பழுக்காத இலையொன்று!
தேடியெடுத்த வாழ்க்கை
தோற்றுவிட்டதாய் எண்ணி
வழக்கில் விட்டபோது
வாழ்ந்த வாழ்க்கையின்
வகைகளை சொல்ல வழியின்றி
வார்த்தைகள் சிறைப்பட்டுக்கிடந்தன
வாய்தாக்கள் வாங்காமல்
வழக்கு முடிவடைந்ததும்
வழக்கத்திற்க்கு மாறாக
வாக்குவாதமேயில்லாமல் நான்கு
விழிகளும் விசாரித்துக்கொண்டன
பிரியாவிடைபெறும் சமயம்
பொசுக்கென வந்தபோது -இதுவரை
சிறையிருந்ததாய் சிணுங்கிய இதயம் -ஏனோ
சிணுங்கியழத் தொடங்கின
சிதறிய வாழ்வையெண்ணி
பழுக்காத இலையொன்று
பட்டென எழுந்த காற்றில்
படபடத்து கீழே விழுந்து
பரிதவித்து போய்
பட்டமரநிழலில் ஒதுங்கியதுபோல்
பிரியம் அவநம்பிக்கையானபோது
பாசம் பொய்தபோது
நேசம் வேசம் கலைத்தபோது
நிம்மதி நெடுந்தூரம் போனபோது
நிறைவு நெஞ்சைவிட்டு அகன்றபோது
அவமானங்களை சுமந்தபடி
அடிநெஞ்சு கனத்தபடி
அச்சத்தோடு வாழ்வது சரியல்லவென்று
அச்சடித்த காகிதத்தின் அடியில்
அச்சுப் பிசகாமல் அப்படியே
விவாகத்தின்போது
அன்பினாலிட்ட கையெழுத்தை
விவாகரத்தின்போதும்
அன்பைவெருதிட்டது
விரல்கள் விரும்பாமலே
விரக்தியான மனதோடு...