பாதை அமைப்போம்

கார்த்திகை மாதம் கடைசி வாரம் அதிகாலை நேரம் கிராம சாலையோரம் மின்கம்பியில் வரிசையாய் அமரும் பஞ்சரங்க பச்சைக் குருவிகள் இணையோடு இரைதேடும் மைனாக்கள் ரெட்டைவால் கருங்குருவிகள் வாலாட்டும் ஆட்காட்டிக் குருவிகள் புதரிடையே
சிலுசிலுக்கும் புனில்கள்
இலைக்குருவி தையல் குருவி தேன் சிட்டு தனியே அமர்ந்திருக்கும் பல வண்ணச் சிறகுடைய காடல் வட்டமிடும் வல்லூறு வெள்ளை நிற ஆலா
தூரத்தே கூட்டமாய் பறக்கும் வேட்டைக்காரக் குருவிகள் செந்நிறநீர் நிறைந்த குளக்கரையோரம் வெண்ணிறக் கொக்குகள் தொடர்ந்து விடாது
பறந்து கொண்டிருக்கும் மழைக்குருவிகள் நீர் அலையோடு அசைந்து மிதக்கும் குழிவாத்துக்கள் கால்வாயோரம் காத்திருக்கும் மீன்கொத்தியும்
குருட்டுக் கொக்கும் மஞ்சனத்தி மரக்கிளையிடையே முத்துக்குயில் வேலியோரம் கருங்குயில் எப்போதோ பார்த்த வெள்ளை ரிப்பன் வால் குருவி புறாக்கள் கிளிகள் கௌதாரிகள் ஆள் அரவம் கண்டு குட்டையோர கோரைகளிடையே மறையும் கழுத்து வெள்ளைக் கானாங்கோழி இன்னும் பெயர்தெரியாத கறுப்பு வெள்ளை தவிட்டு நிற குருவிகள் குறுக்கே பறக்கும் செம்போத்து வானிலே செம்பருந்து கரும்பருந்து ஊரை நெருங்கையில் காக்கைகளும் சிட்டுக் குருவிகளும் கண்களில் பட்டவை எவையும் என் காமிராவுக்குள் பதிவாகாது பறந்தன அருகே நின்ற
தம்பி காலடியில் காட்டினான்
கல் பெயர்ந்த கரடுமுரடு சாலையில் வழவழப்பாய் தனிப்பாதை அமைத்து ஒடு வீடு முதுகில் சுமந்து கொம்புகளை உயர்த்தி நடைபோட்டது நத்தை
எனது காமிரா உள்வாங்கியது

எழுதியவர் : மா.தாமோதரன் (25-Dec-11, 11:27 am)
சேர்த்தது : m.thamotharan
பார்வை : 329

மேலே