சில்மொழி, பேதைவாய் முள்எயிறு ஏய்ப்ப, வடிந்து - கார் நாற்பது 21

நேரிசை வெண்பா
(ல் ள் இடையின எதுகை)

பொறிமாண் புனைதிண்தேர் போந்த வழியே
சிறுமுல்லைப் போதுவெல்லாம், செவ்வி - நறுநுதல்,
செல்வ மழைத்தடங்கண், சில்மொழி, பேதைவாய்
முள்எயிறு ஏய்ப்ப, வடிந்து! 21

- கார் நாற்பது

பொருளுரை:

எந்திரச் செய்கைகளான் மாட்சிமைப் பட்ட அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர் வந்த வழியிதே, சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம் கூர்மையுற்று செவ்விய அழகிய நெற்றியையும், வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சிலவாகிய மொழியினையுமுடைய மடவாளது வாயின்கண் உள்ள கூரிய பற்களை ஒவ்வா நிற்கும்!

சின்மொழி - மெல்லிய மொழியுமாம். ‘முள்ளெயிறொக்க வடிவுபட்டு' என்று பொருளுரைத்து, ‘நின்றது' என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர்! இப்பொருளில் ‘ஏய்ப்ப' என்பது வினையெச்சம்!

எழுதியவர் : மதுரைக் கண்ணங் கூத்தனார் (20-Sep-25, 8:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே