அம்மா!
அப்பாவுக்கு தெரிந்து ஐந்தும்,
தெரியாமல் பத்தும்,
கொடுக்கும்போதெல்லாம் உணர்வேன்
எனக்கு ஏன் உன்னை பிடிக்குமென்று!
உங்க பையன் படிக்க மாட்டேங்கறான்
மக்கா இருக்கானே
என்று ஆசிரியர் புகார் கூறுவார்
நீ மட்டும் வீட்டில் வந்து
அவரை மனதிற்குள் திட்டுவாய்
உன் கண்கள் மூலம் கேட்டிருக்கிறேன்
நான் உண்ணும்போது உன் கண்களில்
தெரிகின்ற அந்த சந்தோஷ மின்னலை
நான், நீ உண்ணும் போது பார்த்ததே இல்லை
அதென்ன ஆளாளுக்கு அடிக்கும் போது
நீ மட்டும் என்னை அணைத்து
சமாதானம் சொல்கிறாய்?
எனக்கு பிடிக்காது என்பதற்காக
நீ பாகற்காய் உண்பதில்லை.
அந்த காரணத்திற்காகவே
எனக்கு அதை மிகப் பிடிக்கும்
படித்தாயா - இது அப்பா
சாப்பிட்டாயா - இது நீ
அம்மா என்று நான் முதல் முறை
அழைத்த போது
நீ எப்படி முகம் மலர்ந்தாய்
என்பது அப்பா சொல்லும் போது
அவர் கண்களில் தெரியும்
நான் படிக்க நீ தூங்காத நாட்களே அதிகம்!