பொறுத்தருள்வாய் புத்தனே
பொறுத்தருள்வாய் புத்தனே!
போதிமரம் நாடி, போதிய ஞானம்தேடி,
பொழிந்த அருளொளியை, பூமியெங்கும் பரப்பிய
துறவற தர்மத்தின் தூணான உன்னை
துருவி துளையிட்டு விசாரணை செய்வதற்கு
ஆம்,
மணிமுடி துறந்து, மரவுரி தரித்து
மண், பொன், மங்கை ஆசை துறந்தாய்
மனைவியை மட்டும் மன்றாட வைத்தது
மண்ணில் இல்லற தர்மத்தை புதைத்தாய்
அரண்மனை ஒருபுறம், ஆணாதிக்கம் மறுபுறம்
அன்னை யசோதரையின் அழுகுரலுக்கு என்சொல்வாய்?
அரசவாழ்வை தள்ளி, ஆண்டியின் கோலமிட்டாள்
அறமென எண்ணியே அவள் உயிரை தாங்கிநின்றாள்
பதிநீ சென்றபின்னும் பாரம் ஏற்றுக்கொண்டாள்
பதின்வயது மகனை பார்போற்ற வளர்த்தாள்
அவள்காத்த இல்லற தர்மமே - அவனியில்
அனுதினமும் பெரிதென கொண்டேன் நான்.
"ஆசையை திறந்துவிடு" அறைக்கூவலிட்ட உன்னைவிட
தன்ஆசை ஒடுக்கி தவக்கோலம் நின்றவளை தாயென கண்டேன்
மீண்டும் ஒருமுறை
பொறுத்தருள்வாய் புத்தனே!