நீ, நான் & நகரப் பேருந்து
மூச்சிரைக்க நீ ஓடி வந்தாய்
சில நொடிகள் இடைவெளியில்
ஒரு சிலையை தவறவிட்டது
நகரப் பேருந்து...
உன்னையும் என்னையும்
சுமந்துகொண்டு செல்லும்போது
நகரும் காதல் உலகமாக
உணர்கிறது நகரப் பேருந்து...
உன்னை மறுமுறை
பார்ப்பதற்காகவே
வைக்கிறார் கண்டக்டர்
சில்லறை பாக்கி!
ரெண்டு டிவிஎஸ் என்று
உனக்கும் உன் தோழிக்கும்
நீ டிக்கெட் எடுக்கும்போதெல்லாம்
ஏக்கம் வருகின்றது
எப்போது அந்த இரண்டாம் டிக்கெட்
எனக்கு என்று!
பேருந்து நிறுத்தத்தில்
நீ நிற்கும்போது
வெறுமனே நின்று
செல்கின்றன பேருந்துகள்...
யாரும் ஏறுவதில்லை
நீ செல்லும்வரை!!!
நீ அன்று பேருந்தினுள்
தவறவிட்ட
ஒற்றை நாணயம்
திருப்பி தருகிறேன்
நீ உன் மனதை என்னிடம்
தவறவிடும் அந்நாளில்...