நட்புக்கும் ரோஜா கொடுங்கள்
முறைத்து பார்த்த என்னை
நீ
சிரித்து பார்த்தபோதே
நாம் நண்பர்களானோம் !!!
"மச்சான்னு நீ கூப்பிட்டாலும்
உனக்கு
சகோதரி இல்லையே " என்றாய்..
நானோ
"நீ யாரை கட்டினாலும்
எனக்கு தங்கைதானே " என்றேன்
"அப்படியென்றால்
இரண்டாய்
கட்டி கொள்கிறேன்
உனக்கும்
இரண்டு தங்கைகள் கிடைக்குமே" என்றாய்
நம்
அர்த்தராத்திரியின்
அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு
இடையே
அதிகமாய் வளர்ந்தது நிலா!
உயர்ந்த சுவர்கள் எல்லாம்
நாம் அமர்ந்த பிறகுதான்
குட்டி சுவராய் போனதாக
ஊர் உரைத்தது
நமக்கோ உரைக்கவே இல்லை....
காசில்லா காலத்திலும்
ஒன்றில் பாதி தேநீருக்காக
இரண்டு கோப்பைகள் நமக்கு தேவைப்பட்டதில்லை ......
வரப்பை வெட்டியதற்காக
தலையை வெட்டிக்கொள்ளும்
உறவுகளுக்கு மத்தியில்
மாறி மாறி வெட்டி கொள்கிறோம்
தலைமுடியை மட்டும் !!!
நமக்குள் நட்பை
என்றுமே நாம்
அடைத்து வைத்ததில்லை
நட்புக்குள்ளே
நம்மை அடைத்து கொள்கிறோம் ...!
குறிஞ்சிப்பூவைப் போல்
எப்போதாவது
பூக்கும் பூ அல்ல
ரோஜாவை போல
எப்போதும் பூக்கும் பூ
ஆணின் நட்பு ......
இனி
நட்புக்கும் ரோஜா கொடுங்கள் ....!
~~~~~~~~~~~~~~~~நட்புடன் நலிகா~~~~~~~~~~~~~~~~~