பலவீனமே பலம்
#பலவீனமே*
#சில_சமயம்_பலம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
கயிறு வலிமையானது
என்பதற்காக
பூ தொடுக்க முடியுமா ?
கடப்பாறை தடித்தது
என்பதற்காக
துணி தைக்க முடியுமா ?
மனம்
கல்லாக இருந்தால்
கருணை வாழ்வது எங்கே?
வீரம் பெருமையானது
என்பதற்காக
குழந்தையிடம் காட்ட முடியுமா ?
உடையாது என்பதற்காக
தகரத்தில்
தயாரிக்க முடியுமா
முகம் பார்க்கும் கண்ணாடியை...?
பலமே !
சில இடங்களில்
பலவீனமாகவும் ...
பலவீனமே
பல இடங்களில்
பலமாகவும் இருக்கிறது...
பலம் என்றாலே
பெருமையும் அல்ல...
பலவீனம் என்றாலே
சிறுமையும் அல்ல...
அவை
பெருமைப்படுவதும்
சிறுமைப்படுவதும்
இருக்கும் இடத்தை
பொறுத்துதல்ல.....
"பயன்படுத்தும்
இடத்தைப் பொருத்தது......."
*கவிதை ரசிகன்*
🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩