டிவி பொட்டி
ஆயிரத்து தொள்ளயிரத்து எண்பதுகள்...
தொலைக்காட்சி கிராமங்களில் ஊடுருவ ஆரம்பித்திருந்த காலம்...
அப்போது 'மாலை நேரம் முழுதும் விளையாட்டு' என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க குழந்தைகளின் குதூகல விளையாட்டுகளுடன் புழுதி படிந்த தமிழக கிராமங்களின் தெருக்கள் கலகலப்பாய் நிறைந்திருக்கும்.
இப்போது சிமெண்ட் ரோடுகள் மிகவும் சுத்தமாய் மாலை நேரத்தில் யாருமின்றி அநாதையாய் வெறிச்சோடி கிடக்கின்றன. பிள்ளைகள் அனைத்தும் பொழுதன்னைக்கும் டிவி பொட்டியின் முன்னால்...
இன்றைய இந்த நிலைமைக்கு விதை விழுந்திருந்த காலம் அது.
அப்போது எங்கள் ஊரில் டிவி பொட்டி வாங்கியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சுப்பையா ஜோசியர் வீடு, சாலமன் டீக்கடைக்காரர் வீடு, சற்குண வாத்தியார் வீடு, ஆவனாய முதலியார்(ஆவுடை நாயக முதலியார்) வீடு, ராமசாமி வாத்தியார் வீடு
இவர்கள் எல்லாம் அப்போதைக்கு எங்கள் ஊரின் பணக்காரர்கள்...
எங்கள் குடும்பம் வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பம்...
எனக்கு அப்போது வயது ஆறு அல்லது ஏழு இருக்கும். எங்கள் குடும்பம் நெசவு தொழிலை நம்பி வாழும் குடும்பம். கொஞ்சம் பெரிய குடும்பம். இறைவனின் வேலையே இது தான். வறுமையான குடும்பத்திற்கு தான் நிறைய குழந்தைகளை குடுப்பான். நாங்கள் மாடு ஒன்றும் வளர்த்து வந்தோம் கைசெலவு வருமானத்திற்காக. கறந்த பாலை அப்படியே சுத்தமாக தண்ணீர் கலக்காமல் விற்போம். அதனால் எங்கள் ஊர் பணக்காரர்கள் எல்லோரும் எங்களின் வாடிக்கையாளர்கள்.
அன்று ராமசாமி வாத்தியார் வீட்டிற்கு டிவி பொட்டி வந்திருந்தது. வந்த முதல் நாள் ராமசாமி வாத்தியார் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆண்டென்னா மாட்டும் போது வியப்புடன் பார்த்தன சிறுவர்கள் கூட்டம். வீட்டுக்காரர்களின் முகத்தில் டிவி வாங்கி விட்ட பெருமிதம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. என்னுடைய மனத்திலும் இனம் புரியாத சந்தோசம். பக்கத்துக்கு வீட்டில் டிவி வந்துவிட்ட சந்தோசம். நமக்கு இனி கவலை இல்லை என்கின்ற இறுமாப்பு. இவை அனைத்தும் ஒரு சில நாட்களே நீடித்தன. வாங்கிய புதிதில் எல்லோரும் டிவி பார்க்க அனுமதிக்கபட்டார்கள். கொஞ்ச நாட்களில் பக்கத்துக்கு வீட்டுகாரர்களும் அவர்களின் சொந்தகாரர்கள் மட்டுமே வீட்டுக்கு உள்ளே சென்று டிவி பார்க்க அனுமதிக்கப்பட்டனர். நாங்களும் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் தான். ஆனால் நாங்கள் பணக்காரர்கள் இல்லையே.
அதனால் எனக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. வாசலின் வெளியே நின்று பார்க்க அனுமதிக்கப்பட்டோம்.
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை...
டிவியில் தமிழ் படம் போடும் நாள். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கு ஜெய்ஷங்கர் படம் போட்டார்கள். நான் வழக்கம் போல வாயிலின் வெளியே நின்று படம் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ராமசாமி வாத்தியார் வீட்டுக்கு மாடுகளுக்கு கழனி தண்ணீர் சேகரிக்க வந்த என் அம்மா படத்தை வாயிலின் வெளியே நின்று பார்த்தபடி அப்படியே நின்று விட்டார். எங்கள் ஊரில் 6 மணிக்கு கரண்ட் போய் விட்டு 1 நிமிடத்தில் திரும்ப வரும். அப்போது கரண்ட் போய் விட்டது. உடனே வெளியில் வந்த வீட்டுக்கார அம்மா 'எல்லாரும் நம்ம உயிரை வாங்குரதுக்குனே வந்துடுறாங்க' என்றார் உரத்த குரலில் எங்கள் அம்மாவையும் பார்த்தபடி. சட்டென கோபப்பட்ட எங்கள் அம்மா உடனே சென்று விட்டார். எனக்கு தன்மானம் பற்றி தெரியாத வயது அது. படம் பார்த்து முடித்து விட்டு தான் வீடு சென்றேன்.
அதற்கப்புறம் வெளியில் நின்று பார்ப்பது கூட வெகுநாள் நீடிக்கவில்லை. சிறிது நாட்களில் கதவும் பூட்டப்பட்டது. டிவி பார்ப்பதற்கு வேறு இடம் தேட வேண்டியதாயிற்று.
அடுத்ததாக நான் படையெடுத்தது ஜோசியர் சுப்பையா வீட்டுக்கு. அவர் எங்கள் வீட்டில் தான் பால் வாங்குவார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் நானே பால் கொண்டு போய் குடுக்குற சாக்கில் படம் பார்க்க உக்காந்து விடுவேன். அப்படியே சில நாட்கள் கழிந்தன. அங்கும் அனுமதி மறுக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் பால் குடுக்க போன என்னை வாசலோடு துரத்தி விட்டார்கள். அத்துடன் முடிந்தது ஜோசியர் வீடு.
அடுத்ததாக, எனது பார்வை சாலமன் டீக்கடைக்காரர் வீடு மேல் விழுந்தது. அவர்கள் வீட்டில் சென்று டிவி பார்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அவர்கள் வீட்டில் பிள்ளைகள் அதிகம். அவர்கள் அப்பா, அம்மா விட்டால் கூட பிள்ளைகள் எங்களை விரட்டி அடிப்பார்கள். அவர்கள் வீட்டின் கேட் முன்னே தவம் கிடக்க வேண்டும். முதலில் விரட்டி அடிப்பவர்கள் அப்புறம் டைம் ஆக ஆக வாயிலின் வெளியே நின்று டிவி பார்க்க அனுமதிப்பார்கள். அதற்குள் முக்கால் படம் முடிந்திருக்கும். கிடைக்கும் வரை லாபம் என்று மிச்ச படத்தை பார்த்து வருவோம். 'பொறுத்தார் பூமி ஆழ்வார்' என்று சும்மாவா சொன்னார்கள்.
வெளியிலே காத்திருக்கும் போது கூட எனது கௌரவம் குறைவது இல்லை. காத்திருக்கும் சக நண்பர்களிடம் 'எங்கள் ஐயா இப்போது நினைத்தால் கூட டிவி வங்கி விடுவார். ஆனால், எங்கள் படிப்பு கெட்டு போய் விடுமேனு தான் பாக்குறார்' னு பீத்தி கொள்வோம்.
இப்படியாக வாழ்க்கை செல்லும் போது தான் சற்குண வாத்தியார் மற்றும் ஆவனாய முதலியார் வீட்டில் டிவி வந்தது. அது பல பிள்ளைகளுக்கு விடிவு காலம் என்றே சொல்லலாம். அவர்கள் மற்ற வீடுகளை போல் அவர்கள் பார்ப்பதற்காக டிவி வாங்கவில்லை. மற்றவர்களுக்காக வாங்கினார்கள். நீங்கள் நினைக்குற மாதிரி அவர்கள் அவ்வளவு பரோபகாரிகள் இல்லை,வியாபார நோக்கில் டிவி வாங்கினார்கள். ஆமாம், படம் பார்க்க 30 பைசா, நாடகம் பார்க்க 10 பைசா வசூல் செய்தார்கள். பிள்ளைகள் பாக்கெட் மணியை கொண்டு நிம்மதியாக டிவி பார்த்தார்கள். அதிலும் எனக்கு விடிவு காலம் பிறக்கவில்லை. எனக்கு பாக்கெட் மணி 10 பைசா தான் ஒரு நாளைக்கு. அதையும் கொண்டு டிவி பார்த்தால் தின்பண்டங்கள் வாங்கி தின்பது எப்படி?
இப்படியாக வாழ்க்கை போராட்டத்தை நடத்தும் போது தான் தேவராசு பெரியப்பா வீட்டில் டிவி வாங்கினார்கள். ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு வேறு விஷயமாக சென்ற போது 'உனக்கு இனிமேல் கவலை இல்லை. எப்போ வேணும்னாலும் வந்து பெரியம்மா வீட்டில் டிவி பார்க்கலாம்' என்றார் பெரியம்மா. நானும் மிக்க மகிழ்வுடன் சென்றேன். ஞாயிற்றுகிழமை மாலை நேரம் வந்தது. கம்பீரமாக நடந்து சென்றேன் பெரியம்மா வீட்டுக்கு டிவி பார்க்க. ஆனால்,
அவர்கள் வீட்டு கதவுகளும் பூட்டப்பட்டு இருந்தன. வெளியில் நிறைய பிள்ளைகள் நின்று கொண்டிருந்தனர். நாம வந்தது தெரிந்தால் கண்டிப்பாக பெரியம்மா நம்மை உள்ளே விடுவார்கள் என்ற நம்பிகையுடன் அவர்கள் வீட்டில் யாராவது ஒருவர் வெளியில் வர காத்திருந்தேன். காத்திருந்தது வீண் போகவில்லை. பெரியம்மா வெளியில் வந்தார். வெளியில் நின்ற பிள்ளைகளை பெரியம்மா. 'என் இப்படி வந்து எங்க உயிரை வாங்குறீங்க' என்று கத்தினார். பெரியம்மா நம்மை பார்க்கவில்லையோ என்று முன்னால் சென்று என் முகத்தை காட்டினேன் ஆவலுடன். 'உன்னையும் சேத்துதாண்டா சொல்றேன் கழுத. காதுல கேக்கல?'. அப்போது மனதில் உறுதி எடுத்து கொண்டேன். இவங்கள விட பெரிய டிவி வாங்கி இவங்கள பாக்க விட கூடாது. இவங்க வந்து நம்மகிட்ட கெஞ்ச வைக்கணும்னு வெளையாட்டு வைராக்கியம் செய்து கொண்டேன் மனதிற்குள்.
இவ்வாறாக, டிவி பார்க்கும் போராட்டம் எங்கள் பக்கத்துக்கு வீட்டில் கண்டக்டர் வீட்டில் டிவி வாங்கினதும் தீர்ந்தது. அப்போது தான் கேபிள் டிவி கோலோச்ச ஆரம்பித்திருந்தது.
இருபத்தோராம் நூற்றாண்டு...
2012 ...
இன்று...
எனக்கு வயது முப்பது பக்கம். நான் ஒரு மென்பொருள் துறை வல்லுநர். கொஞ்சம் வசதியான வாழ்க்கை. டிவி வாங்குகிற அளவுக்கு வசதி வந்து விட்டது. 21 இன்ச் டிவி வாங்கியாகி விட்டது. கையில் இருந்த ரிமோட் நல்ல சேனல்களை தேடி கொண்டிருந்தது. சன் மியூசிக் - புது பட பாட்டு. KTV உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று ஒரு புது படம். எதிலும் மனம் லயிக்கவில்லை. அன்று கஷ்டப்பட்டு பார்த்த ஒளியும் ஒலியும்-கு ஈடாகுமா இதெல்லாம்?