தனி மனித தியாகங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும்
சந்தனத்தை இழைத்தால்தான் வாசம் எட்டும்
சரித்திரத்தை படித்தால்தான் உலகம் கிட்டும்
வந்திட்ட நாமெல்லாம் பிறர்க்கு என்று
வாழ்ந்தால்தான் பிறவிப்பயன் வாழ்வில் கிட்டும்
பொந்திருக்கும் கரையான்கள் புற்று கட்டி
புகுகின்ற பாம்பிற்கு தந்து நிற்கும்
மந்தையிலே ஓர்ஆடு தொலைந்து போனால்
மற்றாடு குரல் கொடுத்து அழைத்துப்பார்க்கும்
அன்புக்கு அடையாளம் பகிர்ந்து உண்ணல்
ஆசைக்கு அடையாளம் பதுக்கி வைத்தல்
இன்பத்தின் அடையாளம் பிறர்க்கு ஈதல்
இரக்கத்தின் அடையாளம் இணைந்து வாழ்தல்
மண்பதையில் மானிடர்கள் புரிந்து கொண்டால்
மாறிவிடும் சமுதாயம் வெற்றி கிட்டும்
வன்முறையை கண்டுநாம் ஒதுங்கி சென்றால்
வளர்ந்துவிடும் சுயநலத்தின் கூட்டம் இங்கே
நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை என்றால்
நலிந்துவரும் ஏழைக்கு உதவி செய்தல்
கூட்டுக்குள் அடைந்திருக்கும் பறவை தன்னை
குறிப்பறிந்து சுதந்திரமாய் பறக்க வைத்தல்
பாட்டுக்கும் பண்ணுக்கும் நன்மை என்றால்
பயின்றுவந்து ஒன்றாக கலந்து நிற்றல்
கேடுய்குதை நெஞ்சினிலே வைக்க வேண்டும்
கேளிராய் நாமெல்லாம் இருக்க வேண்டும்
அண்டையிலே தவிப்பவரை மறந்து விட்டு
அறச்செயல்கள் செய்வதினால் பயன்கள் இல்லை
சண்டையிலே உதிரத்தை ஓட விட்டு
சமத்துவங்கள் பேசுவதால் நன்மை இல்லை
மண்டையிலே மூளையுள்ள மனிதர் எல்லாம்
மற்றவர்க்கு உதவுவதே அறங்கள் ஆகும்
கண்டிருந்தும் பிறர் துன்பம் ஒதுங்கிசென்றால்
கற்றதற்கு பொருளொன்றும் உலகில் இல்லை
ஒருநாட்டு மக்களுக்குள் பேதம் சொல்லி
உருவாக்கும் கலவரத்தை தள்ளி வைப்போம்
திருநாட்டில் வளர்கின்ற கொடுமை கண்டால்
திரண்டின்கே நாமொன்றாய் கொள்ளி வைப்போம்
இருக்கின்ற சாதிகளை தள்ளி வைத்து
இனியேனும் பொதுநலத்தில் ஆர்வம் வைப்போம்
கருக்கொண்ட நாள் முதலாய் காணுகின்ற
கட்சிகளின் அரசியலை கிள்ளி வைப்போம்