நல்ல தோர் வீணை செய்து.....

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்க,
பரபரப்போடு ஒரு தம்பதி,
பறந்து கொண்டிருகின்றனர்,
அலுவலகத்துக்கு.

குடும்பச் சுமை குறைக்கின்றி,
செலவுகளை கொஞ்சம் சுமூகமாக்க,
பாடுபடுகின்றனர்.

இவர்கள் காலை ஏழு மணிக்கு,
பிரிகின்றனர்.
சேர்வதோ இரவு எட்டு மணிக்குத் தான்.
இடை இடையே செல்போனில் மட்டும்,
விட்ட காதலை கவ்விக் கொள்கின்றனர்.

இந்த தண்டனையை நாள் தோறும் அனுபவிக்க,
கம்பெனி தருவது கைநிறைய சம்பளம்.

இந்த தார்மீக தம்பதிக்கு,
பத்து மாதமே ஆன ஒரு
பிஞ்சு வெள்ளை முயல்.

இந்த பிஞ்சை பதனமாக
பார்த்துக்கொள்ள, ஒரு
பழுத்த பணிப்பெண் செல்லம்மா.

காலை 6.30 மணிக்கு
இந்த வெள்ளை முயல்,
செல்லமாளின் அரவணைப்பில்.

கோழி கூட அடைகாப்பதில்
குறை இருக்கும்.
இவளின் அரவணைப்பை
அளவிடுவது கடினம்.

இன்றும் எப்போதும்போல்,
தம்பதியினர் முத்த மழை இட்டு,
செல்லம்மாளிடம் தாரை வார்க்க,
குழந்தையோ பிரிய மனமின்றி,
அழுதுகொண்டே பிரிந்தது.

மனைவியின் அலுவலகத்தில் மட்டும்
ஏதோ மின் துண்டிப்பு.
சரியாக மூணு மணி நேரம் ஆகும்
என்ற அபாய அறிவிப்பு வேறு.

செய்வதறியாமல் கணவனை
செல்போனில் துணைக்கு இழுத்தாள்.

அலுவலகம் வந்தது முதல்,
தன் முயலின் முகம் வந்து வந்து போவதை,
கணவனிடம் வடித்தாள்.

அவனோ வேலை இல்லையென்றால்,
மனசு இப்படி பரிதவிப்பது இயற்கை என்று
பதிலுரைத்தான்.

மேலும் இரவு வேளையில் தங்கள் முயல்,
ஒரு முறை கூட விழித்து எழாமல்,
அடித்து போட்டதுபோல் அசதியில்,
தூங்குவதையும் சுட்டினாள்.

கணவனோ வார இறுதியில்,
மருத்துவர் கண்டு வர உறுதியளித்து,
போனை துண்டித்தான்.

ஏசி இல்லாத அலுவலகம்,
இவளுக்கு தலைவலி தந்தது.

வீடு செல்லத் திட்டமிட்டு,
வண்டி அடைந்தாள்,
ஒரு சக்கரமோ தட்டை.

புலம்பிகொண்டே பஸ்சில் ஏறினாள்.
வேளச்சேரி வந்தடைந்து,
மறு பஸ் மாற நிற்கையில்,
நான்கைந்து பிச்சைக் காரிகள்
கையில் பச்சை குழந்தையோடு.

பார்கவே பரிதாபமாய் பட்டது.
விதியை நொந்து கொண்டே
தள்ளி நின்றாள்.

திடீர் என்று தன் குழந்தை
ஞாபகம் வர, வீட்டிற்கு தொடர்பு
கொண்டாள்.

இனிமை குறையாமல்,
இனிக்க, இனிக்க பேசிய
செல்லம்மா.
தன் குழந்தை தூங்குவதையும் உரைத்தாள்,

இவளையே உற்று நோக்கியபடி
ஒரு பிச்சைக்காரி வாஞ்சையோடு
நெருங்கினாள்.
இவளோ அவசரமாக போனை
துண்டித்து, பிச்சையிட தயாரானாள்.

வந்த பிச்சைக்காரி,
அம்மா! தாயே!
பச்சைக் குழந்தை,
சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு என்றாள்.

கையிலோ கிழிந்த, அழுக்கேறியே துணியணிந்த,
வெய்யிலில் வாடிப்போன,
பசியின் பிடியில் பொசுங்கிப்போன,
விக்கி, விக்கி,
சத்தமிடக்கூட சக்தியின்றி,
அழுது கொண்டிருந்த குழந்தையின்,
கரம் பற்றி,
பத்து ரூபாய் நோட்டை சொருக,
விழித்துப் பார்த்தது குழந்தை.
இவளுக்கோ வியர்த்துப் போனது!!

இவள் பிச்சையிட்டதோ,
தன்னுடைய பிஞ்சு
வெள்ளை முயலுக்கு!!!!!!!!!!!!!!!!!

நல்ல தோர் வீணை செய்து,
அதை நலம் கெட புழுதியில்
எறிவதுண்டோ???

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (19-Jan-12, 6:19 am)
பார்வை : 555

மேலே