மன்னிக்கப்பட்டும் பாவகுமாரர்கள்...??!






நீங்கள்
மீளாத்துயரிலிருந்து
மீட்கப்படுவதற்காய்..
மீளாத்துயிலிருந்தும்
மீண்டெழுந்தான்
தேவகுமாரன்..

நீங்களோ
கனவுகளின் லாயத்தில்
கட்டப்பட்ட
குதிரைகளாய்
நேற்றும், இன்றும், நாளையும்
எப்பொழுதுமே....
ஒட்டடையடித்துக்கிடக்கிறது
உங்களின்
கண்களில் மட்டுமல்ல..
இதயங்களிலும்..!!

ப்ரார்த்தனைகளின்போது
நீங்கள்
நெஞ்சுதொட்டு
சிலுவைக்குறியிடுகையிலும்கூட
உங்களின்
முதுகுபிளந்து
எட்டிப்பார்க்கிறது
சாத்தானின் முகம்...!!!


சிலுவையில்
வடிந்த
குருதியிலும்
படிந்தது
உங்களின்
பாவங்களை
கறை.... .!!


ஸ்வயம்
இழந்தவர்களே....
நல்லவேளை
உங்களிடையே
பிறக்கவில்லை
புத்தன்

பிறந்திருந்தால்
போதிமரத்தடியில்
பிறந்த
அவனின் ஞானத்திற்கும்
காப்புரிமையை
வாங்கி
களவாடியிருப்பீர்கள்..


பக்கத்துவீட்டுக்காரனோடு
துவேசிப்பதற்காய்.....
எல்லைதாண்டி
விழும்
அவனின்
மர நிழல்கூட போதுமானதாயிருக்கிறது
உங்களுக்கு !


மனைவியோடு
நடந்துபோகையிலும்
கடந்துபோகிற
இளம்பெண்ணின்
சேலையில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
தூசியும்
உங்களின் மனசும்....

அலுவலகத்தில்
பேருந்தில்
திருமணத்தில்
இங்கும்,அங்கும்
சந்திக்கிற
எல்லோரிடத்தும்
கைகுலுக்கி
கொள்கிறீர்கள்
மனசைக்
கழற்றிவைத்துவிட்டு....

சொர்க்கத்திற்குள்ளுமே
குடிசை...
உங்களுக்கான
எல்லைகளை
விட்டுவிடுவீர்களா
என்ன....?

ஸ்வயம்
இழந்தவர்களே...
மன்னிக்கப்பட்டும்
பாவகுமாரர்களே...
பிதாமகனோ
புத்தனோ
சாக்ரடீசோ
இன்னுமோர்முறை
உங்களின்
வீதிகளில்
என்றாவது
நடந்துபோனால்
அடையாளம்
கண்டுவிடாதீர்கள்....

ஏனென்றால்...
ஏனென்றால்.....
எப்பொழுதுமே
நீங்கள்
நீங்களாயிருக்காதவர்கள்தானே...!!?

எழுதியவர் : muruganandan (30-Nov-11, 9:24 pm)
பார்வை : 215

மேலே