இன்றைய சமூக சிக்கல்களுக்கு தீர்வு ” வேதாத்திரியம் ”
வேதாத்திரியம் . ஏன் அவசியம்?
கடந்த 200 ஆண்டுகளில் ஏற்ப்பட்ட மிதமிஞ்சிய அறிவியல் முன்னேற்றத்தினால் இதோ.... நிலவைத்தாண்டியும் , அண்டத்தின் எல்லையை நோக்கி வேகமாக நம்முடைய பயணமானது தொடர்ந்துகொண்டிருக்கிறது....ஒரு நொடி கூட நிற்க நேரம் இல்லாமல் ! ஒரு நிமிடத்திற்கு 1,86,000 கிமீ பயணம் செய்யும் ஒளியைக்கூட , இன்னும் சில வருடங்களில் எட்டிப்பிடிக்கவும் கூடும் நமது விண்கலங்கள்...! இருந்த இடத்திலேயே நம் கைக்குள்ளே உலகம் கணணியின் வழியாகவும் , அலைபேசியின் வழியாகவும் கட்டுப்பட்டிருக்கிறது. பாரதி கனவுகண்டபடி
“ காசி நகர் புலவர் பேசும் உரைதனைக்
காஞ்சியில் கேட்க ஒருகருவி செய்” தாகி
நூறாண்டுகளாகி விட்டது. இதற்கும் ஒருபடி மேலே போய் “ குளோனிங்” முறையில் , பல்லாயிரக்கணக்கான ஆண்டுக்களுக்கு முன்பிருந்த விலங்கினைக்கூட உருவாக்கிடமுடியும் என்று கண்டறிந்ததன் மூலம் , இறைவனுக்கே சவால் விடக்கூடிய சாமர்த்தியத்தை காட்டியிருக்கிறான் மனிதன்......
எல்லாவிதமான தேவைகளுக்கும் ஆயிரக்கணக்கான கருவிகளின் கண்டுபிடிப்புகளின் மூலம் வாழ்க்கை எளிதாகவும், இலகுவாகவும் மாறித்தான் போயிருக்கிறது.... மனித வாழ்க்கையின் தரம் உயர்ந்திருக்கிறது சரி... மனிதனின் தரம் உயர்ந்திருக்கிறதா......? சமுதாயத்தின் அடிப்படை அலகு மனிதன்...ஆயிரக்கணக்கான மனிதர்களின் கூட்டமே சமுதாயம் .. ஆக ,இந்த சமுதாயத்தின் தரமும் இயற்கையாகவே உயர்ந்திருக்கத்தானே வேண்டும்.... ஆனால் இம்மி அளவேனும் உயரவில்லையே...? இன்னும் சொல்லப் போனால் ,இந்த விஞ்ஞானயுகத்திற்கு முன்புகூட அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருந்த மானுட சமுதாயம்.. இன்றைக்கு சீர்கெட்டு , சிதிலமடைந்து போன சிற்பமாய் இருப்பதைக் கண்கூடாக காண்கிறோம்..
“ யாதும் ஊரே யாவரும் கேளீர் “
என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே உரக்க குரல்கொடுத்த கணியன் பூங்குன்றனாரின் அற்புத உலகம் கண்முன்னே விரிவது சாத்தியம்தானா...? இந்த அவலத்தினை எப்படி போக்குவது..? இதற்கான தீர்வுதான் என்ன...? வேதாத்திரியமே..
இதற்கான ஒரே தீர்வு...
வேதாத்திரியமே இனி மானுட வேதம்.. !
வேதாத்திரியம் வெறும் தத்துவமா... ?
பல்வேறு காலகட்டங்களிலே புத்தர்,ஜைனர்,கிறிஸ்து, நபிகள்,சங்கரர் என பல மகான்களும்,ஞானிகளும்,வேதாந்தவாதிகளும் தோன்றி தங்களது உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் ஈந்து இன்னலுற்று,வேதனையுற்று மானுட சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பாடுபட்டிருக்கிறார்கள்..
”அன்பிலே மலருங்கள்” என்று அன்பினை அடிப்படை தத்துவமாக கொண்டு கிறித்துவம் மலர்ந்தது. ’’இறையச்சமுள்ளவருக்கே வான் நாடு ” என்று அறைக்கூவிக்கொண்டு இசுலாம் தத்துவம் ஜனித்தது. “ ஆசைகளை அறவே ஒழி”க்கச்சொல்லி புத்த தத்துவம் இன்பமயமாக இருக்க வழிகாட்டியது. இருந்தாலும், “வாராது வந்த மாமணியாய்” ,எல்லாவிதமான துயரங்களையும் சூரியனைக்கண்ட பனியாய் துடைத்தெரியும் ”வேதாத்திரியம் ” என்கிற ஒரு அற்புத தத்துவத்தினை மானுட குலத்திற்கு தந்து மானுட சமுதாயத்தினை உய்விக்க ஒரு ஞானசூர்யனாய் வந்தவர் மகரிக்ஷி...
வேதாத்திரியம் வெறும் தத்துவமாக மட்டுமே இல்லாமல்,இந்த தத்துவத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையிலே பயின்றிடவும், பின்பற்றிடவும் “ உடல்பயிற்சி ,யோகா, அகத்தாய்வு, தவம், காயகல்பம், குண்டலினி என்கிற மனவளக்கலை” ஆகிய பயிற்சி முறைகளையும் அதனது அங்கங்களாக கொண்டிருக்கிறது.. ” உய்யும் வழியை காண்பித்தால் மட்டும் போதாது.. வழித்துணைவனாகவும் வருகிறேன் ..எனது பயிற்சிமுறைகளின் மூலம்“ என்கிற வேதாத்திரிய தத்துவத்தின் மாண்புதான் என்னே....?
ஆலகால விடமாய் சீறிவரும் சமுதாயச் சீர்கேடு என்கிற மாயை மனித இனத்தையே வெட்டிச் சாய்க்க முயல்கிறபோதும் , “அச்சமுறேல் .. நானிருக்கிறேன்” ...என்று அபயம் தந்து ஆபத்பாந்தவனாய் ஓடோடியும் முன்னே வருகிறது வேதாத்திரியம்... !
நோய் நாடி நோய் முதல் நாடி...
3 இலட்சத்திற்கும் அதிகமாக நோய்களை இதுவரை கண்டறிந்திருக்கிறார்கள் ..அதற்கு இணையாக மருந்துகளூம கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகள் ஒரு சிலரின் கைகளில்.. இன்னொரு புறமோ.. கோடிக்கணக்கான மனிதர்கள் வறுமை என்கிற மிகக்கொடிய அரக்கனின் கையில் விளையாட்டுப்பொம்மையாய.. ”வெந்ததை தின்று விதி வைந்தால் சாகும்” ஆட்டு மந்தையாய்... உலகில் கல்வி கற்றவர்களின் விகிதமோ 50 ஆண்டுகளுக்கு முன் 25% சதவீதமாக இருந்தது.. இன்றோ 60% சதவீதத்துக்கும் மேலே...என்ன பிரயோசனம்..? முடியாட்சியும், எதேச்சதிகாரமும் காணமல் போய்.. மக்களாட்சியைத்தான் எங்கும் காண்கிறோம்.. எல்லாமும் மாறிவிட்டது,முன்னேற்றம் வந்தாகி விட்டது.... எல்லாம் சரி.. ? பிறகு ஏன் சமுதாயம் இன்னும் கீழ் நிலைக்கு , அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டது.. ?
நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
வள்ளுவனின் தெய்வீக வாக்கின்படி , இன்றைய சமுதாயத்தின் சீர்கேட்டிற்கு என்ன காரணம் என்று ஆணிவேரை கண்டறிந்து அதை அழகாக சொல்கிறார் மகரிக்ஷி தன்னுடைய உலக அமைதி நூலில்....
” பொறிபுலன்கள் உடற்கருவி அமைப்பைக்கொண்டு
புதிதுபுதிதாக கருவி அமைத்துக்கொண்டு
அறிவோடு சுகாதாரம் பொருளாதாரம்
அரசியல் விஞ்ஞானம் ஐந்தறிந்தும்
நெறியுடனே ஒவ்வொன்றும் மற்றவைக்கு
நேர்முரணாய் இயங்காத முறை காணாது
சிறிது பெரிதாய் சிக்கல் மேலும் மேலும்
சேர்த்துக்கொண்டே மனிதன் கவலை பெற்றான்.
ஐம்புலன்கள்,உடல்கருவிகள்,இவைகளின் உயர்தரமான அமைப்பைக்கொண்டு
புதுப்புது முறைகளில் பலவிதமான உபகருவிகள், யந்திரங்கள் செய்து கொண்டு மனிதர்கள் வாழ்கிறார்கள். மானுட வாழ்க்கையின் அடிப்படை அங்கங்களான மனோத்தத்துவம், சுகாதாரம் ,பொருளாதாரம் , அரசியல், விஞ்ஞானம் ஆகியவற்றில் மேலும்,மேலும் அறிவின் மேன்மையால் உயர்ச்சி இன்று காணப்படுகிறது..
ஆனால் மேல் குறிப்பிட்ட 5 அடிப்படை காரணிகளும் தனித்தனியாக மேம்பாடு அடைந்திருந்தாலும், ஒன்றின் மேம்பாடு , மற்றதை பாதிக்காமல் ,ஒருமித்த முறையிலே ,ஏகோபித்த வகையிலே வளர்ச்சி காணப்படாததன் காரணத்தினாலேயே பல சிக்கல்கள் தோன்றி , உலகம் முழுதும் இன்று துன்ப இருள் சூழ்ந்திருக்கிறது என்ற உண்மையை மேலே சொன்ன பாடலில் அழகாக எடுத்துரைக்கிறது வேதாத்திரியம். இவைக்களுக்குள் ஒரு சரிவிகித வளர்ச்சி ( BALANCED GROWTH ) ஏற்படுகிறபொழுது சமுதாயம் எல்லையில்லாத மகிழ்ச்சிக்கடலில் கலப்பதற்கு வழி பிறக்கிறது... சமுதாயத்தின் அலகுகளான ஒவ்வொரு தனிமனிதனையும் சரிசெய்வதன்மூலம்தான் , அக சமன்பாட்டின் மூலம்தான் , இது சாத்தியமென்கிறார் மகரிக்ஷி....
“ உள்ளே இருப்பதுதான் வெளியே வரும்”
என்கிற ஒரு பொன்மொழிக்கிணங்க மனிதனின் உள்புறத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம், சீரமைப்பதன் மூலம் அவனது அகம் முழுமைபெற, அதனோடு தொடர்புடைய புறமும் .. அதாவது சமுதாயமும் , அதனுடைய சரியான இயல்பிலே அமைக்கப்படுகிறது.. அகிலமே அன்பில் மலர்கிறது... இந்த அதிசயத்தைதான் வேதாத்திரியம் சாதித்துகாட்டுகிறது..
எது சரியான சமுதாயம்... ?
அணிகளும்,மணிகளும் நிறைந்து செல்வத்திலேயும்,போகத்திலேயும் கொழிக்கின்ற ஒரு சமுதாயமா மானுடம் தேடும் சமுதாயம்.. ? அப்படியென்றால் ஏன் மேல் நாட்டு சமுதாய வாழ்க்கை இன்று வெற்றிபெறவில்லை.. ? அகிலத்தினையே தன் கைக்குள்ளாக அடக்கி வைத்திருக்கும் அமெரிக்க வாழ்வியல் ஏன் வெற்றி பெறவில்லை.. ?அரை நொடியில் ஆறுமுறை உலகத்தினையே அழிக்க கூடிய அணுகுண்டுகளை கைவசம் வைத்திருக்கும் அமெரிக்க தேசம் மட்டுமல்ல ... கலாசாரத்தின் உச்சியிலே கொடிபிடித்து நின்றுகொண்டிருக்கிற இதுமாதிரியான் மேற்கத்திய நாடுகள் அனைத்துமே ஒரு வளமையான , நேசமான, இறுக்கமில்லாத சமுதாயத்தை இன்றுவரை ஏன் உருவாக்க இயலவில்லை.. ? ஆழமாக சிந்தித்தோமானால் .....மறைந்திருக்கும் உண்மை நமக்கு புலப்படும்..
மனிதன், தான் படைக்கப்பட்டதன் நோக்கத்தினை புரிந்துகொள்ளாமல், அடிப்படையையே மறந்ததின் காரணத்திலேதான் ஒட்டுமொத்த சமுதாயமே சீர்கெட்டுப்போயிருக்கிறது என்பது புலனாகும்... கைப்புண்ணிற்கு கண்ணாடி வேண்டுமா என்ன... ?
அழகாகச்சொல்லுவார் வள்ளுவர்
“ அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல “
அறமே அடிப்படை மானுட சமுதாயத்திற்கு.. அறம் தவிர்த்த இன்னபிற முன்னேற்றங்கள் அனைத்துமே ”பிணத்திற்கு அலங்காரம் செய்கின்ற பணி”யேயல்லாது வேறேன்ன...? இன்றைய மேல் நாட்டு சமுதாயம் இந்த அடிப்படையை மறந்து போனதின் விளைவு... குடும்ப உறவுகள் கேலிக்குரியதாய்... தந்தை, தாய் என்பதே விளையாட்டுபொருள் போல கைமாற்றிக்கொள்கிற ஒன்றாய் ... காதல் ,அன்பு , பாசம் என்பதெல்லாம் கண நேரத்தில் கண்ணைப்பறிக்கிற மின்னலாய் போனதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்...
காலங்காலமாய் நம் தேசத்தின் அடிப்படை அறமாய்த்தானிருந்தது... இதிலிருந்து மாறுபட்டு ... மெல்ல, மெல்ல ...பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம்தின்னும் என்பதுபோல மேலை நாகரிக மோகத்தால் , நாமும் நம் சுயத்தை இழந்து கொண்டிருக்கிறோம் அறியாமலேயே...
அறம் சார்ந்த மனித வாழ்வின் தத்துவத்தை ஆராய்ச்சியின் மூலம் காண அறைகூவல் விடுக்கிறார் வேதாத்திரி .....
” மனிதனின் பெருமதிப்பை மனிதன் காணா
மயக்கத்தால் எண்ணிறந்த பல குற்றங்கள்
மனிதரிடை அதிகரித்து இனிய வாழ்வை
மாசுபடுத்தி துன்பம் பெருகக் கண்டோம். “
மனிதப்பிறப்பின் தத்துவத்தை .. மனிதன் அறிந்துகொள்ளவேண்டியதே உடனடியாக மனித சமுதாயம் செய்ய வேண்டியது என்று ஆணித்தரமாக வலியுருத்துகிறார் மகரிக்ஷி.
’’அறம்கூறும் நல்லுலகு” , பொருள்மயமானதன் விளைவு.. அறம் என்கிற அடித்தளம் ஆட்டம் கண்டால் , பொருளால் செய்யப்பட்ட அந்த சமுதாயத்தில் துன்பம் தானே மீந்திருக்கும்.. ???? மொத்த சமுதாயமும் இந்த பேருண்மையை புரிந்துகொண்டு, அறத்தினை நோக்கி ஒரு வாழ்க்கை முறைக்கு மாற .... வேதாத்திரியம் சாலவும் துணை நிற்கிறது.
சமுதாய அலகுகளை சரிசெய்யும் வேதாத்திரியம்
சமுதாயத்தின் அடிப்படை அலகு தனிமனிதர்கள். இந்த தனிமனிதர்களை சரிசெய்தாலே சமுதாயம் சரியாகும் என்பதில் வேதாத்திரியம் உறுதியாக நிற்கிறது. திருமுறை சொல்லும்..
உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
கள்ளப்புலனைந்தும் காளாமணிவிளக்கே”
உடல் வலிமையற்றுபோயிருக்கிற மனிதன் என்ன செயலை செய்யமுடியும்..?
”வேத அப்பியாசத்திலே கவனம் செலுத்துவதைவிட கால்பந்து மைதானத்தில் நீங்கள் விளையாடுவதையே நான் முதலில் வரவேற்கிறேன். உடலில் உறுதி பெறுங்கள்.ஆண்மையின் அடையாளம் உடல் உறுதி .இந்த தேசத்திற்கு இன்றைய தேவை சத்வ குணமல்ல.. ரஜோ குணம் “
-என்ற இந்தியாவின் ஆன்மீக சூரியன் விவேகானந்தரின் அறைகூவலை முழுமையாக உள்வாங்கிக்கொண்டதால்தான் தேக வலிவினை தன்னுடைய மனவளப்பயிற்சியின் முதல் படிக்கட்டாக வைத்தார் மகரிக்ஷி.
” பொத்தலுள்ள பாத்திரத்தில் நீர் சேமித்தால்
போக்கின் அளவிற்கேற்ப குறையக்காண்போம் “
மகரிக்ஷியின் இந்த வார்த்தைகள் இந்த அடிப்படையைத்தான் சுட்டிக்காட்டுகிறது. செயலிற்கு ஆதாரமான மனிதனின் உடம்பு என்கிற பாத்திரம் வலிமை ,எண்ணம்,சொல் இவற்றின் வலிவில்லாததாலே பொத்தலானால்... என்னவாகும்...மனிதனின் நிலை.. ??
உடலை மேம்படுத்திய பிறகு மனதின் ஆற்றலை கூட்டும் மனப்பயிற்சிக்கு வருகிறது... மனதை வளப்படுத்த தவத்தையும், அகத்தாய்வுகளையும் மேற்கொள்கிறது வேதாத்திரியம். இது மேல்முகமான பயணத்தின் அடுத்த படிக்கட்டுகள்.
எண்ணங்களே செயலாக மாறுவதினாலே... கன்றுக்கு கடிவாளம் எப்படி முக்கியமோ அதுபோல எண்ணங்களை தீவிரமாக ஆய்ந்து , தேவையில்லாத எண்ணங்க்ளை உடனடியாக நீக்கிவிட சொல்கிறது வேதாத்திரியம் “ எண்ணம் ஆராய்தலில்”. பிறகு ஆசைகளை சீரமைத்தல்,சினம் தவிர்த்தல் என்கிற பயிற்சிகளை முழுமையாக கற்றுக்கொள்கிறபோது கணவனுக்கும்,மனைவிக்குமான புனிதமான குடும்ப உறவுகள் பனிவிலகிய மல்லிகை மொட்டுக்களாய் விரிந்திட ... வேறு புறக்காரணிகள் இனியும் குடும்பங்களை சீர்குலைக்க முடியுமா என்ன.. ? இன்றைய பெரும்பாலான குடும்பங்களில் ஏன் பிரிவினை...? எது காரணம்.. ? தன்முனைப்புதானே( EG0).. !!? பலவிதமான தவங்களில் மனதைச்செலுத்தி பயின்றிட , தன்முனைப்பு அடி ஆழத்தில் புதைந்துபோக, மனைவிக்கும் , கணவனுக்கும் ஏது பிணக்கு.. ?
”பகைவனையும் வாழ்த்துங்கள்” என்று வாழ்த்துகிறபொழுது எதிரிகளை வெல்லும் ரகசியத்தை சொல்லித்தருகிறது வேதாத்திரியம் . பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே “ என்பான் பாரதி. ஞானிகளுக்கு மட்டுமே ,மிகுந்த அப்பியாசத்திற்கு பிறகு வருகிற இந்த தெய்வீக குணத்தை பயிற்சியாளர்கள் அனைவருமே பெறமுடியும் என்கிற போது.. .. எதிரிகளை எங்கே தேடுவது...? நாடுகளை பிரிக்கும் எல்லைக்கோடுகள காணமல்போகாதா என்ன.... ?
உயிரின் வளத்தை காயகல்ப பயிற்சியின் மூலம் கூட்டுவிக்கிறது வேதாத்திரியம்.
ஆக , உடலை,உள்ளத்தை, உயிரை பல்வேறு பயிற்சிகளின் மூலம்
ஒளிவிடச்செய்த பிறகே ..மனிதனை மனிதனாக முழுமையாக்கிய பிறகே..
சமுதாயத்தின் உன்னத இலக்கான ஒருலகச்சமுதாயம் என்கிற ஒரு ஒப்பற்ற
பேரலகிற்கு வழி கோலுகிறாது வேதாத்திரியம் ... மெல்ல,மெல்ல தன் அன்பினாலே
குழந்தையை தன்வயப்படுத்தும் தாயினைப்போல .. மனிதனின்
தோல்விகளிலேயும்,தளர்விலேயும் அவனது கரம்பிடித்து,சமுகச் சீர்கேட்டிலே சவமாய் கிடந்தவனை , குண்டலினி சக்தியால் ஆற்றல் பெருக்கி சரிசெய்து , வழி நடத்திச்செல்கிறது வேதாத்திரியம்...
இளைஞர்களுக்கு வழித்துணை வேதாத்திரியம்
வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே பயின்று , வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்கள் வருகிறபொழுது , தடுமாறி , தடம்மாறி, சின்னாபின்னமாக சீர்குலைகிறது இன்றைய இளைய சமுதாயம் . தொலைக்காட்சி, சினிமா என்கிற கண்கவரும் திசைதிருப்பிகள் ஒருபுறம், கவர்ச்சி என்கிற காதல் ஒருபுறம்... போதை மற்றொருபுறம்.. .இவற்றினாலெல்லாம் வாழ்க்கையை தொலைத்தவர்கள்தான் எத்தனைபேர்.. ? இந்த இளைய சமுதாயத்தினை தன் இலக்குகளுக்கான பயணத்தினை நோக்கி செலுத்த படிக்கிற வயதிலேயே மனவளக்கலையை அவர்களுக்கு போதிக்க சொல்கிறது வேதாத்திரியம். இன்றைக்கு தமிழகமெங்கும் பள்ளிகளிலே வேதாத்திரியம் போதிக்கப்படுகிறது என்பது வேதாத்திரியத்தின் வெற்றிக்கான முதல் அறைகூவல்.. இனி நாடெங்கும் . பிறகு உலகமெங்கும்.. ... பொற்கால உலகம் மண்ணில் வாராதா என்ன..?
சீர் பொங்கும் சமுதாயத்திற்கு வேதாத்திரியமே வேர்.
இந்த சமுதாயம் எப்படி இருக்கவேண்டும்? என்ன கருத்துகளை முன்னிட்டு மனித இனம் நடக்கவேண்டும்.. ? அதற்கான உன்னதமான வழிமுறைகள் என்ன.. ? ஒரு புதுக்கவிதை சொல்லும்...
உன் நிஜங்களை
நீ
நெறிப்படுத்து
முதலில்....
வானத்தையே
வசப்படுத்தும்
கனவுகளும்
காலடியில்
பிறகு......!!
ஒவ்வொரு தனிமனிதனையும் நெறிப்படுத்துவதன்மூலம் உலக சமுதாயத்தையே சரிசெய்கிற இந்த இறைபணியைத்தான் இன்றைக்கு “உலக சமுதாய சேவா சங்கம் உலகமெங்கும் செய்துகொண்டிருக்கிறது......
பார்முழுதும் உலக சமாதான சங்கம்
பலபிரிவில் மக்களுக்கு கடமை செய்தே
ஆர்வமுடன் அரசுக்கு ஒத்துழைத்து
அனைத்துலக நிலையமாய் விளங்கி நிற்கும்
உலகமெங்கும் பல கிளைகளின் மூலம் இந்த அரும்பணியை உலக சமுதாய சங்கங்கள் ஆற்றி வருவது எல்லோரும் அறிந்ததுதானே...?
“ சமூகத்தின் ஓர் உறுப்பே உலகில் உள்ள
தனி மனிதன் என்று எவரும் உணர்ந்துகொண்டால்
சமூகத்தின் கூட்டுறவில் இன்பம் துன்பம்
சரிசமமாய் அனுபவிக்கும் சகிப்புண்டாகும் “
ஒரு தனிமனிதனின் கடமையை எத்தனை எளிதாக , இயல்பாக சொல்கிறார் .? ஒரு நல்ல சமுதாயத்தின் அங்கம் நான்.. நான் செய்கிற செயல்கள் நான் சார்ந்த சமுதாயத்தினை பாதிக்கும்.. எனவே நற்செயல்களை மட்டுமே புரிவேன் “ என்கிற கடமை எண்ணம் மட்டும் ஒவ்வொருவருக்கும் வருமானால்.. எல்லார்க்கும் எல்லாமும் ‘ என்கிற பாரதி கனவு கண்ட இலட்சிய உலகம் உருவாகாதா என்ன.. ?
உலக சமாதான திட்டம் – வேதாத்திரியத்தின் மகோன்னத கனவு..
உலக சமாதான திட்டம் என்கிற ஒரு ஒப்பற்ற , மகோன்னதமான் திட்டத்தை முன்வைக்கிறார் மகரிக்ஷி.. எல்லார்க்கும், எல்லாமும் என்பதான புரட்சிக்கவிஞனின் அற்புத சிந்தனையை தன்னுள்ளே உள்வாங்கிக் கொண்டு அந்த அற்புத உலகினை அடைவதுதான் வேதாத்திரியத்தின் மூலம் அவரின் எதிர்கால திட்டம்.... வேதாத்திரியம் உலகை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை.. !
கூடி வாழ்ந்தால் கோடி நனமை “ இது இன்று நேற்றல்ல.. ஆயிரக்கணக்கான் ஆண்டுகளாக நமது பாரதம் காட்டும் உன்னத இலட்சியம் ..
வேதாத்திரியமும் இதையே வலியுறுத்துகிறது... மனிதர்கள் நெறிப்பட அவர்களது வாழ்வியல் முறைகள் வளப்படும்.. மனித உரிமைகள் மதிக்கப்படும்.. மனித உறவுகள் வளப்படும்.. வீதிகள்தோறும் ஓற்றுமையின் உற்சாகக்குரலே ஓங்கி ஒலிக்கும்.. நாடுகளுக்கிடையே பேதங்கள் மறைய .. உலகமே ஒரு தேசம் என்கிற மகரிக்ஷியின் உன்னத கனவு பலிதமாகும்... !!!
சுவாமியின் வேதாத்திரியம் இன்னுமொரு 150 ஆண்டுகளில் பூமியில் எல்லா தேசங்களின் வாழ்க்கை சாரமாக மாறுமானால் ...இன்றைக்கு சீர்கெட்டுபோன சமுதாயம் ... ஒப்பற்ற , சீர்பெற்ற சமுதாயமாக மலரும் என்பது சர்வ நிச்சயம்..
வேதாத்ரியம் என்னும் வேள்விசெய்வோம்
தேவாதிதேவனாய் நம்மை உணர்வோம்.
பேதங்கள் அற்றதோர் மோனநிலை
வேதங்கள் போற்றுகின்ற ஞானநிலை
நம்முள் உறைகின்ற இறையருளை
நாமறியச் செய்திட்ட குருவாழ்க

