மனசு..! -- சிறுகதை - பொள்ளாச்சி அபி
ரிலீசாகி சிலவாரங்கள் கழிந்த,புதிய திரைப்படம் ஒன்று நன்றாக இருக்கிறது என்றும்,நாளை மாற்றப்போகிறார்கள் என்றும் கேள்விப்பட்டு.திரையரங்கிற்கு சென்றேன்.
நான் உள்ளே நுழைந்தபோது,அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் அமர்ந்திருந்தனர்.
மின்விசிறியின் காற்றோட்டத்திற்கு வாகாய் இருந்த ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன்.எனக்கு நேராக, பின்வரிசையில் ஒரு தம்பதி,அமர்ந்திருந்தனர்.இருவருக்கும் ஐம்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கலாம். அவர்களிருவரும் மிகநெருக்கமாக தலை குனிந்தபடி,யாரையும் லட்சியப்படுத்தாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
லேசான இருட்டில் அவர்கள், மற்றவர்களை விட்டு ஒதுங்கி அமர்ந்திருந்ததும் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ‘இந்த வயதில் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா பார்க்க வந்திருக்குதுக..பாரேன்.’எனக்கு தோன்றியது போலவே,அவர்களைக் கடந்த,பலருடைய பார்வையிலும் அந்த விமர்சனம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
இடத்தைவிட்டு மாற்றி அமர்ந்து கொள்ளலாமா..? யோசித்தபடியே,சுற்றும் முற்றும் பார்த்தேன்.ஊஹும் ..எனக்கு முன்பே பலரும் மின்விசிறிக்காக ஆங்காங்கே சீட்டுக்களை ஆக்ரமித்திருந்தனர்.
“சரி..போகட்டும்..நம்ம பாட்டுக்கு சினிமா பார்த்துட்டுப் போகப்போறோம்.மத்தவங்க எப்படியிருந்தா நமக்கென்ன.?” எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டு
அங்கேயே அமர்ந்து கொண்டேன்.
சில நிமிடங்களில்,விளக்குகள் அணைக்கப்பட்டு,படம் தொடங்கிவிட்டது.ஆனால் பின்பக்கமிருந்து எனக்கு புதுவிதமான தொல்லையொன்று ஏற்பட்டது.
ஏய்..இங்க பாரு.இப்பத்தான் பேரெல்லாம் போடறான்.விஜய் ஸ்டைலா, காரைவிட்டு இறங்குறாரு.அவர் போட்டிருக்கிற,புளூ டிரெஸ் சூப்பரா இருக்கு..” என்று ஒவ்வொரு சீனிலும் நடைபெறுவதை கணவன்,அந்தப்பெண்ணுக்கு கமெண்ட்ரியாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு செம கடுப்பாகிவிட்டது.இரண்டு,மூன்று முறை திரும்பிப் பாhத்து,உஷ் என்றேன்.ஆனால் அவர்கள் சிலவிநாடிகள் மட்டுமே மௌனமாயிருந்துவிட்டு, பின்பு எனது எச்சரிக்கையை,கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
‘தூ..கருமம்..என்ன ஜென்மங்கடா இது..,இண்டர்வெல்லில் ஏதாவதொரு சீட்டுக்கு மாறிவிடவேண்டும்’ என்று சபதம் செய்துகொண்டேன். ‘அது வரை இந்தத் தொல்லையைப் பொறுத்துத்தானாக வேண்டும்.வேறு வழி.?’
அப்பாடா ஒருவழியாக இடைவேளையும் வந்தது.நான் எழும் முன்பாகவே, அந்த நபர் எழுந்துகொண்டு வெளியேறியிருப்பது தெரிந்தது.‘மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பதற்கு என்ன அவசரம் பார்.அதிலிருக்கும் அக்கறை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டாமா..?’ எண்ணமிட்டபடியே,வெளியேறினேன்.
இரண்டு கப் காபிகளுடன் அந்த மனிதர் எதிரே வந்து கொண்டிருந்தார்.ஒரு விநாடி என்னைப்பார்த்து தயங்கி நின்றதுபோலத் தெரிந்தது.அவரைக் கடக்க முயற்சிக்கையில், “தம்பி ஒருநிமிஷம் நில்லுங்க..,” என்னைப்பார்த்தா அவர் கூப்பிடுகிறார்.? சந்தேகத்துடன் நான் எனக்குப் பின்.யாரையாவது கூப்பிடுகிறாரோ என்று திரும்பிப்பார்த்தேன், “தம்பி உங்களைத்தான் கூப்பிட்டேன்.”என்று எனக்கு மிகஅருகே வந்துவிட்டார். ‘என்ன.?’என்பதுபோல அவரைப் பார்க்க,எனது கண்ணில் மின்னிய எரிச்சல் வெளிப்பட்டிருக்க வேண்டும். “தம்பி நீங்க படம்ஓடும்போது,சிலதடவை உஷ்..உஷ்.னு சொன்னீங்க..எங்களைத்தான் சொல்றீங்க..ன்னு நல்லாவே தெரிஞ்சாலும்,என்னாலே,அவளுக்கு சொல்றதை நிறுத்தமுடியாது..என்னடா இவன் இப்படி பேசறானேன்னு நினைக்காதீங்க..என்மனைவிக்கு இரண்டு கண்ணுமே தெரியாது.அதான்..!.அவர் குரல் லேசாகக் கலங்கியிருந்தது “உங்களுக்கு அது இடைஞ்சலா இருந்தா தயவுசெய்து என்னை மன்னிச்சு,வேற சீட்டுலே போய் உட்கார்ந்துக்குங்க.!”
எனக்கு திக் கென்று இருந்தது.அவருக்கு பதிலாக எதைச்சொல்வது என்றே,சிலவிநாடிகள் எனக்குப் புரியவில்லை. “பரவாயில்லைங்க.. ஒண்ணும் பிரச்சினையில்லே..”என்று அவசரமாக சொல்லிவிட்டு,அங்கிருந்து நகர்ந்தேன்.
குடும்பம் நடத்தற ஆம்பளைங்க,நல்லா இருக்கற பொம்பளையவே ஆயிரம் குற்றம் சொல்லி,அவமானப்படுத்தறதும்,அதிகாரம் செய்யறதுமா இருக்கிற இந்தக் காலத்திலே,இப்படி ஒரு ஜோடியா..? எனக்கு வியப்பு அதிகமாகி,அவர்மேல் மரியாதை வந்துவிட்டது.
இப்போது,இடைவேளை முடிந்து படம் தொடங்கியவுடன்,அவரும்,மனைவிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஆனால்,இவர் இன்னும் அழகாக இதை விளக்கிச் சொல்லியிருக்கலாமே..!’என்று என் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.