண்டே பயப்படுகிறான்.
அதனால்தான் இயற்கையோடு உற்ற நண்பனாய் இருப்பது போல் காட்டியபடியே அதனை அனுபவிக்கும் சிந்தனையோடுதான் எப்பொழுதும் இருக்கிறான். வெளிச்சத்தில் அதன் மீது கை போட்டு காட்டியபடி இருந்தாலும் இயற்கை இன்றும் அவனிடமிருந்து தள்ளித்தான் நிற்க வேண்டும்.
இவைகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் இருக்கும் முரணான நட்புக்களே தவிர மனிதனுக்கும் மனிதனுக்கு ஏற்படும் மோதல்கள் அதனால் இயற்கையை அதிகமாக சுரண்டப்போவது நீயா நானா? இப்படிப்பட்ட போராட்டங்கள் அடுத்தடுத்து இந்த உலகத்தில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்