மழைக்கவிஞன்

வாடி நின்ற மரங்களுக்கு
வைத்தியம் பார்க்க வேண்டி
வான மருத்துவன் அனுப்பும்
ஊசி மருந்துகளோ ..!

கூடி நின்ற மேகமும்
நாடி வந்த தென்றலும்
கொஞ்சியுறவு கொண்டதால்
பிரசவித்த பிள்ளையோ ..!

நிலப் பெண்ணுடன்
நீல வானம்
உறவு கொள்ளத் துடித்து
உமிழும் விந்துத் துளிகளோ ..!

விலங்கினின்று திரிந்த
மனிதன் மீண்டும்
மிருகமானதற்கு வான்
சிந்தும் கண்ணீர்த் துளிகளோ ..!

ராக்கெட்டுகள் தம் நகங்களால்
தேகம் கிழித்ததால்
வலியால் வான் சிந்தும்
ரத்தத் துளிகளோ ..!

ரத்தமெனில் சிவப்பே
கண்ணீர் எனில் கரிப்பே
அப்படியெனில்
எதுவாயிருக்கும் மழையே உன் பிறப்பு,,!

ஒருவேளை வானக்குளம்
நிரம்பி வழிகிறதோ
இல்லையெனில் இறைவன்
பூமிக்கு வந்து போகும்
ஏணிப் பாலமோ..!

மறைந்து நின்று
அத்தனை கோள்களும்
குளித்தனுப்பும் தண்ணீரோ
நிலவுப் பெண்ணுதிர்க்கும்
மல்லிகைப் பூக்களோ..!

நாணத்தால் மேகக்
கைக்குட்டை கொண்டு
நிலவு தன் முகம் மூடும் போது
சிந்தும் வெட்கத் துளிகளோ..!

எதுவாயுமிருக்கட்டும்
உன் பிறப்பு
புவிக்கு அது சிறப்பு..!

மரம் விழுந்து இலை
வ்ழி வழிவதழகு
மண்ணோடு கலப்பதழகு
மண்ணோடு கலப்பதனால்
பிறக்கின்ற மணம் அழகு
அகண்ட ஆகாயம் பிறந்து
அணைக்குள் அடங்குவதழகு..!

கொஞ்சம் சிந்திட்டு
பஞ்சம் தரும் போதும்
பள்ளம் நிறைத்திட்டு
வெள்ளம் தரும் போதும்
அழகு மழையே உன் மீது
கொஞ்சம் கோபம் வரும்..!

மழையே உனக்கு
மூன்று வேண்டுகோள்
அளவாய்ப் பெய்திடு
காலத்திற்கு வந்திடு
கோடைக்குப் போய்விடு..!

எவனடா இவன்
எனக்கு வேண்டுகோள்
விடுக்கவென்று தானே நினைக்கிறாய்
நீ சிந்தும் பொழுதுகளிலெல்லாம்
நனையத் துடிக்கும்
இவனுமொரு மழைக்கவிஞன் .....!!!

எழுதியவர் : ஆண்டனி @ சலோப்ரியன் (3-Dec-11, 3:46 pm)
பார்வை : 255

மேலே