விலங்குகள் யார்?

நம்ப தேன்மொழிக்கு(கிளி)
வெளில வந்து
ஒரு நல்ல சீட்டா எடு ராஜா
என்று நம்மைக் கூண்டிலடைத்து
அழைக்காதிருக்கட்டும் கிளிகள்!

மனிதா மனிதா என்று
மொட்டைமாடிமேல்
வெறும் சோறை வைத்துவிட்டு
நம்மை அழைக்காதிருக்கட்டும்
அன்புக் காகங்கள்!

டீக்கடையில் பேப்பர் படித்துக் கொண்டு
நாம் கடக்கும்பொழுது, நம்மை அழைத்து,
பெருமைக்காக
பொறை வாங்கி
போடாமல் இருக்கட்டும் நாய்கள்!

தான் உழைக்காமல்
நம்மை கட்டிப் போட்டு
நாலு பேரின் முன்னிலையில்
ஆட்றா ராமா என்று நம்மை
ஆட்டுவிக்காமல் போகட்டும் குரங்குகள்!

நாம் குறுக்கே போகும்பொழுது
"அடக் கடவுளே! இது குறுக்க போச்சே!"
என்று நம்மை கடிந்து கொள்ளாமல்,
செல்லும் திசையை நோக்கி
தொடர்ந்து செல்லட்டும் பூனைகள்!

மனிதர்கள் கடக்குமிடம் ஜாக்கிரதை!!!
என்ற எச்சரிக்கையையும் மீறி
சாலையை கடக்கும்போது, நம்மில் ஓரிருவரை,
தன் வாகனத்தால்
ஏற்றிக் கொல்லாதிருக்கட்டும் மான்கள்!

நம் மீது ஏறிக் கொண்டு
தெருத் தெருவாக பயணப்பட்டு
அஞ்சுக்கும் பத்துக்கும்
நம்மை ஐந்து முதல் அறுபது வரை
பிச்சை எடுக்கவைக்காமல் இருக்கட்டும் யானைகள்!

எழுதியவர் : அக்னிபுத்ரன் (27-Dec-11, 5:30 am)
பார்வை : 268

சிறந்த கவிதைகள்

மேலே