கருணை மலர் - 02

கருணை மலர் - 02

இயற்கை ஏதேனும் அதிசயங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கும்.
அப்படித்தான் என்றென்றும் மாறாத பிரபஞ்ச அதிசயம் நீ.‌

பயணத்திலும் வாழ்க்கையிலும்
ஒற்றைப்பட்டுப் போவது
எனக்குப் பிடித்திருக்கும்.

பேசுவதற்கும் பழகுவதற்கும்
நிறைய நேரங்கள் இருக்கும்.
கொஞ்சம் போயி பேசிருக்கலாம்தான்
பழகி இருக்கலாம்தான்
ஏனோ அதில்
கொஞ்சமாக குறைவைத்து
விலகிவிடவேண்டுமாய்த் தோன்றும்.

பெரிதாக ஏதும் சொல்லிக் கொள்ளாமல்
அருகவும் செய்யாமல்
தீராவெறுப்பாக இருந்துவிடாமல் அங்கங்கே நினைவுக் கொத்திப்போகிறேன்
அடையாளங்கள் ஏதுமின்றி.

இப்போதெல்லாம் நாம்
ஒருவரை ஒருவர்
சந்தித்துக் கொள்வதே இல்லை
யாரோப்போல
பேசிக் கொள்வதும் இல்லை
அலமாரியில்
எப்போதாவது திறந்துபார்த்து
பத்திரப் படுத்திவைக்கிற
நினைவுப் பொருட்கள் போல
சிலநாள் பிரிவும்
அதன் பிறகான சந்திப்பும்
அலாதியாகிவிட்டது.
"என் அன்றாடங்களுடன் ஒன்றியிருக்கிறாய்"

அழகாய்ப் பிறந்துவிட்ட
இந்த ஜென்மம் கூட
பாழாகிப் போகிறதே !
கலாச்சாரம் மறந்த இடங்களுக்குள்
கனவு வழியிலாவதுச் சென்று
கொஞ்சம் ஸ்பரிசித்துக் கொள்ளலாமா ?
அருகில் வந்து இருப்பதற்காய்
ஒரு இடம் பிடிக்கலாமா ?
அதிகம் நெருக்கமாகலாமா ம் ?
சற்று இறுக்கமாக அள்ளிக்கொள்ள
அடம்தான் பிடிக்கலாமா ம் ?
இப்படி எதுவுமே
வேண்டாமென்றால்
என் ஆசைக்குதான் எல்லையிடலாமா ?

நீ வாழ்ந்து செல்லும் இடங்களையாவது
இனி சொல்லிவிட்டுப்போ.
திரும்பி வரும் நேரத்திற்குள்
உன் வாசமுடன்
உயிர்த்தொட்ட இடங்களையெல்லாம்
நந்தவனம் செய்கிறேன்.
உன் கிறுக்குத் தனங்களையெல்லாம்
நீ சொல்லிக் கொள்ளவாவது
உடன் இருக்கிறேன்.

நீ பிறந்தநாளிலாவது
பூக்களாகிப் பூக்கிறேன்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (8-Sep-24, 3:00 am)
பார்வை : 46

புதிய படைப்புகள்

மேலே