எட்டாக் கனிக்கு கொட்டாவி விடாதே - 2

கனி என்றால்
"வெற்றி" என்றும்
கவின் தமிழில்
பொருள் உண்டு!

சென்ற காரியம்
காயா? பழமா?
செவிப் பட
கேட்பாரும் உண்டு!

செப்பிடும் மொழிகளில்
கனிசொல் வந்தால்
சேர்த்து கொள்ளலாம் சென்றவர்
கண்டது வெற்றி என்று

எட்டும் கனியும்,
கிட்டும் கனியும்
எப்போதும் வெற்றி
என்று ஆவதுமில்லை

எவாளால் ஆதாமுக்கு
(ஏ)(கி)ட்டிய கனியும்
ஏமாற்றமே தந்ததும்
உண்மை தானே!

ஏமாந்த கனியாலே
எழில் குமரன்
எல்லோர் மனதையும்
ஈர்த்து கொண்டான்
என்பதும் உண்டுதானே!

வாகைகண்ட கனிகளும்
வரலாற்றில் நிறையவுண்டு
வாஞ்சையுடன் வரிசையில்
சொல்கின்றேன் ஓரிரண்டு!

அதியமானால்
அவ்வைக்கு வந்த கனி
அருந்தமிழை "ஆத்திசுவடி"
ஆக்கித்தானே தந்தது!

அறிவியல் அதிசயங்கள்
ஆயிரமாயிரம் கண்டதும்
அன்றுஒருநாள் நியூட்டன்
தலையில் விழுந்த கனிதானே!

எட்டும் கனி என்றாலும்,
எட்டாக் கனி என்றாலும்
கொட்டாவி மட்டும் விடாமல்
எடுத்து வைப்போம்
அடுத்தடுத்த முயற்சிகளை

என்றாவது ஒருநாள் கட்டாயம்
வசப்படும் அந்த வானமும் தான்!

எழுதியவர் : நா. தியாகராஜன் ஈஞ்சம்பாக்கம், சென்னை (3-Sep-24, 12:13 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 42

மேலே